Friday, 6 December 2024

யாதெனின் யாதெனின்

சமீபத்தில் எனது நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். பக்கத்து ஊர்க்காரர். பொது ஸ்தாபங்கள் சிலவற்றுடன் தொடர்பில் இருப்பவர். சொந்தமாக அவர் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் நிறுவனத்தில் பத்து ஊழியர்களுக்கு மேல் பணி புரிகிறார்கள். அவர் அலுவலகம் மிக அமைதியாக மிக சீராக இயங்கிக் கொண்டிருக்கும். அவ்வகையில் தன் அலுவலக நிர்வாகத்தை நண்பர் வடிவமைத்திருக்கிறார். அவர் நிறுவனத்தின் பொருளியல் நிலை மிகச் சிறப்பாக இருக்கிறது. எனவே அவருக்கு அலுவலகம் சார்ந்து தொழில் சார்ந்து எந்த சிக்கலும் இல்லை. 

அவர் தொடர்பில் இருக்கும் பொது ஸ்தாபனங்களின் இயக்கமும் நிர்வாக முறையும் அவருக்குத் திருப்திகரமாக இல்லை. அவை மந்த கதியில் இருப்பது குறித்தும் அவற்றின் நிர்வாகம் சீர் கெட்டு இருப்பதைக் கண்டும் நண்பர் துயர் கொள்கிறார். அந்த துயர் அவரது மனதை சிறு அளவினேனும் பாதித்திருக்கிறது என்பதைக் கண்டேன். இந்த விஷயம் சற்று நூதனமானதுதான்.  சாமானிய மனிதர்கள் பொதுவாக சொந்த விஷயம் குறித்து கவலைப்படுவார்கள். அந்த கவலை அவர்களை பாதிக்கும். நண்பர் பொது விஷயங்கள் குறித்து கவலை கொண்டிருக்கிறார். அந்த கவலை அவர் மனத்தை சிறு அளவில் வலி கொள்ளும் அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறது. வேறுபாடுகள் சில இருப்பினும் இந்த இரண்டு விஷயங்களும் ஏறக்குறைய ஒன்றுதான். 

எந்த விஷயமாக இருந்தாலும் அதனை நம் மனதில் வலி கொள்ளும் அளவு ஏற்றிக் கொள்வது என்பது உகந்த வழிமுறை அல்ல. நேரடியாகவோ மறைமுகமாகவோ லௌகிகம் கோடானு கோடி மனிதர்கள் வாழ்வுடன் தொடர்புடையது. எனவே ஒரு சிறிய லௌகிகச் செயல்பாட்டுக்குக் கூட நாம் எதிர்பார்க்காத எதிர்வினைகளும் விளைவுகளும் ஏற்படக் கூடும்.  காலம் என்பது மிகப் பெரும் பிரவாகம். அது கணமும் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது. நம்மால் என்ன செய்ய முடியுமோ அதனை சிறப்பாகச் செய்வது என்பது மட்டுமே நமக்கு இயலும் ஆகப் பெரிய விஷயம். அது நமக்கு மகிழ்வளிப்பதாகவும் பிறருக்கும் மகிழ்வளிப்பதாகவும் அமைந்தால் அது சிறப்பு. 

நமது மரபில் நல்வினை, தீவினை என்பதை பொன்விலங்கு, இரும்பு விலங்கு என்று கூறுவது வழக்கம். இரண்டுமே கை விலங்குகள் தான். 

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்

என்பது திருக்குறள்.