Tuesday 2 July 2024

பழைய தஞ்சாவூர் மாவட்டம்

பழைய தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர்கள் இன்னும் மானசீகமாக பழைய தஞ்சாவூர் மாவட்டத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷார் தமிழகத்தை செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி என பிரித்திருந்தனர். அப்போது மொத்தமே 10 மாவட்டங்கள் தான் இருந்திருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குறிப்பிட்ட தன்மையும் ஒவ்வொரு மாவட்டத்தின் மக்களுக்கும் பிரத்யேகமான சில இயல்புகளும் இருந்திருக்கின்றன. இருக்கின்றன. நிலவியலையும் மக்களின் இயல்புகளையும் அவதானித்தால் அவற்றை அறிய முடியும். இப்போது ஒவ்வொரு மாவட்டமும் மூன்றாய் நான்காய் உடைந்து மொத்தம் 38 மாவட்டங்கள் இருக்கின்றன.  

தஞ்சாவூர் மாவட்டத்தின் பொதுத் தன்மை என்பது காவேரியும் காவேரி கொண்டு சேர்த்திருக்கும் வளமான வண்டல் மண்ணும். நீர்ப்பாசனம் மிக்க பகுதி என்பதாலும் வளமான மண் என்பதாலும் இங்கே விவசாயமும் விவசாயம் சார்ந்த வாழ்க்கையுமே பெரும்பான்மை. வறண்ட மாவட்டங்களில் வாழ்வோர் சந்திக்கும் அன்றாடச் சவால்கள் இங்கே பெரிதாக கிடையாது. எனவே ஒரு விதமான தேக்க நிலை என்பது இங்கே எப்போதும் இருக்கும். இது பல நூற்றாண்டுகளாக உள்ள நிலை. சோழர் ஆட்சியில் தஞ்சை மிக உயர் நிலையில் இருந்திருக்கிறது. இருப்பினும் அதன் ராணுவத் தேவைகளை நடு நாடு ( பழைய தென்னாற்காடு மாவட்டம்) , கோழி நாடு ( பழைய திருச்சி மாவட்டம்) ஆகியவையே பூர்த்தி செய்திருக்கின்றன. அதாவது பழைய தஞ்சாவூர் மாவட்டம் உருவாக்கித் தந்த உபரியில் பழைய தென்னாற்காடு பழைய திருச்சி மாவட்டத்தின் ராணுவங்கள் உருவாகியிருக்கின்றன. நாயக்கர்கள் ஆட்சியில் மதுரையும் திருச்சியும் முக்கியத்துவம் பெறுகின்றன. நாயக்கர்களின் ராணுவம் விஜயநகரம், ராயலசீமா, மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலிருந்து உருவாகி வருகிறது. 

தஞ்சை பிராந்தியத்தில் இன்றும் விவசாயம் தான் முக்கிய தொழில். எனினும் இங்கே குறு விவசாயிகள் என்னும் 2.5 ஏக்கர் அதற்கு கீழே நிலம் வைத்திருக்கும் விவசாயிகளே எண்ணிக்கையில் மிக அதிகம். ஒரு விவசாயக் குடும்பத்துக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் இருந்து அவர்கள் நெல் விவசாயம் மட்டுமே செய்கிறார்கள் எனில் பெரும் பொருளியல் சக்தியாக உருவாகி விட முடியாது. ஆண்டுக்கு 3 ஏக்கரில் விவசாயம் செய்து நிகர லாபமாக ரூ. 2,50,000 கிடைக்கக் கூடும். மாதம் ரூ.20,000 என அதனைக் கூறலாம். குழந்தைகள் கல்வி, கல்லூரி, திருமணம் என அனைத்துமே இந்த வருமானத்தைக் கொண்டே செய்யப்பட்டாக வேண்டும். ஒரு ஊரில் 1000 குடும்பங்கள் இருந்தால் 500 குடும்பங்கள் இதே நிலையில் இருப்பார்கள். பழைய தஞ்சாவூர் மாவட்டம் முழுக்கவே ஏறக்குறைய இதே போன்ற நிலை. 365 நாளில் 140 நாள் மட்டுமே விவசாய வேலை இருக்கும். எனவே ஒரு விதமான தேக்க நிலை எப்போதும் இருக்கும். ஒரே நேரத்தில் நில உரிமையாளர் என்னும் பெருமிதமும் இன்னொரு பக்கத்தில் விவசாயியாக வாழ்வதன் பொருளியல் நெருக்கடியும் என பழைய தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இரண்டு முகங்கள். இந்த சிறு விவசாயிகள், குறு விவசாயிகள். விவசாயத் தொழிலாளர்கள் இவர்களிடம் பண்டங்களை விற்றே இங்குள்ள வணிகர்கள் வாழ்கிறார்கள். விவசாயிகளிடம் காணப்படும் தேக்க நிலையின் சிறு பகுதி இங்குள்ள வணிகர்களிடமும் இருக்கும். இருப்பதை பராமரித்துக் கொண்டால் போதும் என்றே இங்கிருக்கும் வணிகர்கள் எண்ணுவார்கள். இது ஒரு பொது மனநிலை.

பழைய தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர்கள் பலர் அரசியலில் பெரிய பதவிகளில் இருந்திருக்கிறார்கள். இந்தியக் குடியரசுத் தலைவராயிருந்த ஆர். வெங்கட்ராமன் பழைய தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர். அவர் மத்திய நிதியமைச்சராகவும் மத்திய பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்திருக்கிறார். முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பழைய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கி தமிழ்நாட்டில் இரண்டு ஆட்சி மாற்றங்களை நிகழ்த்திக் காட்டிய ஜி.கே. மூப்பனார் தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர். தமிழ் மாநில காங்கிரஸின் தற்போதைய தலைவரான ஜி.கே. வாசன் தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர். தமிழகத்தின் தற்போதைய முதல்வரும் பழைய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 

பாய்ந்து ஓடி வரும் காவிரி நீர் அகண்ட காவிரியாக திருச்சியைத் தாண்டியதும் காவிரி வடிநிலத்தில் மெல்ல நடக்க ஆரம்பிக்கிறது. அவ்வாறு மெல்ல நடப்பதால் தான் வடிநில மண் முழுதிலும் நெல்லாக விளைகிறது. இருப்பினும் அந்த குறைந்த வேகம் இந்த பிராந்தியத்தின் இந்த பிராந்தியத்தில் இருக்கும் சமூகங்களின் இயல்பாகவும் ஆகிப் போனது.