Saturday, 31 May 2025

தலைமைப் பண்பு அல்லது தலைவர்கள்

எனது நண்பர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் ஒப்பந்தக்காரர். பல கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை ஆணையத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் அமைத்துக் கொடுப்பவர். நாட்டின் உயர்பதவி ஒன்றில் இருப்பவருடன் நண்பருக்கு பல வருடப் பரிச்சயம் உண்டு. நாட்டின் தலைநகருக்குச் செல்லும் போது அவ்வப்போது அவரைச் சந்திப்பது உண்டு. சில மாதங்களுக்கு முன்னால்  இருவரும் ஒன்றாக ஒரு விருந்தில் கலந்து கொண்டு உணவருந்தியிருக்கிறார்கள். அப்போது அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடலை நண்பர் என்னிடம் கூறினார். அதனைக் கேட்ட பின் நான் அது குறித்து என் அவதானங்களைக் கூறினேன். 

உயர்பதவி வகிப்பவர் தான் மாணவப் பருவத்தில் இருந்த போது தனது ஊருக்கு அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி வருகை புரிந்ததையும் அந்த பொதுக்கூட்டத்துக்குத் தன்னை தனது தந்தை கூட்டிச் சென்றதையும் பிரதமரின் உரையை பிரபல வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான ஒருவர் மொழிபெயர்த்ததையும் நினைவுகூர்ந்து அந்த கூட்டத்தில் கலந்து கொண்டது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது என்றும் இப்போதும் நினைவில் பசுமையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். எனது நண்பர் தனது தாய்மாமனுடன் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தேன் என அவருடைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அன்று நாட்டில் மக்களை வழிநடத்தும் தலைவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தது போல இன்று அதே அளவு எண்ணிக்கையில் தலைவர்கள் இருக்கிறார்களா என தன் மனதில் எழுந்த வினாவை ஓர் எண்ணமாக முன்வைத்திருக்கிறார். நண்பர் என்னிடம் இதனைக் கூறியதும் இந்த விஷயத்தை நான் காணும் கோணத்தையும் அணுகும் விதத்தையும் நண்பரிடம் சொன்னேன். 

