Thursday, 12 December 2024

கீரப்பாளையம் கூட்டுறவு பெட்ரோல் பங்க்


 ஸ்ரீராகவேந்திர சுவாமி பிறந்த ஊரான புவனகிரிக்கு அருகில் கீரப்பாளையம் என்ற ஊர் அமைந்துள்ளது (கடலூர் மாவட்டம்). பணி நிமித்தம் அந்த ஊர் வழியே பயணிக்க நேர்ந்த போது எனது இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்ப அங்கிருந்த பெட்ரோல் பங்க்-கில் வண்டியை நிறுத்தி பெட்ரோல் நிரப்பினேன். அந்த பங்க்-கின் அலுவலகக் கட்டிடத்தில் உரிமையாளர் பெயர் என்ற இடத்தில் ‘’கீரப்பாளையம் கிராம கூட்டுறவு கடன் சங்கம்’’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டேன். அது எனக்கு வியப்பளித்தது. பொதுவாக பெட்ரோல் பங்க் உரிமம் தனியாருக்கு அதாவது தனிநபர்களுக்கே தரப்படும். எவ்விதம் ஒரு கூட்டுறவு சங்கம் பெட்ரோல் பங்க் உரிமையாளராக முடியும் என்பதே எனது வியப்புக்கான காரணம். அந்த அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த ஊழியரிடம் விபரம் கேட்டேன். அவருக்குத் தெரிந்த விபரங்களை அவர் சொன்னார். மேலதிக விபரங்களுக்கு அந்த கிராமத்தின் கூட்டுறவு கடன் சங்க பொறுப்பாளர் அலைபேசி எண் அளித்து அவரிடம் கேட்டுக் கொள்ளுமாறு பணித்தார். 

2019ம் ஆண்டு மத்திய அரசு பெட்ரோல் பங்க் உரிமம் பெற கிராம கூட்டுறவு கடன் சங்கங்களும் விண்ணப்பிக்கலாம் என்ற புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. கூட்டுறவு தொடர்பான இலாகாவை கூடுதலாகக் கவனிக்கும் மத்திய உள்துறை அமைச்சரும் பெட்ரோலியத்துறை அமைச்சரும் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பெட்ரோல் பங்க் நடத்துவதற்கு பெரும் முதலீடு தேவை என்பதால் அத்தகைய முதலைத் திரட்ட வலிமை படைத்த செல்வந்தர்களே உரிமத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற சூழல் நிலவி வந்தது. நிலவி வருகிறது. இந்த புதிய நடைமுறை இந்த தொழிலில் கிராம கூட்டுறவு கடன் சங்கங்களும் ஈடுபட முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. 

தமிழ்நாட்டில் 4000க்கும் மேற்பட்ட கிராம கூட்டுறவு கடன் சங்கங்கள் இருக்கின்றன. கிராமங்களில் இருக்கும் ஒவ்வொரு விவசாயியும் அதன் உறுப்பினர்கள். ஒவ்வொரு உறுப்பினரும் அதன் பங்குதாரரும் கூட. விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்குதல், நகைக் கடன் வழங்குதல், விவசாய இடு பொருட்கள் வினியோகம் செய்தல் ஆகியவை அவற்றின் முதன்மைப் பணிகள். கிராமங்களில் இருக்கும் ரேஷன் கடைகளில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு ஊதியம் அளித்து ரேஷன் பொருட்களை கிராம மக்களுக்கு அளிக்கும் பணியும் கிராம கூட்டுறவு கடன் சங்கத்தைச் சேர்ந்ததே. 

கீரப்பாளையம் கூட்டுறவு கடன் சங்கம் 1969ம் ஆண்டு துவக்கப் பெற்றிருக்கிறது. 4500 கீரப்பாளையம் கிராம விவசாயிகள் அதன் உறுப்பினர்களாக இருக்கின்றனர். 2021ம் ஆண்டு வாக்கில் இந்தியன் ஆயில் நிறுவனத்தால் பெட்ரோல் பங்க் தொடர்பான விளம்பரம் வெளியிடப்பட்ட போது விண்ணப்பித்திருக்கின்றனர். மாநில அரசின் பல துறைகளிடமிருந்து தடையின்மைச் சான்று பெறும் நெடும்பணியை பொறுமையுடன் மேற்கொண்டு சாதித்திருக்கின்றனர். இந்த சங்கத்தின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் கண்ட இந்தியன் ஆயில் நிறுவனம் அந்த பங்க்-ஐ தனது சொந்த முதலீடை அளித்து பெட்ரோல் டீசல் சேமிக்கும் கலன்களை நிறுவிக் கொடுத்து தனது நேரடி பங்க்-ஆக செயல்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறது. கீரப்பாளையம் கூட்டுறவு பெட்ரோல் பங்க் செப்டம்பர் மாதம் முதல் செயல்படத் துவங்கியிருக்கிறது. வெற்றிகரமாக தனது முதல் 100வது நாளை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இந்தியன் ஆயில் நிறுவனம் அந்த பங்க்-கிற்கு சி.என்.ஜி இயற்கை எரிவாயு விற்பனை உரிமம் வழங்கவும் இசைவு அளித்து அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் ஓரிரு மாதங்களில் இயற்கை எரிவாயு விற்பனை மையமும் நிறுவப்பட்டு விடும். மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் மையமும் இங்கே வரவுள்ளது. ஒரு நாளைக்கு 2000 லிட்டர் பெட்ரோல் சராசரியாக இங்கே விற்பனை ஆகிறது. பெட்ரோல் விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் அதன் உறுப்பினர்களான 4500 விவசாயிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் கிராம கூட்டுறவு கடன் சங்கம் அமைத்துள்ள முதல் பெட்ரோல் பங்க் கீரப்பாளையம் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் ஆகும். அந்த வகையில் மாநிலத்தில் உள்ள எல்லா கிராம கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் இந்த முயற்சி முன்னோடியானது ஆகும்.