Saturday, 14 December 2024

மூன்று ஊர்கள் - ஒரு கடல்

 மூன்று நாள் மழைக்குப் பிறகு இன்று காலை வெயிலைக் காண முடிந்தது. மாவட்டத்தின் வடக்கு, மத்திய, தென் பகுதிகளில் இருக்கும் மூன்று கடற்கரை ஊர்களுக்குச் சென்று கடலைப் பார்த்து விட்டு வரலாம் என இரு சக்கர வாகனத்தில் கிளம்பினேன். முதலில் செல்ல விரும்பியது திருமுல்லைவாசல். சீர்காழிக்கு அருகில் உள்ளது. எனக்கு ஏழு வயது இருக்கும் போது திருமுல்லைவாசல் முதல் முறை சென்றேன். அது நன்றாக நினைவில் இருக்கிறது. அந்த ஊரின் கடற்கரை சற்று வித்தியாசமானது. பாய்மரப் படகில் ஒரு ஆற்றைக் கடந்து கடற்கரைக்குச் செல்ல வேண்டும். பயண நேரம் மூன்று நிமிடம். இப்போது ஆறும் கடலும் கிட்டத்தட்ட ஒன்றாகி விட்டது. எனவே படகு தேவையில்லை. ஆற்றின் கரையே கடற்கரை ஆகி விட்டது. கடற்கரையில் அமர்ந்திருந்தேன். வானிலை மாற்றம் காரணமாக கடல் ஹோ ஹோ என ஆர்ப்பரிக்கும் அலைஓசை பிரும்மாண்டமாக கேட்டுக் கொண்டிருந்தது. அலைஓசை மனதை நெகிழச் செய்தது. கடல் முன்னால் உணர்ச்சி மேலிட்டு கண்ணீர் சிந்தினேன். 

அங்கிருந்து கிளம்பி பூம்புகார் பயணமானேன். இப்போது திருமுல்லைவாசலையும் திருமங்கை ஆழ்வார் பிறந்த திருநகரியையும் இணைக்கும் விதமாக ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலம் கட்டப்பட்டு சில ஆண்டுகள் ஆகியிருக்கும். அதில் பயணித்து திருநகரி அடைந்து மங்கைமடம் மார்க்கமாக பூம்புகார் வந்தடைந்தேன். அந்த பாதையில் 150 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட சத்திரம் ஒன்றைக் கண்டேன். நாங்கூர் திவ்ய தேசம் சென்று பெருமாளை சேவிக்கும் பக்தர்களுக்காகக் கட்டப்பட்டுள்ளது. 150 ஆண்டு கால கட்டிடம். 

பூம்புகாரில் காவிரி கடலில் சங்கமிக்கும் கூடுதுறைக்கு சென்றேன். நதியும் கடலும் இணைவது என்பது நம் நாட்டின் மகத்தான படிமங்களில் ஒன்று. 

அங்கிருந்த மீனவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பூம்புகாரிலிருந்து தரங்கம்பாடி செல்ல வாணகிரி, மருதம்பள்ளம், மாணிக்கப்பங்கு வழியாக ஒரு சாலை இருக்கிறது என்று சொன்னார். அதில் சென்றேன். அந்த மூன்று ஊர்களுக்கும் தனித்தனியாக வந்திருக்கிறேனே தவிர இந்த மூன்று ஊர்களையும் இணைக்கும் பாதை வழியாக வந்ததில்லை. ஆகவே அந்த மார்க்கம் புதிதாக இருந்தது. அதில் பயணித்து தரங்கம்பாடி சென்றேன். 

ஒரு நாளின் பகல் பொழுதில் மூன்று ஊர்கள். மூன்று ஊரிலும் ஒரே கடல்.