நம் நாடு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட மக்களாட்சி மரபைக் கொண்ட நாடு. அரசனின் அதிகாரம் என்பது உயர்ந்ததாக இருந்தாலும் நாட்டின் ஒவ்வொரு கிராமமுமே தன்னளவில் முழுமை பெற்ற சுதந்திர அலகாகவே இருந்திருக்கின்றன. கிராமத்தின் சாலைப் பணிகள், பாசன வாய்க்கால்கள், பொது நீர்நிலைகள் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகளுக்கு மக்கள் அரசை எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த பணிகளை தங்கள் கிராமத்துக்குள் தாங்களே செய்து கொண்டனர். விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் தானியமே பண்டமாற்றுக்கான செலாவணி. இந்த அடிப்படையான செயல்முறையே காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை நம் நாட்டின் மகாபாரத காலகட்டத்திலிருந்து வழக்கத்தில் இருந்திருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் குடித்தலைவர்கள் இருந்து கிராமத்தில் ஒழுங்கும் நியதியும் பின்பற்றப்படுவதை உறுதி செய்திருக்கிறார்கள். இவ்வகையான குடித்தலைவர்களையும் குலத் தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் பணியையே அரசன் செய்திருக்கிறான். நாட்டின் குடிமக்களில் 99 சதவீதம் பேர் தங்கள் சொந்த கிராமத்தைத் தாண்டி இன்னொரு ஊருக்குச் செல்லும் அவசியம் இல்லாதவர்களாகவே இருந்திருப்பார்கள். வணிகர்களும் யாத்ரிகர்களும் பயணிகளும் மட்டுமே வேற்றூர்களுக்கு அடிக்கடி செல்லும் அவசியத்தில் இருந்திருப்பார்கள். அதனால் நம் நாட்டின் கிராம மக்களுக்கு அரசனை விடவும் குடித்தலைவர்கள் முக்கியம் வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். வழக்கமான நிர்வாகப் பணிகள் தாண்டி அரும்பெரும்செயல்கள் புரிந்த மன்னர்கள் மக்களால் போற்றப்பட்டிருக்கின்றனர். அவ்வாறு போற்றப்படும் இந்திய மன்னர்கள் சாலைகள் அமைத்து போக்குவரத்தை எளிதாக்கியவர்களாக இருப்பதையும் பாசனக் கட்டமைப்புகளை உண்டாக்கியவர்களாக இருப்பதையும் எளிதில் உய்த்தறிய முடியும். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நாடு ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிப்புக்கு ஆளான போது கூட கிராம நிர்வாகம் என்னும் கட்டமைப்பு அவ்விதமே நீடித்தது. பிரிட்டிஷ் ஆட்சியே நாட்டின் எளிய குடிகளிலிடமிருந்தும் வரி கொள்ளும் முறையைக் கொண்டு வந்து நம் நாட்டைச் சுரண்டியது. உலக வரலாற்றில் நிகழ்ந்த பெரும் கொள்ளை அது. நம் நாட்டை மட்டுமன்றி உலகின் பெரும்பாலான நாடுகளைத் தன் காலனியாக்கி அந்த நாடுகளையும் சுரண்டியது. அவ்வாறு சுரண்டி அவர்கள் உருவாக்கிய செல்வம் ஏகாதிபத்தியத்தைக் கொண்டு வந்து ஐரோப்பாவில் இருந்த முதலாளித்துவத்தை மேலும் வலுப்படுத்தியது. முதலாளித்துவத்துக்கு எதிராக கம்யூனிச சித்தாந்தம் எழுந்தது. சித்தாந்த அடிப்படையில் முதலாளித்துவத்துக்கும் கம்யூனிசத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பது உலக வரலாற்றின் நகைமுரண்களில் ஒன்று. செயல்பாட்டு அளவிலும் அவற்றுக்கு வேறுபாடு இல்லை என்பதையும் முதலாளித்துவம் பல நூற்றாண்டுகளாக உருவாக்கிய மானுட அழிவுகள் கம்யூனிசம் அது ஜீவித்திருந்த 70 ஆண்டுகளில் உருவாக்கிய மானுட அழிவுகளுடன் ஒப்பிடுகையில்  மிக மிகச் சிறியவை என்பதை காலம் நமக்குக் காட்டியது. 

இரண்டு உலகப் போர்கள் மனித குலத்தின் மேல் திணிக்கப்பட்டதன் பின்னணியில் உலகில் மன்னராட்சி முறை கணிசமான அளவில் இல்லாமலாகி ஜனநாயக அரசுகள் பரவலாக உருவாயின. ( இன்றும் உலகில் மன்னராட்சி முறை முற்றிலும் இல்லாமல் ஆகி விடவில்லை. இன்றும் உலகில் முழுமையாக ஜனநாயக ஆட்சி முறை வந்து விடவில்லை. உலகின் மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட நாடான சீனா சர்வாதிகார ஆட்சிக்குக் கீழே இருக்கிறது. சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், மியன்மார், ஈரான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் ஜனநாயகம் இல்லை) 

இரண்டு உலகப் போர்கள் முடிந்திருந்த நிலையில் உலகின் பல காலனி நாடுகள் சுதந்திரம் பெற்றன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப நாட்களிலிருந்து அடுத்து வந்த ஐம்பது ஆண்டுகளும் காலனி நாடுகளில் உலகின் ஏகாதிபத்ய நாடுகளின் சுரண்டலை எதிர்த்து அந்தந்த நாடுகளில் தேசியத் தலைவர்கள் உருவாகி வந்தனர். உலகம் அமெரிக்கா , சோவியத் யூனியன் என இரு துருவங்களாகப் பிரிந்தன. ஏகாதிபத்யத்தின் இன்னொரு வடிவமான பனிப்போரும் நிகழ்ந்து கொண்டிருந்தது. உலகின் இயற்கை வளங்களில் பெரும் பகுதியைத் தன் வசம் வைத்திருந்த அமெரிக்கா பெரும் செல்வவளமும் கொண்டிருந்தது. அமெரிக்காவும் சோவியத்தும் பொருளியல் களத்திலும் அரசியல் களத்திலும் எதிரெதிர் இடத்தில் நின்றன. நேரடியான போரில் இறங்காமல் மற்ற நாடுகள் மூலம் மறைமுகப் போரில் ஈடுபட்டு வந்தன. 

