இரவு முழுவதும் நல்ல மழைப்பொழிவு. காலையில் சிறுநடை சென்று வரலாமென வீட்டு வாசலுக்கு வந்தேன். தினமும் காலையில் குருவிகளுக்கு உணவிடுவது வீட்டின் வழக்கம். தவிட்டுக் குருவிகள், மைனாக்கள், காகங்கள், வால் காகம் ஒன்று, சில அணில்கள் ஆகியவை பொழுது விடிந்து சூரிய ஒளி வருகையில் வீட்டுச் சுவரில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து அமர்ந்து கொள்ளும். இன்று நான் வெளியே வருகையில் அவை தானியங்களைக் கொறித்துக் கொண்டிருந்தன. என்னைக் கண்டதும் சட சட என சிறகடித்துப் பறந்து மீண்டும் திரும்பி வந்து தானியங்களைக் கொத்தின. வீட்டு வாசலில் இரு கெண்டை மீன்கள் இருந்தன. மழை பொழிந்ததில் அருகில் நீர்நிலையில் இருந்த இந்த மீன்கள் தண்ணீர் மட்டம் ஏறியதால் மழைநீர் வடிகால் வழியாக சாலைக்கு வந்து சேர்ந்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டேன். இரண்டுக்கும் உயிர் இருக்கிறது என்பதை அவற்றின் மெல்லிய துடிப்பின் மூலம் அறிந்தேன். அந்த மீன்களைக் கையால் பிடித்தேன். பிடிக்கு அகப்படாமல் வழுக்கிக் கொண்டு சென்றன. ஒருவாறு சமாளித்துப் பிடித்தேன். நீர் நிரம்பியிருந்த மழைநீர் வடிகாலில் அவற்றை விட்டேன். உற்சாகமாக நீந்திச் சென்றன.