09.07.2021 அன்று புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் ஊரின் சன்னிதித் தெருவில் வசிக்கும் மக்கள் பல ஆண்டுகள் வளர்த்திருந்த வேம்பு, மலைவேம்பு, புங்கன் என 14 மரங்கள் அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவரால் ஜே.சி.பி மூலம் வேரோடு சாய்க்கப்பட்டு முழுமையாக வெட்டப்பட்டு அவை அந்த ஊராட்சி மன்றத் தலைவருக்குச் சொந்தமான செங்கல் காலவாயில் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டன. பொது இடத்தில் இருக்கும் எந்த ஒரு மரமும் அரசாங்கத்தின் சொத்தாகும். பொது இடத்தில் இருக்கும் எந்த ஒரு மரத்தையும் வெட்ட வேண்டும் எனில் வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். வருவாய் கோட்டாட்சியர் அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து மரம் இருக்கும் இடத்தை நேரடியாகப் பார்வையிட்டு அந்த மரம் வெட்டப்பட வேண்டும் என்பதற்கு தகுந்த காரணம் இருப்பதாக நினைத்தால் அந்த ம்ரத்தை வெட்ட உத்தரவு தருவார். அந்த உத்தரவில் அந்த மரம் அரசாங்கத்தால் ஏலம் விடப்பட்டு அந்த ஏலத்தொகை அரசு கணக்கில் சேர்ந்த பின்னரே அந்த மரத்தை வெட்ட முடியும் என்ற நிபந்தனையும் இருக்கும். எவரேனும் பொது இடத்தில் இருக்கும் மரத்தை வெட்டினால் வெட்டிய நபரிடம் வெட்டப்பட்ட மரத்தின் மதிப்பு மேலும் அந்த மதிப்பில் 1 மடங்கிலிருந்து 20 மடங்கு வரை அபராதம் விதிக்கப்பட்டு மரத்தை வெட்டிய நபர் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும் என்பது விதி. சாதாரண குடிமக்களுக்கே இந்த நெறி எனில் அரசுப் பொறுப்பில் இருக்கும் ஊராட்சி மன்றத் தலைவருக்கு இந்த விதி தீவிரமாகப் பொருந்தும்.
பத்து ஆண்டுகளுக்கு மேல் அகவை கொண்ட அந்த மரங்கள் குரூரமாக வெட்டப்பட்டதைக் கண்ட விஷ்ணு ஆலய சன்னிதித் தெருவாசிகளான குழந்தைகளும் பெண்களும் ஆண்களும் மனம் வெதும்பி கலங்கி நின்றார்கள். தங்கள் பிள்ளைகளைப் போல் போற்றி வளர்த்த மரங்கள் சில நிமிடங்களில் இல்லாமல் ஆக்கப்பட்டதைக் கண்டு அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்தனர். விஷயம் கேள்விப்பட்டு அந்த இடத்தைக் காண நேரில் சென்றேன்.
மக்களிடம் பொது இடத்தில் இருக்கும் மரங்கள் வெட்டப்படாமல் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்றால் மட்டுமே மரங்களை வெட்ட முடியும் என்ற விதியை உருவாக்கியுள்ளது. இங்கே மிகத் தீவிரமான விதிமீறல் நிகழ்ந்துள்ளது. இதனை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினேன். மக்கள் தயங்கினார்கள். மக்கள் அச்சப்பட்டார்கள். நிகழ்ந்ததைத் தெரிவிக்க வேண்டியது குடிமக்களாக நமது கடமை. அதனை செய்யாமல் இருந்தால் நாம் கடமை தவறியவர்களாக ஆவோம். எனவே மாவட்ட ஆட்சியருக்கு நிகழ்ந்த விஷயங்களைத் தெரிவித்து ஒரு மனு அனுப்புவோம் என்று சொன்னேன். மக்கள் அதனை ஏற்றார்கள்.
