Sunday, 18 May 2025

அருட் பேரொளி

இன்று காலை 6.30க்கு கடலூர் சீனுவுக்கு ஃபோன் செய்தேன். ‘’சீனு ! 7.15க்கு நான் கிளம்பிடுவேன். அதே டயத்துக்கு நீங்களும் கிளம்புங்க. நாம புவனகிரியில மீட் பண்ணலாம். அங்கேயிருந்து மருதூர், கருங்குழி, சித்தி வளாகம், வடலூர் போவோம்’’ என்றேன். சீனு சரி என்றார். 7.15க்கு புறப்பட்டதும் சீனுவுக்கு ஃபோன் செய்தேன். ‘’சீனு ! வாண்டுமாமா வோட சுயசரிதை உங்க கிட்ட இருக்குன்னு சொன்னீங்கள்ள. அதை எடுத்துட்டு வரீங்களா! படிச்சுட்டு தரேன்’’ சீனு ‘’பஸ்ஸ்டாப் வந்துட்டனே’’ என்றார். ’’பரவாயில்லை திரும்பி வீட்டுக்கு போக வேண்டாம். இந்த வாரத்துல இன்னொரு நாள் வாங்கிக்கறன்’’. 8.15க்கு புவனகிரி சென்றடைந்தேன். நான் சென்று பத்து நிமிடத்தில் சீனு பேருந்தில் வந்திறங்கினார். மருதூர் நோக்கி பயணமானோம். 

எனக்கு மிகச் சிறு வயதிலிருந்தே வள்ளலார் மீது ஈடுபாடு உண்டு. அப்போது நான் பாரதியின் கவிதைகளை மிகத் தீவிரமாக வாசிப்பேன். சொற்கள் உணர்ச்சி பெற்று உயிர் கொண்டு எழும் மாயத்தை எனக்குக் காட்டியவன் பாரதி. இன்றும் பாரதியின் எந்த கவிதையும் உள எழுச்சி கொள்ளச் செய்கிறது. பாரதியை வாசித்த சிறுவனாயிருந்த எனக்கு வடலூர் வள்ளலாரின் திருவருட்பா மிகுந்த ஈர்ப்பை அளித்தது. அவரது சொற்களையும் திரும்ப திரும்ப வாசிப்பேன். எனது அன்னையின் தாய்மாமா வள்ளலாருக்கு ஆலயம் அமைக்க அவர்கள் கிராமத்தில் தனது சொந்த நிலத்தை தானமாக அளித்தவர். அந்த ஆலயத்தை முன்னின்று நிர்மாணித்து தனது இறுதி மூச்சு வரை அந்த ஆலயத்தின் பூசனைப் பொறுப்பை ஏற்று நடத்தியவர். அந்த கிராமத்தின் எல்லா குடும்பங்களும் தைப்பூசத்தன்று ஒன்றாகக் கிளம்பி வடலூர் சென்று  ஜோதியை வழிபட்டு அன்னதானம் செய்வார்கள். அவர்களுடன் சில முறை மருதூர், கருங்குழி, சித்தி விளாகம் ஆகிய ஊர்களுக்கு சென்றிருக்கிறேன். வடலூருக்கு அவ்வப்போது செல்வேன். 

மனிதன் ஒரு நாளின் கிரமத்தை எவ்விதம் வகுத்துக் கொள்ள வேண்டும் என தன் வாழ்நாள் முழுவதும் அறுதியிட்டுக் கூறியவர் வள்ளலார். தனது உடலை எவ்விதம் மனிதனானவன் பராமரிக்க வேண்டும் ; தனது மனத்தை எவ்விதம் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்; எவ்விதம் இறைமையின் ஒளியுடன் தொடர்பில் இருக்க வேண்டும் தனது செய்யுள்கள் மூலமும் உரைநடையின் மூலமும் எடுத்துச் சொன்னவர் வள்ளலார். இந்திய மரபில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஒவ்வொரு குடும்பத்தின் வழிபாட்டிலும் இருந்த தீபம் ஏற்றி வழிபடும் வழக்கத்தை அருட் பெரும் ஜோதி என்றவர் வள்ளலார். ‘’அதிதி தேவோ பவ’’ என்னும் இந்திய மரபின் பொருளாக உயிர்களுக்கு உணவளிக்கும் அன்னதானத்தை மேலான செயல்முறையாக அளித்தவர் வள்ளலார். 

