சென்ற வாரம் ஐ.டி கம்பெனி உரிமையாளரான நண்பரைச் சந்தித்து வந்த பின் அடுத்த சந்திப்பை இந்த வாரம் திங்கள் அல்லது செவ்வாய்கிழமைகளில் நிகழ்த்தலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். நண்பரை சந்தித்தது வெள்ளிக்கிழமை. சனி ஞாயிறு இரு தினங்கள் அவரது நிறுவனத்துக்கு விடுமுறை. வெள்ளிக்கிழமை சந்தித்த பின் திங்கட்கிழமை சந்திப்பது என்பது கிட்டத்தட்ட அடுத்த நாளே சந்திப்பதற்கு சமம். எனவே இரு தினங்கள் காத்திருந்தேன். திங்கள் செவ்வாய் இரண்டு நாட்கள் கடந்தன. புதன்கிழமையும் சென்னை புறப்படவில்லை. இங்கே இருந்த வேறு சில பணிகளை மேற்கொண்டிருந்தேன். வியாழக்கிழமை காலை 2 மணி அளவில் விழிப்பு வந்தது. சட்டென முடிவெடுத்து சென்னை புறப்பட்டேன். காலை 3 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினேன். மெல்ல நடந்து பேருந்து நிலையம் சென்றேன். அதன் அருகே ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்கே காலை 4 மணிக்கு சிற்றுண்டி தயாராகும். அங்கே உணவருந்தினேன். ரயிலில் செல்வதா அல்லது பேருந்தில் செல்வதா என்று யோசித்தேன். அப்போது நேரம் காலை 4.30. காலை 4.45க்கு திருச்செந்தூர் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இருந்தது. ஆனால் அதன் பொதுப்பெட்டி பயணிகளால் நிரம்பி வழியும். எனவே அதனைத் தவிர்த்து பேருந்தில் சென்னை புறப்பட்டேன். ஊரிலிருந்து பேருந்து புறப்பட்டதும் நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஊரிலிருந்து புறப்பட்டு விட்டேன் என. காலை 6 மணிக்கு சந்திப்பு அலுவலகத்திலா அல்லது வேறு இடத்திலா என்பதைத் தெரிவிக்கிறேன் என்று அவரிடமிருந்து பதில் குறுஞ்செய்தி வந்தது. அடுத்தடுத்து பேருந்துகள் மாறினாலும் நண்பகலுக்கு பத்து நிமிடம் முன்பு சென்னை மவுண்ட் ரோடு அடைந்தேன். அருகே இருந்த சங்கீதா ஹோட்டலில் மதிய உணவு அருந்தி விட்டு நண்பரின் செய்திக்காக காத்திருந்தேன். நண்பர் அப்போது அலுவலகத்தில் இல்லை. வெளிநாட்டு கிளைண்ட் களுடன் ஒரு சந்திப்பில் இருந்தார். அவரது குறுஞ்செய்தி வந்தது. சந்திப்பு முடிய மேலும் சில மணி நேரங்கள் ஆகும் என்ற நிலையில் நான் இருந்த இடத்துக்கு அருகில் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் இருந்தது. அங்கு சென்றேன்.
நூலகத்தில் இருப்பது என்பது மனதைப் புத்துணர்வு கொள்ளச் செய்யும் ஒரு செயல். ஆயிரக்கணக்கான நூல்களின் மத்தியில் இருப்பது என்பது சிந்தனையின் மீதும் அறிவுச்செயல்பாட்டின் மீதும் மீண்டும் மீண்டும் நம்பிக்கை கொள்ளச் செய்யும் செயல். பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் லண்டன் பென்குயின் கிளாசிக் வெளியிட்டிருந்த பாஷோவின் கவிதை நூல் ஒன்றை வாசித்தேன். இலக்கிய விமர்சகர் டி.எஸ்.எலியட்டின் கடிதங்கள் என ஒரு நூல் இருந்தது. அதனை வாசித்தேன். மார்க் டிவைனின் நாவல்கள் தொகுப்பு இருந்தது. அதில் சில அத்தியாயங்களை வாசித்தேன். நூலகங்கள் நூல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் வசதியை அளிக்கின்றன. எனினும் ஒரு வாரத்தில் சில மணி நேரங்களாவது நூலகத்தில் செலவிடுவது என்பது நலம் பயப்பது என்று எண்ணினேன். அத்தனை நூல்கள் இருந்த போதும் நான் தேர்ந்தெடுத்து வாசித்த நூல்களில் எனது விருப்பத்துக்குரிய எழுத்துக்கள் இருந்தது மகிழ்ச்சி அளித்தது.
