Wednesday 3 July 2024

ரயில் பயணம்

நேற்று தஞ்சாவூர் சென்றிருந்தேன். டூ வீலரை ஸ்டாண்டில் கொண்டு விட்டதும் ஒரு நாள் வாடகை ரூ.15 என இருந்தது. வாடகை கூடியிருக்கிறதா என்று கேட்டேன். ரூ.10 வாடகை இருந்த போது கடைசியாக வண்டி நிறுத்தியிருக்கிறீர்கள் தம்பி என ஸ்டாண்டு உரிமையாளர் சொன்னார். எனக்கு ஒரு பழக்கம் உண்டு. வெளியூர் செல்லும் போது எனது வாகனம் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நினைப்பேன். முன்னொரு காலத்தில் சைக்கிள் ஸ்டாண்ட்களில் சைக்கிள்கள் மிக நெருக்கமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. எனவே சைக்கிள்கள் மென்மையற்று கையாளப்பட்டிருந்ததால் சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிள் வைப்பது உகந்தது அல்ல என்னும் எண்ணம் எங்கள் பகுதியில் உண்டு. ஊருக்குச் செல்லும் போது வாகனம் வீட்டிலேயே இருக்க வேண்டும் என எண்ணுவது அந்த எண்ணத்தின் நீட்சியாக இருக்கலாம். வீட்டிலிருந்து ரயில் நிலையம் 5 கி.மீ தொலைவு. வீட்டிலிருந்து பேருந்து நிலையம் 2 கி.மீ தொலைவு. ரயிலுக்குச் செல்ல இரண்டு கி.மீ நடந்து சென்று பேருந்தைப் பிடித்து ரயிலடி சென்று ரயிலைப் பிடிக்க வேண்டும். ரயிலடி செல்வதற்குள் பாதி பயணம் நடந்து விட்டதாக தோன்றி விடும்.  

2011ம் ஆண்டு தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்கள் 100 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டன. அதுவரை தமிழ்நாட்டில் ரயில் கட்டணமும் பேருந்து கட்டணமும் சமமாக இருந்தன. சொல்லப் போனால் ரயில் கட்டணம் குறைவாக இருந்தது. 40 கிலோ மீட்டர் உள்ள ஊருக்கு பேருந்து கட்டணம் ரூ.12 எனில் ரயில் கட்டணம் ரூ.10 என இருக்கும். இரண்டு கட்டணமும் ஏறக்குறைய சமமாக இருந்ததால் அதிக எண்ணிக்கையில் இருக்கும் பேருந்துகளில் பயணிப்பதையே  பொதுமக்கள் விரும்புவார்கள். எனவே ரயிலை விரும்பி ரயிலில் பயணிப்பவர்கள் மட்டுமே ரயில் பயணம் மேற்கொள்வார்கள். பேருந்து கட்டண உயர்வுக்குப் பின் பொருளியல் பயன் கருதி பொதுமக்கள் பலரும் ரயில் பயணத்துக்கு வந்தார்கள். ரயில்கள் நிரம்பி வழிய ஆரம்பித்தன. ஒரு குடும்பத்தில் இருக்கும் 4 பேர் 100 கி.மீ தூரம் உள்ள ஊருக்குப் பயணிக்கிறார்கள் எனில் பேருந்தில் தோராயமாக ஒருவருக்கு ரூ.75 கட்டணமாக உள்ளது. நான்கு பேருக்கு ரூ.300 ஆகும். எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றால் ஒருவருக்கு ரூ.45 வீதம் நான்கு பேருக்கு ரூ.180 ஆகும். ஒரு பயணத்தில் அந்த குடும்பத்துக்கு ரூ.120 மிச்சம். போக வர கணக்கிட்டால் ரூ.250 மிச்சம். இப்போது தமிழகத்தில் ரயில்கள் எல்லா நேரத்திலும் கூட்டமாக உள்ளன. 

காலை 8.05க்கு திருச்சி விரைவு வண்டியைப் பிடித்தேன். மைசூர் - மயிலாடுதுறை விரைவு வண்டி மைசூரிலிருந்து மயிலாடுதுறை வந்ததும் அடுத்த ஒரு மணி நேரத்தில் மயிலாடுதுறை - திருச்சி விரைவு ரயிலாக மாறி திருச்சி பயணப்படும். 10.30க்கு திருச்சி சென்றடையும். அங்கிருந்து மதியம் 1 மணிக்குப் புறப்பட்டு மாலை 3.30க்கு மயிலாடுதுறை வந்து சேரும். பின்னர் 5.50க்கு மைசூர் நோக்கி ஓடத் துவங்கும். வெளிமாநிலம் செல்லும் விரைவு ரயில் என்பதால் நிறைய பெட்டிகள் என்றாலும் ரயில் நிரம்பியிருந்தது. கும்பகோணத்தில் கொஞ்சம் பேர் இறங்க நிறைய பேர் ஏறிக் கொண்டார்கள். தஞ்சாவூர் சென்றதும் மொத்த ரயிலிலும் இருந்த கணிசமான நபர்கள் இறங்கிக் கொள்ள திருச்சியில் பணி புரியும் தஞ்சாவூர் வாசிகள் பாதி பேர் வண்டியில் ஏறிக் கொண்டார்கள். நான் தஞ்சாவூரில் இறங்கினேன். 

ரயிலடியிலிருந்து பழைய பேருந்து நிலையத்துக்கு ஒரு டவுன் பஸ். அங்கே 20 நிமிடம் காத்திருந்து இன்னொரு டவுன் பஸ். டவுன் பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது அந்த காத்திருப்பு பல ஆண்டு காலமாக நிகழ்வதாகத் தோன்றும். ஐந்து வயதில் டவுன் பஸ்ஸுக்கு காத்திருந்தது. பத்து வயதில். பதினைந்தில். அதற்கு முடிவே இல்லை என்று தோன்றி விடும். எங்கள் பிராந்தியத்தில் ஒரு டவுன் பஸ்ஸைப் பிடித்து அதில் இடமும் பிடித்து விடுவது என்பது பெரும் செயற்கரிய செயலாக நினைக்கப்படும். 

ஒரு காலத்தில் 120 கி.மீ தொலைவு கொண்ட எந்த ஊராக இருந்தாலும் இரு சக்கர வாகனத்தில் சர்வ சாதாரணமாக செல்வேன். இப்போது அப்படி செல்வதில்லை. ரயிலையும் பேருந்தையுமே தேர்வு செய்கிறேன். 

தஞ்சாவூரில் மதியம் 2 மணிக்கு காலையில் சென்ற ரயில் மீண்டும் வந்தது. அதைப் பிடித்து மாலை 3.30க்கு ஊர் வந்து சேர்ந்தேன்.