நேற்று காலை தீவிரமாக மழை அடர்ந்து பெய்து கொண்டிருந்தது. கொட்டும் மழையில் ஒரு முதியவர் சைக்கிளில் ’’சோளக்கதிரு சோளக்கதிரு’’ என கத்தி விற்பனை செய்ய முயன்று கொண்டிருந்தார். ஓயாமல் மழை கொட்டியதால் அப்பகுதி வாசிகள் அனைவரும் வீட்டுக்குள் இருந்தனர். மழைச்சத்தத்தைத் தாண்டி அவருடைய சத்தம் அவர்களை அடைந்து மழையில் அவர்கள் வெளியே வந்து சோளக்கதிர் வாங்க வாய்ப்பு மிகவும் குறைவு. அந்த முதியவருக்கு அது நன்றாகத் தெரியும். இருப்பினும் மூட்டை சோளத்துடன் வீடு திரும்ப அவருக்கு விருப்பமில்லை. தன் முயற்சி மேல் பெரும் நம்பிக்கையுடன் செயல்படுகிறார். வீட்டு வாசலில் நின்று மழையைப் பார்த்துக் கொண்டிருந்த நான் அவரிடம் சோளக்கதிர் வாங்க விரும்பினேன். ஒரு குடையை எடுத்துக் கொண்டு போய் சோளக்கதிர் எவ்வளவு என்று கேட்டேன். 8 கதிர் 50 ரூபாய் என்றார். தொகையை அளித்து கதிரைப் பெற்றுக் கொண்டேன். சமையலறையில் கொண்டு வைத்தேன். வீட்டில் இருப்பவர்கள் இத்தனை கதிர் உன்னை யார் வாங்கச் சொன்னது. இதை வேக வைக்க வெகு நேரமாகும் என்றார்கள்.
இதை வேக வைக்கத் தேவையில்ல்லை. தினம் காலை ஒன்று மாலை ஒன்று என அடுப்பு நெருப்பில் சுட வைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றேன். யாருக்கும் புரியவில்லை.
நேற்று மாலை ஒரு சோளக்கதிரை எடுத்து அதன் பச்சை உறையை நீக்கி கதிரை அடுப்பின் நெருப்பில் சூடு காட்டினேன். ஒரு நிமிடம். பின்னர் மேலும் ஒரு நிமிடம். கதிர் மணிகளை உண்ணத் தொடங்கினேன். வீட்டில் அனைவருக்கும் ஆச்சர்யம். சில நிமிடங்களில் முழுக் கதிரையும் தின்று விட்டேன்.
தமிழ்நாட்டில் சோளக்கதிரை வென்னீரில் வேக வைத்து அதன் பின் உண்கிறார்கள். வட இந்தியாவில் சோளக்கதிரை நெருப்பில் சுட்டு உண்பார்கள். சுட்ட கதிரின் மேல் எலுமிச்சைப் பழம் பிழிந்து மசாலா தடவி உண்பதும் உண்டு. எனது மோட்டார்சைக்கிள் பயணத்தில் பலமுறை வட இந்தியாவில் அவ்விதம் உண்டது உண்டு. நெருப்பில் தீவிரமாக வாட்டி விடுவார்கள். நேற்று நான் லேசாக சூடாக்கிக் கொண்டேன். சோளம் லேசான இனிப்புச் சுவை கொண்டது. பாதி காய்ந்தும் பாதி பச்சையாகவும் இருக்கும் சோளம் சுவை மிக்கது.
சோளமும் சோளத்தின் சுவையும் அது கிளர்த்திய வட இந்திய பயண அனுபவமும் நேற்றைய தினத்தை மகிழ்ச்சி மிக்கதாக ஆக்கியது.