Friday, 6 December 2024

சில நிகழ்வுகள் - சில எண்ணங்கள்

இன்று டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம். சாமானிய குடும்பத்தில் பிறந்து தன் கல்வித்திறனால் உயர்வான நிலையை அடைந்து எளிய மனிதர்கள் ஏற்றம் பெறுவதற்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட அவரது வாழ்க்கை சமூகப் பிரக்ஞை கொண்ட எந்த ஒரு மனிதருக்கும் வழிகாட்டுவதாய் அமைவது.  அரசியல் நிர்ணய சபையின் தலைவராக அம்பேத்கர் திகழ வேண்டும் என்று தனது எண்ணத்தைத் தெரிவித்தவர் மகாத்மா காந்தி. மகாத்மாவின் எண்ணப்படியே அம்பேதகர் அரசியல் நிர்ணய சபை தலைவராக ஆனார். மகாத்மாவும் அம்பேத்கரும் பல விஷயங்களில் முரண்பட்டிருந்தனர். இருப்பினும் அம்பேத்கரே அந்த பொறுப்புக்கு வர வேண்டும் என காந்தி எண்ணினார். அந்நிகழ்வு ஒரு மகத்தான குறியீடு. அதன் மூலம் காந்தியையும் புரிந்து கொள்ள முடியும் அம்பேத்கரையும் புரிந்து கொள்ள முடியும். 

இன்று தபால் அலுவலகம் சென்றிருந்தேன். ஒப்புகைச் சீட்டு விவகாரம் தொடர்பாக நான் அளித்த புகாரின் பின் அந்த விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு ஊழியர்கள் அங்கே இல்லை. சென்ற வாரம் சென்றிருந்த போதும் அவர்களை அங்கே காண முடியவில்லை. பணி இட மாறுதல் செய்யப்பட்டிருக்கலாம். 

எனது நண்பன் ஏன் இந்த விஷயத்தை இவ்வளவு முக்கியமாக நினைக்கிறேன் என என்னிடம் கோபித்துக் கொண்டான். எனக்கு யார் மீதும் தனிப்பட்ட விரோதம் இல்லை. 

முதல் முறை ஒரு சம்பவம் நடக்கிறது. 12 மணிக்கு நான் அளித்த மின்னணு பண மாற்ற படிவத்துக்கான ஒப்புகைச் சீட்டை மாலை 5 மணிக்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு சொல்கிறார்கள். எனக்கு உடன் தேவைப்படுகிறது எனக் கூறி இரண்டு மணி நேரம் காத்திருந்து அதனைப் பெற்றுக் கொண்டேன். அந்த விபரத்தை சம்பந்தப்பட்ட ஊழியர்களின் பெயரைக் குறிப்பிடாமல் இனி யாருக்கும் இவ்விதம் நிகழாமல் இருக்க உரிய ஏற்பாடு செய்ய சொல்லி துறை மேலதிகாரிக்கு கடிதம் எழுதுகிறேன். அவர் நிகழ்ந்ததற்கு வருத்தம் தெரிவித்து பதில் எழுதுகிறார். இந்த கடிதம் குறித்து அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரியவந்திருக்கும். 

ஒரு மாதம் கழித்து மீண்டும் மின்னணு பண பரிமாற்றம் செய்ய அதே அலுவலகம் செல்கிறேன். உண்மையில் பழைய சம்பவத்தை என் நினைவில் இருந்து அகற்றியிருந்தேன். வாடிக்கையாளர் ஒருவருக்கு நிகழ்ந்த அசௌகர்யம் தகவலாகத் தெரிவிக்கப்பட்டது. அவ்வளவே. படிவம் அளித்த போது முன்னர் செய்த விதமே ஒப்புகைச் சீட்டை மாலை 5 மணிக்கு பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறிய போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பொது நியாயம், அலுவலக முறைமை, பணி கண்ணியம் என எந்த விஷயத்துக்கும் இடம் கிடையாதா என வருத்தமுற்றேன். மாலை ஒப்புகைச் சீட்டைப் பெற்றுக் கொண்டு அடுத்த நாள் சி.பி.கி.ராம்.ஸ்-ல் புகார் அளித்தேன். இம்முறை அந்த 2 ஊழியர்களின் பெயரையும் குறிப்பிட்டு புகார் அளித்தேன். விசாரணை நடந்தது. ஒரு அதிகாரி நான் இருக்குமிடத்துக்கு வந்து என்னிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டார். நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

பணி இட மாறுதல் உத்தரவு சம்பந்தப்பட்ட ஊழியர்க்கு ஓர் எச்சரிக்கைக் குறிப்பே. இனி இவ்விதமான பிழை நிகழாமல் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். 

என் நண்பனின் கோபத்துக்கு எனது பதில் : எனக்கு ஏற்பட்ட சிரமத்துக்காக நான் இந்த விஷயத்தை மேலதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை. என்னை நான் எப்போதும் ஒரு சாமானிய மனிதனாகவே உணர்கிறேன். இந்த நாட்டின் கோடானுகோடி சாமானியர்களில் நானும் ஒருவன். அவர்களில் ஒருவனாக அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அந்த ஊழியர்கள் முன் நிற்பவனாக என்னை உணர்ந்ததால் மட்டுமே அந்த புகாரை மேலதிகாரிகளுக்கு அனுப்பினேன். 

ஒப்புகைச் சீட்டை உடன் வழங்க வேண்டும் என எந்த விதியும் இல்லை என்று அவர்கள் கூறினர். அவர்கள் பயன்படுத்திய வார்த்தை ‘’ரூல்’’. எனக்கு அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபை தலைவராக இருந்து எழுதிய சட்டம் குறித்து அறிமுகம் உண்டு என்பதால் அந்த புகாரை அனுப்பினேன்.