அதற்கு முன், மரங்கள் வெட்டப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை சேட்டிலைட் செய்தி சேனலுக்கு அளித்து அந்த செய்தி மரங்கள் வெட்டப்பட்ட வீடியோ காட்சியுடன் வெளியானது. வெளிநாடுகளில் வசிக்கும் அந்த ஊர்வாசிகள் வரை அந்த செய்தி சென்று சேர்ந்தது. உள்ளூர்க்காரர்கள், அண்டை கிராமத்துக் காரர்கள் என அனைவருக்கும் ஒரே நேரத்தில் அந்த செய்தி சென்று சேர்ந்தது. வெளியூரிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் உள்ளூர்க்காரர்களுக்கு ஃபோன் செய்து 14 மரங்கள் வெட்டப்பட்டது குறித்து விசாரிக்கத் தொடங்கினார்கள். ஊர் முழுக்க இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரிடம் மனுநீதி நாள் அன்று புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் சன்னிதித் தெருவாசிகளுடன் சென்று நேரடியாக மனு அளிக்கப்பட்டது. அந்த மனு வருவாய் கோட்டாட்சியருக்கு அறிக்கை கேட்டு அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையின் நகலை மனுதாரர்களுக்கும் அளிக்க மாவட்ட ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டிருந்தார்.
மரங்கள் வெட்டப்பட்ட அதே ஜூலை மாதத்தில் ஜூலை 30 அன்று புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் ஊரின் சன்னிதித் தெருவில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. அவை இப்போது பத்து அடி உயரத்துக்கும் மேலாக வளர்ந்த விருட்சங்களாக உயர்ந்து நிற்கின்றன.
மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் வருவாய் கோட்டாட்சியரின் அறிக்கையின் நகல் கிடைக்கப் பெறாததால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் கடிதம் மேல் எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை என்ன என்ற விபரத்தைக் கேட்டோம். வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு ரூ.950 என நிர்ணயிக்கப்பட்டு அதன் மேல் ஒரு மடங்கு அபராதம் ரூ950ம் ஜி.எஸ்.டி தொகை ரூ.252ம் சேர்த்து ரூ.2052 ஊராட்சி மன்றத் தலைவரால் செலுத்தப்பட வேண்டும் என வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்ற விபரம் கிடைக்கப் பெற்றது.
வட்டாட்சியருக்கு கிராம நிர்வாக அலுவலரும் வருவாய் ஆய்வாளரும் அறிக்கை அளித்த தேதி 13.07.2021. வட்டாட்சியர் உத்தரவின் தேதி 11.07.2021. வட்டாட்சியர் அந்த உத்தரவில் 13.07.2021 அன்று வருவாய் ஆய்வாளரால் தனக்கு அளிக்கப்பட்ட அறிக்கையின் படி மரங்களை வெட்டிய ஊராட்சி மன்றத் தலைவருக்கு ரூ.2052 பணம் செலுத்த உத்தரவிடப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
வருவாய் ஆய்வாளர் அறிக்கை 13.07.2021 அன்று அளிக்கப்பட்டிருக்கையில் அந்த அறிக்கையின் தொடர் நடவடிக்கையான வட்டாட்சியர் உத்தரவு 13.07.2021 அன்றோ அதற்குப் பிந்தைய தினத்திலோ பிறப்பிக்கப்பட முடியுமே தவிர எவ்விதம் அதற்கு முன் தேதியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க முடியும்? வட்டாட்சியரின் இந்த செயல் 14 மரங்களை வெட்டிய ஊராட்சி மன்றத் தலைவரை காக்கும் விதத்தில் அமைந்திருப்பது கண்கூடான விஷயமாகிறது. வெட்டப்பட்ட மரங்கள் பல ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்டவை. அவற்றின் மதிப்பு ரூ.950 என மிகக் குறைவாக மதிப்பிடப்பட்டிருப்பதும் 14 மரங்களை வெட்டிய ஊராட்சி மன்றத் தலைவரை சட்டத்தின் பிடியிலிருந்து காக்க மேற்கொண்ட நடவடிக்கை என்பதும் அதற்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் , வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பதும் இதன் மூலம் புலனாகிறது என்பதால் இது குறித்து மாவட்ட ஆட்சியர் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் 14 மரங்களை வெட்டியவருக்கு உடந்தையாக இருந்த அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பப்பட்டது.
