Monday 8 July 2024

தாகம் கொண்ட கனவு

சமீப காலங்களில் என் மனம் சில புதிய நிர்மாணங்களை அமைக்க விரும்புகிறது. எளியவையும் சக்தி வாய்ந்தவையுமான நிர்மாணங்கள். எனது தொழில் சார்ந்து கட்டுமானத்துக்கு மனிதர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை தினந்தோறும் காண்கிறேன். 1000 சதுர அடி வீடு கட்ட ரூ. 20,00,000 செலவு ஆகிறது. மனையின் விலையையும் அதில் சேர்த்தால் ரூ. 50,00,000 வரை ஆகும். மாநகரங்களில் அதன் விலை ஒரு கோடி இரண்டு கோடி என்று செல்கிறது. இன்று நிகழும் அத்தனை கட்டுமானங்களும் சிமெண்ட்டாலும் இரும்பாலும் ஆனவை. சிமெண்ட்டுக்கு ஆயுள் 60 ஆண்டு காலம் மட்டுமே. அதன் பின் அதன் சக்தி என்பது பெருமளவு குறைந்து விடும். அந்த கட்டிடம் அதன் பின் மேலும் 40 ஆண்டுகள் இருக்கலாம். இருப்பினும் நடைமுறை உண்மை என்பது எந்த கட்டிடமும் தொடர்ந்து அதே வடிவத்தில் 40 ஆண்டுகள் 50 ஆண்டுகள் இருப்பதில்லை. அந்த கட்டிடம் விற்பனை செய்யப்பட்டால் வாங்குபவர் அதில் இருக்கும் கட்டிடத்தை முற்றிலும் இடித்து விட்டு மேலும் பல மாடிகள் கட்டும் வகையில் புதிய கட்டிடத்தைக் கட்டுவார். ஒரே குடும்பத்திடம் அந்த கட்டிடம் இருந்தாலும் அடுத்த தலைமுறையோ அதற்கு அடுத்த தலைமுறையோ  பழைய கட்டிடத்தை முற்றிலும் இடித்து விட்டு தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப புதிதாகக் கட்டுவர். ஒரு நகரில் அல்லது மாநகரில் ஒரு வீதியில் பத்து நிமிடம் நடந்தாலே அதில் இருக்கும் எந்த கட்டிடமும் 30 ஆண்டுகளில் அல்லது 40 ஆண்டுகளில் புதிதாக மாற்றம் கொள்வதைக் காண முடியும். இந்த நிலை ஒரு யதார்த்த நிலை. அதற்கு பல காரணங்கள். மனிதனுக்கு உறைவிடம் என்பது அவன் உருவான நாளிலிருந்தே அவனது விருப்பமாக இருந்திருக்கிறது. உறைவிடம் அவனது உத்யோகத்துடனும் வாய்ப்புகளுடனும் தொடர்புடையது. இவை அனைத்தையுமே நான் புரிந்து கொள்கிறேன். 

எனது அக்கறை எதைக் குறித்தது எனில், இன்று தமிழ்ச் சமூகம் , தமிழ்ச் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு கான்கிரீட் வீட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பெரும் வேட்கையில் இருக்கிறது. ஒரு கிராமத்தில் , ஒரு நகரத்தில், ஒரு மாநகரத்தில் என எல்லா இடங்களிலும் அந்த பெருவிருப்பம் இருக்கிறது. வீடு என்பது ஒரு குடும்பத்துக்கு ஒரு சமூகத்தில் இருப்பவர்களுக்கு முக்கியமானது தான். ஆனால் அதே நேரத்தில் நிலத்தடி நீர் என்பது முக்கியமானது இல்லையா ? அடுத்த தலைமுறைக்கு நாம் நீர்ப்பஞ்சத்தைத்தான் அளித்து விட்டு போகப் போகிறோமா? ஊரில் சமூகத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை சிறப்பாகப் பராமரிப்பது மிகவும் முக்கியமானது என்பதை உணர்கிறேன். பொது மக்கள் இயற்கை என்னும் உணர்விலிருந்து மிகவும் தள்ளி இருக்கிறார்கள் என்பதை காண்கிறேன். அவர்களைக் குறை கூற முடியாது. அவர்களுடைய வாழ்க்கைச் சூழலும் வரலாற்றுச் சூழலும் அவ்விதமானது. இன்றைய உலகம் ‘’தனி மனிதன்’’ என்னும் கருதுகோளால் நிரம்பியுள்ளது. இது ஒரு வரலாற்று இடம். என்றாலும் தனிமனிதன் அல்லது தனிமனிதர்கள் தங்கள் சூழலுக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய தேவையும் அவசியமும் வரலாற்றின் இந்த காலகட்டத்தில் உருவாகியிருக்கிறது என்பதும் அதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டிய விஷயம். 

சமீப காலத்தில் எனது மனம் இப்போது இருக்கும் இப்போது வாழும் இடத்திலிருந்து ஒரு புதிய இடத்துக்குச் செல்ல வேண்டும் என்னும் உணர்வைத் தீவிரமாகக் கொண்டிருந்தது. எல்லா கணமும் என்னுடன் இருக்கும் அந்த உணர்வை அவதானித்துக் கொண்டிருந்தேன். 

இன்று ஒரு காட்சியை என் கற்பனையில் கண்டேன். ஒரு தடாகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடைந்தேன். ஒரு குளம் வெட்ட வேண்டும். அந்த குளம் பெரிதாக இருக்க வேண்டும். அந்த குளம் ஆண்டின் 365 நாளும் நீர் நிரம்பித் ததும்புவதாய் இருக்க வேண்டும். அந்த குளம்  அப்பிராந்தியத்தின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதாய் இருக்க வேண்டும். அந்த குளத்தினைச் சுற்றி நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு அதனை ஒரு சோலையாக வைத்திருக்க வேண்டும். அந்த சோலையின் ஒரு பகுதியில் சிறிதாக மூங்கிலாலும் தென்னங்கீற்றாலும் ஆன ஒரு வீட்டை அமைத்துக் கொள்ள வேண்டும். 

இந்த விருப்பம் ஈடேறினால் என் வாழ்வு நிறைவு கொள்ளும் என்று நினைக்கிறேன். சோலை மண்ணில் மரங்களில் தடாகத்தில் பல உயிரினங்கள் வாழும் சூழ்நிலை அமையும். அந்த உயிர்த்தொகையின் சிறு பகுதியே நான். 

இன்றும் தஞ்சைப் பிராந்தியம் பெருமளவு உணவு உற்பத்தி செய்கிறது எனில் அதற்குக் காரணம் சோழர்கள் உருவாக்கிய நீர்ப்பாசனத் திட்டங்கள். அதன் பயனை அனுபவித்த கோடானு கோடி மக்களில் நானும் ஒருவன். என்னுடைய பிராந்தியத்திடமிருந்து நான் பெற்றது அதிகம். அதற்கு ஏதேனும் ஒரு வகையில் நான் திருப்பி அளிக்க நினைக்கிறேன். அதனை என் கடமையாக உணர்கிறேன். 

இந்த முயற்சியை நோக்கி எனது வாழ்வு அமைய வேண்டும் என விரும்புகிறேன்.