கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக முயன்று சொத்தை விற்பவரையும் சொத்தை வாங்குபவரையும் பலமுறை சந்தித்து மூன்று முறை வாங்குபவர் விற்பவர் சந்திப்பை ஏற்பாடு செய்து நிகழ்ந்த பணி இன்று ஒரு முக்கிய கட்டத்தை எட்டியது. சென்ற சந்திப்பில் வாங்குபவர் அந்த சொத்தை தான் எவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியும் என்ற விலையைத் தெரிவித்து விட்டார். விற்பவர் தான் கூறிய விலையில் உறுதியாக இருந்தார். முடிவு எட்டப்படாமல் அந்த சந்திப்பு நிறைவு பெற்றது. முடிவு எட்டப்பட சிறு கால இடைவெளி தேவை என்னும் நிலை. அந்த கால இடைவெளி 3 நாட்களாக இருக்கலாம் ; 7 நாட்களாக இருக்கலாம் ; அல்லது 15 நாட்களாகக் கூட இருக்கலாம். நாட்கள் இவ்விதம் நகர்ந்தால் மீண்டும் ஒரு சந்திப்புக்கு வாய்ப்பு அமையாமல் கூட போகலாம். என்ன நிகழும் என்பதை கணிக்க முடியாத நிலை. இந்நிலையில் நான்காவது சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தேன். ‘’வாங்குபவரும்’’ ‘’விற்பவரும்’’ மனம் விட்டு பேசினர். இன்னும் சில நிமிடங்களில் விலை நிர்ணயம் ஆகி விடும் என்னும் நிலை. இருப்பினும் அந்த இடத்துக்கு வராமல் சந்திப்பு நிறைவு பெற்றது. ‘’விற்பவர்’’ புறப்பட்டுச் சென்றதும் ‘’வாங்குபவரிடம்’’ ஏன் விலையை இறுதி செய்யவில்லை என்று கேட்டேன். விலையை நீங்கள் அவரிடம் பேசி நிர்ணயம் செய்யுங்கள் என்று கூறினார். அதன் பின் சென்று ‘’விற்பவரைச்’’ சந்தித்தேன். அவரும் என்னிடம் இந்த இடத்துக்கு நீங்கள் விலை நிர்ணயம் செய்யுங்கள் என்று கூறினார். இந்த நிலை அரிதான ஒன்று. இது மிகவும் உகந்த செயல்முறையா என எனக்குத் தெரியவில்லை. என்னை விலை நிர்ணயம் செய்யச் சொல்கிறார்கள். நடுவுநிலையுடன் இருந்து விலையை நிர்ணயிக்க வேண்டும். விலையை நிர்ணயித்த பிறகு ஒவ்வொருவரும் அதனை ஏற்கும் அளவில் மாற்றம் இருக்கலாம். இருவருமே கூட அது தங்களுக்கு சாதகமாக இல்லை என எண்ணலாம். ஏன் இத்தனை பெரிய பொறுப்பை எனக்கு அளித்தார்கள் என்பது தெரியவில்லை. ஏன் நான் அதனை மறுப்பின்றி ஏற்றேன் என்பதும் எனக்குப் புரியவில்லை. எந்த அளவீட்டின் படி நடந்து கொள்வது என சிந்தித்துப் பார்த்தேன்.
எனக்கு ஒரு வழி புலப்பட்டது. எனது அணுகுமுறையை இவ்விதம் வடிவமைத்துக் கொண்டேன். அதாவது ஒரு விலையை நிர்ணயம் செய்து விடலாம். இருப்பினும் முன்பணம் என ஏதும் உடனடியாகக் கொடுக்கத் தேவையில்லை. நிர்ணயமான விலை ’’வாங்குபவர்’’ ‘’விற்பவர்’’ இருவர் மனதிலும் நிலை பெறட்டும். அவ்விதம் முன்பணம் இல்லாமல் சில நாட்கள் நீடித்து மீண்டும் கிரயம் பெற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனில் நிகழ்வுகள் சரியாக நிகழ்கின்றன என்று பொருள். ஏதேனும் மாறுபாடு நிகழ்ந்தால் யாருக்கும் பொருள் இழப்பு இல்லை. எனவே முன் தொகை செலுத்தாமல் விலையை நிர்ணயித்துக் கொள்வது என்னும் திசையை நோக்கி விஷயத்தைக் கொண்டு சென்று விலை நிர்ணயம் செய்தேன். நிர்ணயித்த விலையை ‘’விற்பவர்’’ ஏற்றுக் கொண்டார். ‘’வாங்குபவரை’’ நேரில் சந்தித்து நிர்ணயித்திருக்கும் விலையைக் கூறினேன். அவரும் ஏற்றுக் கொண்டார்.
‘’விற்பவர்’’ தனது சொத்தின் ஆவணங்கள், முழுமையாக முழு சொத்தும் அவர் பெயர் தாங்கிய பட்டாவுடன் இருத்தல் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்தி அவற்றை அளிக்க வேண்டும். இவை முழுமையடைய 15 நாட்களாவது ஆகும். இந்த இடைவெளியில் தொகை ஏற்பாடுகளை ‘’வாங்குபவர்’’ மேற்கொள்ள வேண்டும். இவை இரண்டிலும் கவனம் செலுத்தி முறைப்படி நிகழ்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
இரண்டு மாத தொடர் முயற்சிக்குப் பிற்கு ஒரு சுற்று நிறைவு பெற்றிருக்கிறது. அடுத்த சுற்று துவங்குகிறது.