இந்த பின்னணியில் நம் நாடு சுதந்திரம் பெற்று ஜனநாயக அரசொன்றை அமைக்கும் இடத்துக்கு வருகிறது. சுதந்திர இந்தியாவின் ஜனநாயக அரசியல் புரிதலை இந்திய தேசிய இயக்கத்தின் மாபெரும் தலைவரான மகாத்மா காந்தி கம்யூனிச அரசியல் சித்தாந்தத்தை முழுமையாக நிராகரித்தவர் என்னும் இடத்திலிருந்து துவங்குவது பொருத்தமாக இருக்கும். எனினும் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஜவஹர்லால் நேருவுக்கு கம்யூனிசம் மீது பெரும் ஈடுபாடு இருந்தது. அன்றைய பெரும்பாலானோர் நம்பிய விதமாக கம்யூனிசம் மக்கள் சிக்கல்களைத் தீர்க்கும் என அவரும் நம்பினார். கம்யூனிச சர்வாதிகாரம் எவ்வகையானது என்பதை மாவோவின் சீனா அவருக்கு அனுபவபூர்வமாக உணர்த்திக் காட்டியது. இந்தியாவின் தீயூழ் இந்தியாவின் மரபு குறித்து நுட்பமான புரிதல் கொண்டவரும் அறிஞரும் நேர்மையாளருமான லால்பகதூர் சாஸ்திரி நாட்டை நீண்ட காலம் வழிநடத்தும் நிலையில் இல்லாமல் போனார். சோவியத்தின் தாஷ்கண்டில் அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்நிலையில் இந்திரா காந்தி நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 

பாகிஸ்தானுக்கு அமெரிக்க ஆதரவு இருந்தது. அந்த ஆதரவைப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக நம் நாட்டை உடைக்க அந்நாடு முயன்று கொண்டிருந்தது. இந்திரா காந்தியின் பெரும் அரசியல் சாதனை என்பது பாகிஸ்தானை இரண்டாக உடைத்து பங்களாதேஷ் உருவாக பெரும் காரணமாக இருந்தது. அச்செயலை அவர் செய்த போது அவருடைய அரசியல் எதிரிகள் நாட்டின் நலனுக்காக அவருடன் இணைந்து நின்றனர். உண்மையில் அவர் அப்போது தனது உள்கட்சி சிக்கல்களில் சிக்குண்டிருந்தார். நாட்டின் நலனுக்காக அவருடைய அரசியல் எதிரிகள் அவருக்குத் துணை நின்றனர். அவருக்குப் பெரும் புகழ் கிடைத்ததும் பங்களாதேஷ் உருவாக்கத்தினால் தான். அவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற தீர்ப்பு வந்த போது அவர் பதவி விலகியிருக்க வேண்டும். காங்கிரஸ் அன்று உலகின் பெரிய கட்சிகளில் ஒன்று. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாட்டின் எல்லா பகுதிகளிலும் நிலை பெற்றிருந்த கட்சி. அதில் எத்தனையோ தலைவர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரை எளிதில் பிரதமராகத் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆயினும் இந்திரா காந்தி பதவி விலகவில்லை. தனது சுயநலத்துக்காக பதவி ஆசைக்காக நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தினார். நாட்டின் பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அதிகாரம் வெறியாட்டம் போட்டது. அவர் நெருக்கடி நிலையைக் கொண்டு வந்ததற்குப் பின்னால் சோவியத் யூனியனின் தூண்டல் இருந்திருக்கக் கூடும் என பலமான யூகங்கள் இப்போதும் உள்ளன. நெருக்கடி நிலை விலக்கப்பட்டு நாடு தேர்தலைச் சந்தித்த போது நாட்டின் ஏழை எளிய சாமானிய மக்கள் இந்திரா சர்க்காரைத் தூக்கி எறிந்தார்கள். 