புவனகிரிக்கு அருகில் இருக்கும் மருதூர் அவர் அவதரித்த தலம். அங்கே இருந்த அவர் பிறந்த இல்லம் புனரமைப்பு பணிகளுக்கு உட்பட்டிருந்தது. அங்கிருந்து கருங்குழி சென்றோம். அவர் சில ஆண்டுகள் இங்கே வசித்திருக்கிறார். பல அற்புதச் செயல்களை நிகழ்த்திக் காட்டிய இடம் அது. அங்கே சில நிமிடங்கள் அமர்ந்திருந்தோம். பின்னர் சித்தி விளாகம் சென்றோம். அவர் தன் உடலை காற்றிலும் ஆகாயத்திலும் கரைத்துக் கொண்ட அறை சித்தி விளாகத்தில் உள்ளது. அந்த அறை முன் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தோம். பின்னர் அங்கிருந்து வடலூர் சென்றோம். வடலூரில் தினமும் காலைப் பொழுதில் 11.30 முதல் 12 மணி வரை திரை விலக்கப்பட்டு ஒளி வழிபாடு நிகழும். அந்நிகழ்வுக்குச் சென்று கலந்து கொண்டு வணங்கினோம். மதியம் 12.30க்கு வள்ளலாரின் அணையா நெருப்பிருக்கும் அடுப்பில் சமைக்கப்பட்ட அன்னதான உணவை உண்டோம். 

மதியம் புறப்பட்டு சிதம்பரம் சென்றோம். வழியில் கொஞ்ச நேரம் கண் அயர்கிறேன் என்று கூறி ஒரு கால்வாயின் கட்டையில் செய்தித்தாளை விரித்துப் படுத்தேன். சிதம்பரத்திலிருந்து கொடியம்பாளையம் கடற்கரைக்குச் சென்றோம். சீனுவை கொள்ளிடத்தில் பேருந்தில் ஏற்றி விடுகிறேன் எனக் கூறி அழைத்து வந்தேன். சீனு சீர்காழியில் இறங்கிக் கொள்கிறேன் என்று சொன்னார். சீர்காழியில் இளையோர் இருவர் அரிதான சைவ உணவுக்கான ஹோட்டல் ஒன்றைத் துவக்கியுள்ளனர். அங்கு உணவு உண்டோம். சீனுவை பேருந்தில் ஏற்றி விட்டு ஊர் வந்து சேர்ந்தேன். 

***

இந்த பயணத்தில் நான் சீனுவிடம் ஏதேனும் ஒரு நகரத்தில் அந்த நகரத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு மதிய உணவை அன்னதானமாக வழங்க விரும்பும் செயல்திட்டம் குறித்து கூறினேன். 

செங்கற்களைக் கொண்டு கட்டிடம் எழுப்புவதற்கு மாற்றாக மூங்கிலையும் தென்னங்கீற்றையும் கொண்டு வாழிடம் உருவாக்கிக் கொள்வதன் சாத்தியங்கள் குறித்து கூறினேன். 1000 சதுர அடி வீட்டினை செங்கல் மற்றும் சிமெண்ட் மூலம் கட்ட குறைந்தபட்சம் ரூ. 20,00,000 செலவாகும். 1000 சதுர அடி கூரை வீட்டினை அதிகபட்சம் ரூ. ஒரு லட்சம் செலவில் அமைத்து விடலாம். மீதமாகும் தொகைக்கு ஆண்டுக்கு ரூ 2,50,000 வட்டியாகக் கிடைக்கும். மூன்று ஆண்டுக்கு ஒரு முறை கீற்றை புதுப்பித்துக் கொண்டால் கூட ஆண்டுக்கு ரூ.2,20,000 மிச்சமாகும்.