Monday, 9 December 2024

சாமானிய பிரஜையாக உணர்தல்

எப்போதுமே என்னை இந்நாட்டின் சாமானிய பிரஜையாக மட்டுமே உணர்ந்திருக்கிறேன். சாமானிய குடிகளில் ஒருவனாக மட்டுமே எனது எண்ணங்கள் இருந்திருக்கின்றன. அந்த அடிப்படையிலிருந்தே சிந்தித்திருக்கிறேன். ஒரு கிராமத்திலிருந்து பக்கத்தில் மூன்று கிலோமீட்டரில் இருக்கும் நகரத்துக்கு கால்நடையாக நடந்து செல்லும் ஒரு கிராமத்து மனிதனாகவே என்னை எப்போதும் எண்ணிக் கொள்கிறேன். அவனுக்கு எப்போதும் ஆட்டோ கட்டுபடி ஆவதில்லை. ஒரு டவுன்பஸ் அவன் செல்லும் நேரத்தில் அமைந்தால் அதில் ஒரு சிறு மகிழ்ச்சி.  இந்த தொலைவைக் கடந்து செல்ல இன்னும் சில வேலைகளைக் கவனித்துத் திரும்ப இரு சக்கர வாகனம் வசதியாக இருக்கிறது என்பதால் கிராமத்து சாமானிய மனிதன் இப்போது இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்துகிறான். அந்த விதமாகவே நானும் பயன்படுத்துகிறேன். வெளியூர் செல்ல வேண்டுமென்றால் பொதுப் போக்குவரத்து வசதிகளையே சாமானியன் பயன்படுத்துகிறான். நானும் அவ்விதமே செய்கிறேன். ஒரு ஊருக்குச் செல்ல ரயில் இருக்கிறதா என்பது முதல் பரிசீலனை. இல்லையெனில் பேருந்து. இந்த இரண்டு வாய்ப்புகளுக்குள் ஒன்றை மட்டுமே எப்போதும் தேர்ந்தெடுப்பேன். ஆம்னி பேருந்து என்பதையும் வாடகை டாக்ஸி என்பதையும் நான் மிகப் பெரிய சொகுசாகவே எண்ணுவேன். என்னிடம்  கார் இருக்கிறது. இருப்பினும் வெளியூர் செல்ல பொதுப் போக்குவரத்து மட்டுமே. என்னுடைய தொழில் நிமித்தம் எங்கேனும் செல்ல கார் எடுப்பதுண்டு. அதிலும் அதிகமும் பைக் மட்டுமே பயன்படுத்துவேன். 

எனது மனம் எப்போதுமே சிக்கனத்தை விரும்பியிருக்கிறது. காந்திய சிந்தனைகளின் தாக்கம் காரணமாக இருக்கலாம். உண்மையில் காந்தியை அறிய நேரும் எந்த சிறுவனுக்கும் எழும் முதல் கேள்வி என்பது காந்தி ஏன் சட்டை அணியாமல் துண்டு மட்டுமே போர்த்தியிருக்கிறார் என்பதாகவே இருக்கும். இந்த நாட்டின் சாமானிய மனிதனின் எளிய உடையை அவர் அணிந்திருக்கிறார் என்பதே அதற்கான பதில். எனக்கும் அந்த கேள்வி எழுந்தது. என்னிடமும் அந்த பதில் வந்து சேர்ந்தது. சாமானியனின் உடை அணிந்த ஒருவன் சாமானியனாகவே தன்னை உணர்ந்த ஒருவன் நாட்டின் கோடானுகோடி சாமானியர்களைத் தன் அகத்தில் ஏந்தியிருந்த ஒருவன் உலகின் மிகப் பெரிய ஆதிக்க சக்தியை ஆட்டிப் படைத்தார் என்பதில் குறியிட்டு ரீதியில் ஒரு அழகு இருக்கிறது. 

எனக்கு கதராடை மட்டுமே அணிய வேண்டும் என்ற விருப்பம் உண்டு. அந்த விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. 

ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சிதம்பரம் சென்றிருந்தேன். வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்று அங்கிருந்து பேருந்தில் ஏறி சிதம்பரம் சென்றடைந்து கடைத்தெருவில் அமைந்திருக்கும் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். எனது நண்பர் ஒருவரை அங்கே சந்தித்தேன். அவர் காரில் வந்திருந்தார். என்னிடம் காரில் வந்தீர்களா என்று கேட்டார். பேருந்தில் வந்தேன் என்று சொன்னேன். காரில் வந்திருக்கலாமே என்றார். அவருக்கு நான் ஒரு பதில் சொன்னேன்.

அதாவது, ஒரே தூரத்தை ஒரு பேருந்தும் ஒரு காரும் கடக்கும் போது பேருந்து உமிழும் கார்பன் டை ஆக்சைடை விட 22 மடங்கு கார்பன் டை ஆக்சைடை கார் உமிழ்கிறது. இந்த திருமணத்துக்கு 700 பேர் வந்திருக்கிறார்கள் என்றால் அதில் 15 பேர் காரில் வந்திருந்தால் அது ஏற்கக் கூடியது. அதற்கு மேல் என்றால் ஒட்டு மொத்த அமைப்பில் நெருக்கடி உண்டாகிவிடும். நெருக்கடியான அமைப்பு நீண்ட நாள் நீடிக்காது என்றேன்.