நண்பர் அலுவலகத்தில் சந்திக்குமாறு குறுஞ்செய்தி அனுப்பினார். அலுவலகத்தில் எல்லா ஊழியர்களும் புறப்பட்டு போயிருந்தனர். நண்பரும் ஒரு சில ஊழியர்களும் மட்டும் இருந்தனர். நண்பர் எங்கள் விவாதப் பொருள் குறித்து சில விஷயங்களைச் சிந்தித்திருந்தார். அவர் சிந்தித்திருந்த விஷயங்களை என் முன் வைத்தார். அடுத்த செயல்பாடுகள் என்ன என்பதை நாங்கள் இருவரும் சேர்ந்து சிந்தித்தோம். இந்த சந்திப்பு எங்கள் விவாதப் பொருளில் சில முன்னகர்வுகளை உருவாக்கியிருந்தது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சி. நண்பரின் காரில் எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்று இறங்கிக் கொண்டேன். நண்பருக்கு அதன் பின் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சில சந்திப்புகள் இருந்தன.
எழும்பூரிலிருந்து ஊருக்கு ‘’அந்த்யோதயா’’ ரயில் டிக்கெட் எடுத்துக் கொண்டேன். மின்சார ரயிலில் தாம்பரம் சென்றடைந்தேன். அங்கே ஒரு ரயில் நின்றிருந்தது. அறிவிப்பில் விழுப்புரம் மயிலாடுதுறை திருவாரூர் காரைக்குடி மார்க்கமாக செங்கோட்டை செல்லும் ரயில் இன்ன நடைமேடையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்று பார்த்தேன். ரயிலின் என்ஜினுக்கு அருகில் இருக்கும் பொதுப்பெட்டியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரயிலின் கடைசிப் பெட்டியில் இருந்த பொதுப்பெட்டியில் ஒரு சிலர் மட்டுமே இருந்தனர். அங்கே சென்று அமர்ந்து கொண்டேன். இரவு 9 மணிக்குப் புறப்பட்ட ரயில் நள்ளிரவு 1.30க்கு ஊர் வந்து சேர்ந்தது. ரயில் நிலைய பெஞ்சில் படுத்து உறங்கி விட்டேன். நடுவில் விழிப்பு வந்தது. கிழக்கு வானில் விடிவெள்ளி ஒளிர்ந்து கொண்டிருந்தது. சில கணங்களில் மீண்டும் உறங்கி விட்டேன். காலை 5.45க்கு எழுந்து வீட்டுக்குப் புறப்பட்டேன்.
காலை 7.45க்கு நண்பர் ஒருவருடன் தஞ்சாவூர் செல்ல வேண்டும். மீண்டும் ரயில் நிலையம் வர வேண்டும். வீட்டுக்குச் சென்று குளித்து தயாராகி மீண்டும் ரயில் நிலையம் வந்தேன். நண்பர் குத்தாலம் ரயில் நிலையத்தில் இணைந்து கொள்வதாகக் கூறினார். இருவரும் 9.15 மணி அளவில் தஞ்சாவூர் சென்றடைந்தோம். எனது நண்பரின் உறவினர் சிங்கப்பூரில் பணி புரிகிறார். அவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தார். அவருடன் அவர் வீட்டிலிருந்து தொலைபேசி மூலம் பேசினேன். அவரிடம் முதல் முறையாகப் பேசுகிறேன். எனினும் விஷயங்களை முழுமையாகக் கூறினேன். அவரும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டார் என்பது எனக்கு மகிழ்ச்சி.
மதியம் 1.30க்கு தஞ்சாவூர் ரயில் நிலையம் வந்தடைந்தோம். அங்கிருந்து 3 மணிக்கு ஊர் வந்து சேர்ந்தோம்.
ஊர் வந்து சேர்ந்ததும் சனிக்கிழமை அன்று ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. அவருக்கு ஃபோன் செய்தேன். ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. அவரை சந்திக்க நேரில் சென்றேன். அவர் 30 கி.மீ தொலைவில் இருந்தார். அவரது கடையில் அவர் இல்லை. கடை ஊழியர் அவர் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை சென்றிருப்பதாகக் கூறினார். அவர் ஃபோன் செய்தால் எனக்கு ஃபோன் செய்யுமாறு கூறச் சொல்லி விட்டு புறப்பட்டேன். ஊர் வந்து சேர்ந்ததும் அவரிடமிருந்தது ஃபோன் வந்தது. ஞாயிற்றுக்கிழமை சந்திப்பை உறுதி செய்தேன்.