எல்லா விஷமும் ஒன்றல்ல எனினும் விஷத்தின் வெவ்வேறு வடிவங்களும் ரூபங்களும் நிறைந்திருக்கிறது இவ்வுலகில். இவ்வாழ்வில். விஷபரீட்சை செய்து கொண்டேயிருக்கிறது மனித இனம் யுகம் யுகமாக. யோசித்துப் பார்த்தால் எது விஷம் எவை விஷம் என்பதை உய்த்துணர்வதையே வாழ்க்கையின் சாரமாகவும் கொண்டிருக்கிறது மானுடம். விஷங்கள் வசீகரமானவை என்பது புறக்கணிக்க இயலாத உண்மை. விரியன் குட்டி மிகச் சிறியது. அதன் நாவு அதனினும் சிறியது. அதன் நாவின் நுனியில் இருக்கும் விஷம் நுண்ணினும் நுண்ணியது. விரியன் விஷம் தீண்டப்பட்டு உடலில் நுழைந்தால் நுண்ணினும் நுண்ணிய ஊசிமுனைத்துளி தீண்டிய பெரு உடலின் முழு அளவும் வியாபிக்கிறது. மயக்கி மூச்சு திணறச் செய்து நுரை கக்க வைத்து ஜீவபலி கொண்டு ஓய்கிறது. விரியன் நா தீண்டல் பலியை சில நிமிடங்களில் நிகழ்த்தி விடுகிறது. வருடக் கணக்காக கொஞ்சம் கொஞ்சமாக அணு அணுவாக அழித்து வேடிக்கை காட்டும் விஷங்கள் பல இருக்கின்றன. துரைக்கண்ணுவை அழித்தது எந்த மெல்லக் கொல்லும் விஷம் ? அவள் வாழ்வில் என்ன ரூபத்தில் உள்நுழைந்து எவ்விதம் மீட்பின்றி அவளை அழித்தது என்னும் கேள்வியை ஒரு துயரச் சித்திரம் மூலம் முன்வைக்கும் கதை தி. ஜானகிராமனின் ‘’ஆடை’’.