Monday, 19 May 2025

நமது அடையாளங்கள் நமது பெருமைகள்

நூல் : நமது அடையாளங்களும் பெருமைகளும் ஆசிரியர் : வெ. இறையன்பு, க. கந்தவேல் பக்கம் : 119 விலை : ரூ.100 விற்பனை உரிமை : கிழக்கு பதிப்பகம், சென்னை.  

நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். நமது நாட்டை நமது நாட்டுக்குப் படையெடுத்து வந்தவர்களும் வணிகம் செய்ய வந்தவர்களும் அடிமைப்படுத்தி ஆண்டனர். நமது செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். நம் நாட்டு மக்களின் உழைப்பைச் சுரண்டினர். அன்னிய ஆட்சிக்கு எதிராக நம் தேசம் தொடர்ந்து போராடிய வண்ணமே இருந்தது. அந்த போராட்டத்தின் இறுதிப் பகுதி எனக் கூறக் கூடியது நாம் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியது. இருபதாம் நூற்றாண்டின் மீது ஏகாதிபத்திய சக்திகள் திணித்த இரண்டு உலகப் போர்களின் சூழலில் நம் நாடு விடுதலை பெற்றது. அன்னிய ஆட்சி நம்மை ஆண்ட போது நம் நாட்டின் சாமானிய குடிமக்கள் அந்த ஆட்சியை எதிர்த்தனர். நம்மை ஆண்ட பிரிட்டிஷ் உலகின் பல நாடுகளை தனது காலனி நாடுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்தது. உலகின் மிகப் பெரிய இராணுவம் அவர்களிடம் இருந்தது. இதனை அறிந்திருந்தும் இந்தியாவின் சாமானிய குடிகள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தனர். பலவிதமான அடக்குமுறை சட்டங்களுக்கும் அடிபணியாமல் எதிர்த்தனர். இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது சாமானிய நடுத்தர ஏழை மக்கள் மேற்கொண்ட போராட்டம் என்பதை வரலாற்றின் சுவடுகளில் நாம் கண்டு அறியலாம். 

உலகில் ஜனநாயகம் பரவலாகியிருக்கும் இருபத்து ஓராம் நூற்றாண்டிலும் உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட தேசமும் நமது அண்டை நாடுமான சீனாவில் ஜனநாயக ஆட்சி நடைபெறவில்லை ; சர்வாதிகார ஆட்சியே நடைபெறுகிறது. ஈரான், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளில் ஜனநாயகம் இல்லை. வட கொரியாவிலும் மயன்மாரிலும் ஜனநாயகம் இல்லை. நாம் உயிர்ப்புள்ள ஒரு ஜனநாயக நாடாக இயங்கிக் கொண்டிருப்பதை இந்த பின்னணி மூலம் மேலதிகமாகப் புரிந்து கொள்ள முடியும். 

ஒரு நாடு ஜனநாயகத்தை தனது வழிமுறையாகக் கொண்டிருப்பது என்பது சிறப்பானது. ஒரு ஜனநாயக நாட்டின் அடையாளங்கள் என்பவை மேலும் சிறப்பானவை. 

நமது நாட்டின் தேசிய சின்னங்களைக் குறித்து ‘’நமது அடையாளங்களும்  பெருமைகளும் ‘’ என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. வெ. இறையன்பு, க. கந்தவேல் ஆகியோர் இந்நூலின் ஆசிரியர்கள். நமது தேசிய சின்னங்களைக் குறித்தும் அவை தேசிய சின்னங்களாக அமைந்தது குறித்தும் அவற்றுடன் தேச மக்களின் ஆழுள்ளம் எவ்விதம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தொடர்புறுத்தலில் இருந்து வந்திருக்கிறது என்பது குறித்தும் இந்நூல் எடுத்துரைக்கிறது. நமது தேசியச் சின்னங்கள் குறித்து அறிவதன் மூலம் நம் பண்பாடு குறித்தும் நம் பண்பாட்டின் சாரம் குறித்தும் நாம் அறிகிறோம். 

{*** கட்டுரையாளர் குறிப்பு : நமது அடையாளங்களும் பெருமைகளும் நூலின் ஆசிரியர்கள் வெ.இறையன்பு மற்றும் க. கந்தவேல் ஆகியோர் நம் தேசியச் சின்னங்கள் குறித்து தர்க்கபூர்வமான விபரங்களையும் தரவுகளையும் விரிவாகப் பதிவு செய்திருக்கின்றனர். அவற்றை வாசித்த கட்டுரையாளர் தனது உணர்வின் அடிப்படையில் தேசியச் சின்னங்கள் குறித்து எழுதியிருக்கிறார்.}  

