எனது நண்பரின் வீட்டு மனை 4 ஏக்கர் பரப்பு கொண்டது. செவ்வகமான அந்த வீட்டு மனையின் நடுவில் வீடு அமைந்துள்ளது. வீட்டின் மதில் சுவருக்கும் வீட்டுக்கும் இடையேயான தூரம் குறைந்தபட்சம் 200 அடியாக இருக்கும். மனை சுற்றளவு முழுவதும் நடுத்தரமான உயரம் கொண்ட மதில்சுவரால் ஆனது. வீட்டின் நான்கு புறமும் வேப்பமரங்களும் பலா மரங்களும் மாமரங்களும் உள்ளன. வீட்டின் முன்புறம் நான்கு பெரிய வேப்பமரங்கள் இருக்கின்றன. அந்த வேப்பமரங்களின் நடுவில் நான்கு சிமெண்ட் பெஞ்ச் களை நண்பர் அமைத்திருந்தார். இன்று காலையிலிருந்து நண்பரும் நானும் சில பணிகளில் ஈடுபட்டிருந்தோம். மதியம் சற்று ஓய்வெடுக்க விரும்பினேன். எனக்கு அந்த சிமெண்ட் பெஞ்ச் சில் சயனிக்க வேண்டும் என்று விருப்பம். அதில் படுத்துக் கொண்டு மேலே நோக்கினேன். மேகமூட்டமான வானம். இலேசாக மிக இலேசாக வெயில் இருந்தது. வேப்ப மரக்கிளைகளில் கிளிகள் இருந்தன. மரங்கொத்தி இருந்தது. மைனாக்கள் இருந்தன. காகங்கள் இருந்தன. குயிலோசை அவ்வப்போது கேட்டது. காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற தமிழ் மூதாதையை எண்ணிக் கொண்டேன்.