தமிழ்நாட்டில் ஓர் ஆங்கிலப் பேராசியர் சிறந்தவர் என்று சிலாகிக்கப்பட்டால் அவர் ஷேக்ஸ்பியரில் எவ்வளவு ஈடுபாடு கொண்டவர் என்பதிலிருந்தே கூறப்படும் என்பதை எவரும் நினைவு படுத்திக் கொள்ள முடியும்.
தமிழ்ப் படைப்பாளிகள் பலர் ஷேக்ஸ்பியர் மேல் தீராப் பிரியம் கொண்டவர்கள்.
ஷேக்ஸ்பியரை எளிதில் வாசிக்க ஒரு வழிமுறை சமீபத்தில் கிடைக்கப் பெற்றது. ஷேக்ஸ்பியரின் ஆங்கிலம் நானூறு ஆண்டுகளுக்கு முந்தையது. எனினும் இப்போது வாசித்தாலும் அது சம கால ஆங்கிலத்துக்கு சிறு தொலைவிலேயே இருக்கிறது. ஷேக்ஸ்பியரை சம கால ஆங்கிலத்தில் வாசிப்பதை விட அவருடைய சொந்த பிரதியும் அதற்கு விளக்கமாக எழுதப்பட்ட சமகால ஆங்கிலப் பிரதியும் பக்கத்தில் பக்கத்தில் இருக்க வாசித்தால் எளிதில் வாசிக்க முடியும். அவ்வாறான ஒரு பிரதி அமைப்பு கிடைக்கப் பெற்றது. அதன் மூலம் ஷேக்ஸ்பியர் வாசிப்பொன்று துவங்கியுள்ளது.
ஷேக்ஸ்பியரை வாசிக்கும் போது ஒரு விஷயம் புரியும். இப்போது புழக்கத்தில் உள்ள ஆங்கிலம் என்பது ஷேக்ஸ்பியரின் பிரதியை விளைநிலமாய்க் கொண்டு அதில் முளைத்தெழுந்த நெல்மணிகளே என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.