Sunday, 25 May 2025

ஒரு ஆலோசனை

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் என்னை விட இருபது ஆண்டுகள் வயதில் மூத்தவர். அவரது குடும்பம் விவசாயக் குடும்பம். அவரது தந்தை பள்ளி தலைமை ஆசிரியர். எனது நண்பர் பொறியியல் பட்டதாரி. அவரது சகோதரர்களும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள். அவரது சகோதரர்கள் அனைவரும் பல வருடங்கள் சிங்கப்பூரில் பணியாற்றினர்.  அவரை எனக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும். நான் சிறுவனாயிருந்த போது அவரை முதன் முறையாகச் சந்தித்தேன். அவரை முதன் முறையாகச் சந்தித்த போது அவரை அவரது நண்பர்கள் சூழ்ந்திருந்தனர். நண்பர்கள் என்று கூறுவதை விட மனிதர்கள் என்று கூறுவது மேலும் பொருத்தமாக இருக்கும். அவரைச் சூழ்ந்திருக்கும் மனிதர்கள் யாவருமே அவருக்கு நண்பர்களே. அவ்விதமான வாழ்க்கை இலட்சத்தில் ஒருவருக்கே அமைகிறது. சக மனிதன் மீது மரியாதையும் பிரியமும் கொண்டிருப்பது என்பது ஓர் அரிய பண்பு ; எல்லா மனிதர்களும் அடைய வேண்டிய உயர்நிலை அது. 

தனது பள்ளி நாட்களிலிருந்து சமூகச் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டு பல்வேறு அமைப்புகளில் பணியாற்றியிருக்கிறார். அவர் பங்கெடுத்துக் கொண்ட இயக்கங்களின் எண்ணிக்கை உண்மையில் வியப்பூட்டுவது. எவ்விதமான சமூகச் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தாலும் அவரது அகம் அன்புமயமானது ; ஈரம் கசியும் இதயம் கொண்டது. எந்த அமைப்பிலும் இத்தகைய இயல்பு கொண்ட ஒருவர் முழுமையாகப் பொருந்திப் போவது என்பது துர்லபமே. எனவே அவர் அமைப்புகளிலிருந்து வெளியேறிக் கொண்டும் இருந்தார். அமைப்புகளின் இரும்பு விதிகளுக்கு தன்னை முழுதளிக்கவில்லை என்பதே அவரது வெளியேற்றங்களுக்கான காரணம். அவற்றை இயல்பாக எடுத்துக் கொண்ட மன அமைப்பை இயற்கை அவருக்குக் கொடையாக அளித்தது என்று கூறலாம். 

அவரது தொழில் கட்டுமானம். பிரமாதமாக கட்டிட பிளான்களை உருவாக்கக் கூடியவர். முன்னர் அவரே கணிணியில் பிளான்களை உருவாக்குவார். செவ்வக வடிவம் மீது அவருக்கு பெரும் ஈடுபாடு உண்டு. ஐசோமெட்ரிக் வகை வெளித்தோற்றங்கள் அவரது திட்டமிடுதலின் சிறப்பம்சம் ஆகும். தமிழகத்தின் மிக அழகான வீடுகளில் அவரது வீடும் ஒன்று என்று என்னால் ஒரு கட்டிடப் பொறியாளனாகக் கூற முடியும். 

அவரது மாவட்டத்திலும் அவரது மாவட்டத்தைச் சுற்றியிருக்கும் ஐந்து அல்லது ஆறு மாவட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் பெரும்பாலான குடும்பங்களை அவர் அறிவார். ’’அறிவார்’’ என்றால் என்ன அர்த்தம் எனில் ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பவர்களை அவர்கள் ஒவ்வொருவரின் பெயர் படிப்பு உத்யோகம் என ஒவ்வொன்றையும் அறிவார். யாவரிடமும் அவருக்கு சொல்வதற்கென எப்போதும் ஏதேனும் சொற்கள் இருந்து கொண்டேயிருக்கின்றன. யாவருக்கும் அவரிடம் சொல்வதற்கெனவும் சொற்கள் இருக்கின்றன. 

அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்போதும் அவரைச் சந்தித்து ஆலோசனைகள் கேட்ட வண்ணம் இருக்கின்றனர். எல்லா அரசியல் கட்சிக்காரர்களும் அவரிடம் ஆலோசனைகளும் அபிப்ராயங்களும் கேட்கின்றனர். இந்நிலை மிகவும் அபூர்வமானது என்பதை விபரம் அறிந்தவர்கள் அறிவார்கள். 

நான் அவரை 30 ஆண்டுகளாக அறிவேன் என்றாலும் இந்த 30 ஆண்டுகளில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவே நாங்கள் சந்தித்திருக்கிறோம். பிரியம் கொண்ட அன்பு நிறைந்த மனிதர்களை நான் வியந்து நோக்கும் இயல்பு கொண்டவன் என்பதால் எங்கள் உரையாடல்கள் மிகச் சில சொற்களிலேயே நிகழ்ந்திருக்கிறது. 

நண்பர் தமிழார்வம் மிக்கவர். சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை வாசிப்பவர். தமிழகத்தின் மூலை முடுக்குகள் அனைத்துக்கும் சென்றிருப்பவர். தனது பயண ஈடுபாட்டின் விளைவாக நம் நாடு முழுவதும் பயணித்தவர். 

எனது நண்பரிடம் அவரது சுயசரிதையை எழுதுமாறு என்னுடைய ஆலோசனையைக் கூறியிருக்கிறேன். ஜனநாயக யுகத்தின் பீடு என்பது ஒரு சாமானிய குடிமகனுக்கு அது அளித்திருக்கும் சுதந்திரமே. ஜனநாயக யுகத்தில் ஒவ்வொரு குடிமகனுமே மேன்மையானவனே. உலக வரலாற்றில் சாமானியர்களுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது ஜனநாயக யுகத்திலே மட்டுமே ஆகும். நண்பர் தனது சுயசரிதையை எழுத வேண்டும். எழுதப்பட்டால் அது அவருடைய வாழ்க்கையாக  மட்டும் இருக்காது ; மாறாக ஒரு மாவட்டத்தின் ஒரு பிராந்தியத்தின் வாழ்க்கையாகவும் வரலாறாகவும் அது இருக்கும். அவரது கிராமம் மிக சரித்திர பிரசித்தி பெற்ற கிராமம் ஆகும். தமிழகத்தின் ஈர்ப்பு மிக்க நில அமைப்பு அவரது பிராந்தியத்துக்குரியது. அவரது பள்ளி நாட்கள் மற்றும் அவரது உறவினர்களின் கதை மிக சுவாரசியம் கொண்டது. தனது சமூகச் செயல்பாடுகளின் கதையை அவர் கூறும் போது ஒரு காலகட்டத்தின் உணர்வெழுச்சிகளின் கதையாக அது இருக்கக் கூடும். தனது கட்டுமான அனுபவங்களை அவர் எழுதும் போது அத்தொழிலில் இருக்கும் பலருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும். 

என் மனதில் பட்டதை நண்பருக்குக் கூறியிருக்கிறேன். நண்பர் அதனை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன்.