நான் பன்னிரண்டு வயது சிறுவனாக இருந்த போது மன்மோகன் சிங் அவர்களைப் பார்த்திருக்கிறேன். பூம்புகாருக்கு மன்மோகன் சிங் வந்திருந்தார். அங்கே நடந்த ஒரு மாநாட்டுக்காக வந்திருந்தார். மாநாட்டில் உரையாற்றினார். பின்னர் அவர் புறப்பட்டுச் சென்ற போது சாலையின் இரு மருங்கிலும் திரளான மக்கள் கூடி நின்று வழியனுப்பினர். தருமகுளம் பேருந்து நிறுத்தம் அருகே நான் அவரை மிக நெருக்கமாகப் பார்த்தேன். அவருக்கு முன்னும் பின்னும் மெல்ல சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஓரிரு நிமிடங்கள் நகர்வு இன்றி நின்றன. அப்போது அவருடைய வாகனத்துக்கு அருகில் சென்று அவருக்கு வணக்கம் சொன்னேன். புன்னகையுடன் அவரும் வணக்கம் சொன்னார். அந்த காட்சி இப்போதும் மனதில் இருக்கிறது.
அந்த காலகட்டத்தில் மன்மோகன் சிங் ஒரு நட்சத்திரம். கல்வி கற்றவர்களுக்கு பெரும் மதிப்பு அளிக்கும் சமூகம் இந்திய சமூகம். மன்மோகன் சிங், அப்துல் கலாம் ஆகியோர் உதாரணங்கள். நாடு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் திணறிக் கொண்ட போது 1991ல் பிரதமராயிருந்த ‘’பாரத ரத்னா’’ நரசிம்ம ராவ் அரசியலுக்கு அப்பாற்பட்டவரான மன்மோகன் சிங்கை நாட்டின் மத்திய நிதி அமைச்சர் ஆக்கினார். துணிச்சலான முடிவு. மன்மோகன் சிங் அரசியலுக்கு வர நேர்ந்தது அவ்வாறே. அப்போது ’’லைசன்ஸ் பர்மிட் கோட்டா’’ முறைகள் வேரூன்றி இருந்தன. அவற்றுக்கு எதிராக தனது உறுதியான நகர்வுகளை மேற்கொண்டவர் மன்மோகன் சிங்.
ராஜிவ் ஆட்சிக் காலத்தில் திட்ட கமிஷன் துணைத் தலைவராக இருந்தவர் மன்மோகன் சிங். அப்போது ராஜிவ் திட்ட கமிஷனை ‘’Bunch of jokers'' என விமர்சித்தார். அப்போது தனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார் மன்மோகன். பின்னர் ராஜிவ் சர்க்கார் அவரிடம் வருத்தம் தெரிவித்து திட்ட கமிஷன் துணைத் தலைவராகத் தொடருமாறு விண்ணப்பித்துக் கேட்டுக் கொண்டது.
ஜனநாயக அரசியல் என்பது பல விதமான உணர்வுகளின் சமர். ஒரு அறிஞராகவும் ஒரு அதிகாரியாகவும் இருந்து அரசியலுக்கு வந்த மன்மோகன் சிங் அறிஞர் மனநிலையிலும் அதிகாரி மனநிலையிலும் மட்டுமே இருந்தார். அது அவருடைய எல்லை.
சாமானிய குடும்பத்தில் பிறந்து பொருளாதாரம் படித்து ரிசர்வ் வங்கி ஆளுநராகவும் மத்திய நிதி அமைச்சராகவும் பின் நாட்டின் பிரதமராகவும் இருந்த திரு. மன்மோகன் சிங் அவர்களுக்கு அஞ்சலி.