இன்று ஒரு வணிகச் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. காலை 9.30க்கு சந்திப்பு. நேற்று இரவு காலை 5.30 மணிக்கு அலாரம் வைத்து விட்டு படுத்து உறங்கினேன். காலை அலாரம் ஒலிப்பதற்கு 15 நிமிடம் முன்பு விழித்து விட்டேன். அலாரத்தை ஆஃப் செய்து விட்டு குளித்துத் தயாரானேன். காலை 6.15 அளவில் தயாராகி விட்டேன். வண்டிக்கு நேற்று இரவே பெட்ரோல் நிரப்பியிருந்தேன். வெளியூரில் இருக்கும் நண்பரின் வீட்டுக்குச் சென்று அங்கே வாகனத்தை நிறுத்தி விட்டு நாங்கள் இருவரும் காரில் சென்று இன்னொருவரை சந்திக்க வேண்டும். 8.30க்கு அங்கு இருந்தால் சரியாக இருக்கும். அதற்கு 6.15க்கே கிளம்புவது என்பது மிகவும் முன்னால். எனது இயல்பு குறித்த நேரத்துக்கு சற்று முன்னதாகவே சென்று விடுவது.
காலை புறப்பட்டதும் வீட்டில் டிஃபன் தயார் செய்யட்டுமா என்று கேட்டார்கள். அப்போது நேரம் காலை 6.15. வேண்டாம் என்றேன். காஃபி குடித்து விட்டு செல் என்றார்கள். வீட்டில் எப்போதும் தேனீர் தான். இன்று காஃபி பொடி இருக்கிறது என நினைத்துக் கொண்டேன். சில மாதங்களாகவே நான் காஃபி தேனீர் இரண்டும் அருந்துவதில்லை. ஒரு டம்ளர் பால் மட்டும் குடிப்பேன். காஃபி தேனீரை நிறுத்த பால் பழக்கம். சில நாட்களில் அதனையும் நிறுத்தி விடலாம் என்று நினைத்தேன். இருந்தாலும் தொடர்கிறது. இன்று கேட்டதால் காஃபி அருந்தினேன். புறப்பட்டு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். வழக்கமாக கொஞ்சம் மெதுவாகத்தான் ஓட்டுவேன். இன்று வணிகச் சந்திப்பு இருப்பதால் மேலும் மெதுவாக ஓட்டிக் கொண்டு சென்றேன். வழியில் கம்மங்கூழ் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். இரண்டு சொம்பு வாங்கி குடித்தேன். நாற்பது ரூபாய். பிரேக் ஃபாஸ்ட் எளிமையாக முடிந்தது என மகிழ்ந்தேன். எனக்கு கம்மங்கூழும் கேழ்வரகு கூழும் மிகவும் பிடிக்கும். எளிதில் செரிமானம் ஆகக் கூடியது. உடலுக்கு உடனடி ஆற்றல் கொடுப்பது. இருந்தாலும் காஃபி குடித்து ஒரு மணி நேரத்துக்குள் கம்மங்கூழ் குடித்தது ஒரு மாதிரியாக இருந்தது. நண்பர் வீட்டுக்குச் சென்றேன். நண்பர் தயாராக இருந்தார். டிஃபன் சாப்பிடுவோம் என்றார் நண்பர். இப்போதுதான் கம்மங்கூழ் குடித்தேன் என்றேன். நண்பரின் சகோதரர் ஒரு பூரி மட்டும் சாப்பிடுங்கள். ஒரு பூரி என்னும் எண்ணிக்கை எனக்கு உடன்பாடாக இருந்தது. அவர் அழைப்பை ஏற்று உணவருந்தச் சென்றேன். டயனிங் டேபிளில் இருந்த இலை அறுசுவை உண்டிக்கு ஏற்ற இலை. அதன் முன் அமர்ந்தேன். முதல் தவணையே 3 பூரி வைக்கப்பட்டது. உருளைக்கிழங்கு குருமா. இரண்டை சாப்பிட்டதும் மேலும் 3 பூரி. வணிகச் சந்திப்பு குறித்து பேசத் தொடங்கியதால் 6 பூரி சாப்பிட்டதே தெரியவில்லை.