சாரநாத் கற்றூண் : நான்கு திசைகளிலும் கர்ஜிக்கும் சிங்கங்களின் சிற்பம் கொண்ட சாரநாத் கற்றூணே நம் தேசிய சின்னம் ஆகும். பௌத்தம் அந்த நான்கு சிங்கங்களின் கர்ஜனையை ஞானத்தின் கர்ஜனை என்கிறது. எவ்விதம் சிம்ம கர்ஜனை காடெங்கும் நிறைந்து இருக்குமோ அவ்விதம் ஞானம் உலகம் முழுமைக்கும் நிறைந்திருக்க வேண்டும் என்னும் குறியீடே நான்கு சிங்கங்களின் சிலை. தன்னை அறிதலே தியானம் என எடுத்துரைத்த பெருந்தகை புத்தர். தன்னை அறிந்தவனே யாவும் அறிந்தவன் என்னும் புத்தரின் சொல் ஆன்மீக உலகில் மிகப் பெரிய பாய்ச்சல். மனித வாழ்வுக்கு அடிப்படையாக கருணை இருக்க வேண்டும் என விரும்பிய புத்தரின் சின்னமே நம் நாட்டின் தேசிய சின்னமாக இருக்கிறது. 

மூவர்ணக் கொடி : அகலமும் நீளமும் முறையே 2 : 3 என்ற விகிதத்தில் அமைந்த காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வர்ணங்களைக் கொண்ட நடுவில் அசோக சக்கரம் கொண்ட கொடியே நம் மூவர்ணக் கொடி ஆகும். சாரநாத் கற்றூணில் உள்ள சக்கரமே நம் தேசியக் கொடியில் அமைந்துள்ளது. அதனை பௌத்தம் ‘’அறவாழி’’ அல்லது ‘’தர்ம சக்கரம்’’ என்கிறது. திருக்குறளில் அறவாழி என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் அறிவோம். 

புலி : நமது தேசிய விலங்கு புலி ஆகும். புலி தனது இரையை வேட்டையாட பல மணி நேரம் அசைவின்றி நிற்கும் இயல்பு கொண்டது. யோகத்துக்கும் தவத்துக்கும் மிகத் தேவையான இயல்பாகும் அது. புலியின் பிரும்மாண்ட உருவமும் அதன் பராக்கிரமமான இயல்பும் அதனை நம் நாட்டின் தேசிய சின்னமாக்கியுள்ளது. சபரிமலை ஐயப்பன் புலியை வாகனமாகக் கொண்டவன். கர்நாடகத்தில் இருக்கும் மாதேஸ்வர சுவாமிக்கும் புலியே வாகனம். 

மயில் : நமது தேசியப் பறவை மயில் ஆகும். நாட்டிய சாஸ்திரம் நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ளது. அதில் தோகை விரித்தாடும் மயில் என்பது ஒரு முக்கிய படிமம் ஆகும். ஷண்மதங்களில் முக்கியமானதான கௌமாரத்தின் முழு முதல் தெய்வமான குமரன் மயிலைத் தன் வாகனமாகக் கொண்டவன். திருமயிலை எனப்படும் மயிலாப்பூரில் அம்பிகை கபாலீசனை மயில் வடிவத்தில் வழிபட்டதாக தொன்மம். மயிலாடுதுறையில் அம்பிகைக்கு ஈசன் மயில் வடிவில் காட்சி கொடுத்ததாக தொன்மம். 

டால்ஃபின் நமது நாட்டின் தேசிய நீர்வாழ் விலங்கு ஆகும். 

யானை : நமது நாட்டின் பாரம்பர்ய விலங்கு யானை. ஆனைமுகனான விநாயகர் வழிபாடு நம் நாட்டில் அனாதி காலமாக இருக்கிறது. விநாயகர் தனது தந்தத்தை முறித்து மகாபாரதம் எழுதியதாகத் தொன்மம். காட்டின் அரசன் யானை. 

ஆலமரம் :    ஆலமரம் நம் நாட்டின் தேசிய மரம் ஆகும். சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு ஆலமரத்தின் அடியில் தென் திசை நோக்கி அமர்ந்து மௌனமாயிருந்து சின் முத்திரை காட்டி ஞானத்தை உபதேசித்ததாக ஐதீகம். தமிழ் மரபு சிவனை ஆலமர் செல்வன் என்கிறது. 

தாமரை : தாமரை நம் நாட்டின் தேசிய மலராகும். யோக மரபில் தாமரை ஞானத்தின் குறியீடு. மானுட அகம் முழுமையடைவதை தாமரையின் மலர்தல் குறிக்கிறது.  

நமது மாநிலத்தின் சின்னங்கள் : கோபுரம் நமது மாநிலச் சின்னம் ஆகும். நமது மாநில விலங்கு வரையாடு. மணிப்புறா நமது மாநிலப் பறவை. செங்காந்தள் நமது மாநில மலர். பனை நம் மாநில மரம்.