Friday 5 July 2024

ஒரு மனிதர் - ஒரு நண்பர் -ஒரு உதாரணம்

அந்த மனிதர் எனக்கு ஏழு வயதில் அறிமுகமானார். அவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு நாங்கள் குடிவந்தோம். குடி வந்த அன்றே அந்த மனிதரும் அவரது குடும்பமும் அறிமுகமானார்கள். அவர்கள் வீட்டின் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர். எனினும் அவர்கள் வீட்டில் நான்கு பேர் மட்டும் இருந்து நான் பார்த்ததில்லை. குறைந்தபட்சம் 10 பேர் இருப்பார்கள். அதிகபட்சம் 20 பேர் வரை இருப்பதுண்டு. உறவினர்கள் , நண்பர்கள் என எவரேனும் வந்து கொண்டே இருப்பார்கள். உணவு உபசரிப்பை அவர்கள் வீட்டில் கண்டது போல் எங்கும் நான் கண்டதில்லை. அவரது உறவினர் வீட்டுக் குழந்தைகள் அவர் வீட்டில் தங்கி படித்து பள்ளிக்கல்வியும் கல்லூரிக் கல்வியும் முடித்திருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் தங்கி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு குணமாகிப் போனவர்கள் இருக்கிறார்கள். தான் பிறர் என்னும் பேதமே இல்லாத குடும்பம் அவர்களுடைய குடும்பம். அந்த ஊரில் நாங்கள் ஒரு வருடம் மட்டுமே இருந்தோம். பின்னர் வேறு ஊருக்கு குடிமாறினோம். எனினும் அவர்கள் குடும்பத்துடனான நட்பு தொடர்ந்து நீடித்தது. நீடிக்கிறது. இன்று அந்த மனிதர் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் இயற்கை எய்தினார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்ற போது அங்கு திரண்டிருந்த உறவினர்கள் எவருக்கும் என்னை நினைவில்லை. என்னை அவர்கள் ஏழு வயது சிறுவனாகப் பார்த்திருப்பார்கள்.  தனிப்பட்ட முறையில் அந்த மனிதர் எனக்கு ஒரு சாத்தியத்தைக் காட்டி விட்டு சென்றிருக்கிறார் என்றே எப்போதும் எண்ணுவேன். அவர் வீட்டுக்கு எவரும் ஒரு தபால் எழுதி விட்டு கூட வருவதில்லை. எந்த நேரத்திலும் அவர் வீட்டுக்கு எவரும் வரலாம். நள்ளிரவு எவரும் வந்தால் கூட அடுப்பைப் பற்ற வைத்து ரவா உப்மாவாவது செய்து விருந்தினரைப் பசியாற்றிய பின் தான் அவர்களை உறங்கச் சொல்வார்கள். 

இன்று சமூக அமைப்பும் சமூக வாழ்க்கையும் மாற்றம் அடைந்திருக்கும் காலகட்டம் நிகழ்கிறது. தகவல் தொடர்பு பெருகி விட்டது. இருப்பினும் மனித மனங்கள் சிறிய அல்லது பெரிய விலக்கத்துடனேயே இருக்கின்றன. 

என்னால் அந்த மனிதரின் நினைவிலிருந்து வெளியே வர முடியவில்லை. அவரது உதாரணம் மிகப் பெரிதாக இப்போதும் மனதில் இருக்கிறது.