நண்பர் வீட்டில் இருந்த கார்கள் வெவ்வேறு பணிக்குச் சென்றிருந்ததால் சிறிது நேரம் காத்திருந்து சென்ற கார் திரும்பி வந்ததும் புறப்பட்டோம். சந்திக்க வேண்டிய நபரைச் சந்தித்தோம். அங்கே அவருடன் ஆறு பேர் இருந்தனர். ஆறு பேரும் அவரவர் ஸ்வரத்தாயியில் நிமிடக்கணக்கில் பேசினர். சென்றதுமே ஒரு தட்டில் பத்து டம்ளர் தண்ணீர் வந்தது. ஆறு பேர் பேசுவதைக் கேட்பதற்கே மூளைக்கு ஆற்றல் வேண்டும் என்பதால் நான் முழு டம்ளர் தண்ணீரையும் குடித்து விட்டேன். அடுத்த சில நிமிடங்களில் பிஸ்கட்டும் தேனீரும் வந்தது. அந்த தேனீர்க்கலனை தேனீர் டம்ளர் என்று கூறுவதை விட தெனீர் மக் என்று கூறலாம். குடிக்காமல் இருக்க முடியாது. அவர்கள் உபசாரத்தை ஏற்கவில்லை என்று அவர்கள் எண்ணக்கூடும். நண்பர் முழு தேனீர் மக் கையும் குடிக்க முடியாது ; பாதி குறைத்துக் கொள்ளுங்கள் என்றார். அவர் வயதைக் கருதி அவர் கோரிக்கை ஏற்கப்பட்டது. அவர் சொன்ன பின் நானும் அவ்வாறே சொன்னால் சரியாக இருக்காது. எனவே அதனை முழுமையாக அருந்தி விட்டு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தோம். உடன்பாடு எட்டி விடலாம் என்னும் நிலை. அதற்குள் அடுத்த சுற்று பேசுவோம் என்னும் நிலைப்பாடு உருவாகி விட்டது. இந்த பேச்சுவார்த்தையிலேயே முடிவை எட்ட விரும்பிய அறுவரில் ஒருவர் இன்னொரு தேனீர் அருந்துவோம் என்று சொல்லி பேச்சை நீட்டித்தார். அவர்கள் வீட்டில் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. தேனீர் வர தாமதமானது. வந்ததும் அதையும் அருந்தினோம். முடிவு முழுமையாக எட்டாமல் புறப்பட்டோம்.
நண்பர் வீட்டுக்கு வந்தோம். எங்கள் வருகையை எதிர்பார்த்திருந்தவர்கள் நாங்கள் வந்ததும் தேனீர் அளித்தார்கள். எங்கள் இருவராலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. தேனீர் அருந்தினோம். நான் நண்பரிடம் விடை பெற்று புறப்பட்டேன்.
வீட்டுக்கு வந்த போது மதியம் 3.15. கொஞ்சமாக மதிய உணவருந்தினேன்.
மாலை வீட்டில் தேனீர் போடட்டுமா என்றார்கள். வேண்டாம் என்று சொல்லி எனது நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றேன். அவர் ஒரு மத்திய சர்க்கார் அதிகாரி. நானும் அவரும் அவ்வப்போது ‘’வாக்கிங்’’ செல்வோம். இன்றும் அவ்வாறே வாக்கிங் செல்லலாம் என்று சென்றேன். நண்பர் ஐ பி எல் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தார். அங்கு சென்றதும் அவர் வீட்டில் செய்திருந்த பிட்டு கொடுத்தார்கள். பிட்டுக்கு மண் சுமந்த இறைவனின் திருவிளையாடல் குறித்து பேசிக் கொண்டு பிட்டு சாப்பிட்டேன். பின்னர் காஃபி.
அப்போது ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. காலையில் நாங்கள் சந்தித்தவர். அறுவரில் ஒருவர். ‘’சார் ! இப்ப நான் தனியா இருக்கன். என்னை வந்து பார்க்க முடியுமா? நாம ஒரு முடிவுக்கு வந்துடலாம்’’ என்றார். எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டேன். கடையில் என்று சொன்னார். நான் உடனே புறப்படுகிறேன் என்று அவரிடம் சொன்னேன். ‘’வாக்கிங்’’ செல்ல இருந்த நண்பரிடம் ஒரு அவசர சந்திப்பு ; நீங்களும் உடன் வாருங்கள் என்று சொன்னேன். காலை 6.30 மணியிலிருந்து அலைச்சலாக இருந்ததால் மேலும் ஒரு பயணத்தை தனியாக நிகழ்த்த வேண்டாம் என எண்ணினேன். நண்பரும் உடன் வந்தார். சந்திக்க வேண்டிய நபரின் கடைக்கு 100 மீட்டர் முன்னால் வண்டியை நிறுத்தி இறங்கி வண்டியை நண்பரிடம் கொடுத்து விட்டு அந்த ஊரின் ஆலயத்தில் 30 நிமிடங்கள் சாமி கும்பிடுங்கள் அதன் பின் நான் அழைக்கிறேன். நாம் இந்த இடத்தில் மீண்டும் சந்திப்போம் எனக் கூறி விட்டு சென்றேன்.
காலையில் சந்தித்தவர் கடையில் தனியாக இருந்தார். என்னை அமரச் சொல்லி கடையில் இருந்தவரிடம் தேனீர் வாங்கி வாருங்கள் என்றார். நான் சில விஷயங்களை அவருக்கு பொறுமையாக எடுத்துக் கூறினேன். நாளை சந்திப்பு ஏற்பாடு செய்யுமாறு கூறினார். சந்திப்பை ஏற்பாடு செய்தேன். தேனீர் வந்தது. அருந்தி விட்டு நண்பரைச் சந்திப்பதாய் கூறிய இடத்துக்கு வந்து நின்றேன். சில நிமிடங்களில் நண்பர் வந்தார். பைக்கில் ஊர் திரும்பினோம்.
வீட்டில் இரவு உணவாக 4 இட்லி மட்டும் அருந்தினேன். உறங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் வென்னீர் போட்டு அதில் ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடியை கலந்து கலக்கிக் குடித்தேன்.