14 மரங்கள் வெட்டப்பட்ட விஷயத்தின் கோப்பினை முழுமையாக அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரினோம். அந்த தகவல்கள் தகவல் உரிமைச் சட்டத்தின் காலக்கெடுவான 30 நாட்களுக்குள் அளிக்கப்படாமல் பல நாட்கள் கடந்தன. தகவல் உரிமை பெறும் சட்டத்தின் படி காலக்கெடுவுக்குப் பின்னும் விபரங்கள் அளிக்கப்படவில்லை என்று முதல் மேல்முறையீடு செய்தோம். முதல் மேல்முறையீடுக்கு பதில் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த கோப்பின் முக்கியமான குறிப்பிட்ட சில பகுதிகள் அளிக்கப்படாமல் வேறு சில பகுதிகளே தரப்பட்டன. முழுமையான தகவல்கள் முழுமையான கோப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கோரி மாநில தகவல் ஆணையத்துக்கு இரண்டாம் மேல் முறையீடு அனுப்பப்பட்டது. மாநில தகவல் ஆணையத்தால் இந்த இரண்டாம் மேல்முறையீடு ஒரு வழக்காக பதிவு செய்யப்பட்டு வழக்கு எண் அளிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன் , 14 மரங்களை வெட்டிய ஊராட்சி மன்றத் தலைவர் புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் அதே தெருவில் இருக்கும் ஸ்ரீ முனீஸ்வரன் கோவிலில் இருக்கும் 15 ஆண்டு அகவை கொண்ட வேப்பமரம் ஒன்றை வெட்டவும் அந்த கோவிலை இடிக்கவும் சில முயற்சிகளை மேற்கொண்டார். வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கவனத்துக்கு விஷயம் கொண்டு செல்லப்பட்டு ஆலயமும் 15 ஆண்டு அகவை கொண்ட வேப்பமரமும் காக்கப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பில் இருந்த பல அதிகாரிகள் இப்போது அந்த பொறுப்பில் இல்லை. ஒருவர் ஓய்வு பெற்றிருக்கிறார். பலர் மாற்றலாகி வெளியூர் சென்று விட்டனர். எனினும் அந்த முழுமையான கோப்பு என்னும் விஷயம் அவர்களுக்கு பெரும் அசௌகர்யமாகவே இருக்கிறது. தகவல் ஆணையத்திடம் இந்த விஷயம் சென்றிருப்பதால் அந்த கோப்பினை மூடுவது எளிதான விஷயம் இல்லை. தகவல் ஆணையத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது கோப்பு அளிக்கப்பட்டே ஆக வேண்டும். அவ்வாறு அளிக்கப்பட்ட கோப்பின் அடிப்படையில் நம்மால் துறை ரீதியான விசாரணை கோர முடியும். அந்த கோப்பின் அடிப்படையில் நீதிமன்றத்தையும் நாட முடியும்.
சில வாரங்களுக்கு முன்னால், 14 மரங்கள் வெட்டப்பட்ட புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் தெருவின் பக்கத்துத் தெருவைச் சேர்ந்தவர்கள் தங்கள் தெருவில் நிழல் தரும் மரங்களும் இறைப்பூசனைக்கு உதவும் பூமரங்களும் என 100 மரக்கன்றுகளை தங்கள் தெருவில் நட விரும்புவதாக தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஜனநாயகக் குடிகளாக நாம் அரசாங்கத்தின் மீதும் அரசாங்க அமைப்பின் மீதும் நம்பிக்கை வைக்கிறோம். அதனாலேயே விதிகளுக்கு உட்பட்ட விதத்தில் நாம் இந்த விஷயத்தை அணுகுகிறோம். செயல்படுகிறோம். நம் கடமையை நம்மால் முடிந்த அளவு செய்திருக்கிறோம் என்ற நிறைவு இருக்கிறது.
14 மரங்கள் வெட்டப்பட்ட புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் சன்னிதித் தெருவில் இந்த மூன்று ஆண்டுகளில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டு அவை விருட்சமாக வளர்ந்திருப்பதைக் காணும் போது மனம் அமைதி கொள்கிறது.