இந்திரா அதன் பின்னும் முழுமையாக மாற்றமடைந்திடவில்லை. அவருக்கு கம்யூனிச சித்தாந்தத்தின் பேரில் ஈடுபாடு இருக்கவே செய்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்த போது ஆட்சியிலும் கட்சியிலும் கம்யூனிச சித்தாந்திகளை நிரப்பிக் கொண்டேயிருந்தார். காங்கிரஸை கம்யூனிச சிந்தனைகளின் பக்கம் நகர்த்திக் கொண்ட போன செயலுக்கு நேருவும் இந்திராவுமே காரணம். இந்திரா பல அரசியல் தவறுகளைச் செய்தவர். அவரளவு தவறு செய்த இன்னொரு இந்திய அரசியல்வாதி இருப்பாரா என்பது ஐயம். இந்திரா பிரகடனப்படுத்திய நெருக்கடி நிலை உலக ஜனநாயக வரலாற்றின் கருப்பு பக்கம். பஞ்சாப்பில் அவர் நிகழ்த்திய தவறான அரசியல் முன்னகர்வுகள் தேசத்துக்கே பெரும் கேடாய் உருவானது. அதிகாரவர்க்கத்தில் மார்க்ஸிஸ்டுகளை அவர் நிரப்பியது நாட்டின் வளர்ச்சிக்கு பல ஆண்டுகள் முட்டுக்கட்டை போட்டது. 

உலகின் பெரும் தலைவர் ஒருவருக்கு மகளாயிருந்து உலகின் பெரும் ஜனநாயக நாட்டை பல ஆண்டுகள் வழிநடத்திய இந்திரா அறியாத உணராத உண்மையை அவரது காலத்தில் நம் நாட்டின் சாமானிய சமூகச் செயல்பாட்டாளர்கள் பலர் அறிந்திருந்தனர். அவர்களில் ஒருவர் 1980களின் துவக்கத்தில் இவ்விதம் கூறினார் : ’’ 1990ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை தினசரி நாட்காட்டியில் கிழிக்கும் போது உலகில் சோவியத் யூனியன் என்ற நாடு இருக்காது ; உலகில் கம்யூனிசம் என்ற சித்தாந்தம் இருக்காது’’. 

***

நரசிம்ம ராவ் ஓர் அறிஞர். சிறந்த ராஜதந்திரி. அவருக்கு கட்சி அளித்த அத்தனை பொறுப்பையும் செவ்வனே நிறைவேற்றியவர். கிட்டத்தட்ட அரசியல் ஓய்வுக்கு செல்ல இருந்த நிலையில் காலம் அவருக்கு பிரதமர் பதவியை அளித்தது. நாட்டின் கொள்கை வகுக்கும் பணிகளை கம்யூனிஸ்டு சிந்தனையாளர்கள் மேற்கொண்டிருந்ததை மாற்றி நாட்டினை ஒரு புதிய பாதைக்கு இட்டுச் சென்றவர் நரசிம்ம ராவ். அவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகளின் மேல் பலருக்கும் விமர்சனம் உண்டு. ஆனால் ஜவஹர்லால் நேரு , இந்திரா காந்தி ஆகியோருடன் அவரை ஒப்பிடுகையில் ‘’யானை படுத்தாலும் குதிரை மட்டம்’’ என்னும் நிலையில் நரசிம்ம ராவ் யானையாக உயர்ந்து நிற்கிறார். 

இந்திராவைத் தாண்டிய புகழ் நரசிம்ம ராவுக்கு கிடைத்திருக்க வேண்டும். அவரது சொந்த கட்சியே அவரைக் கைவிட்டது. அவர் இறந்த போது அவருடைய உடலை காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைமை அலுவலகத்தில் சில நிமிடங்கள் கூட கட்சிக்காரர்களோ பொதுமக்களோ அஞ்சலி செலுத்தும் விதமாக வைப்பதற்கு அப்போது காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த இந்திராவின் மருமகளான சோனியா காந்தி அனுமதிக்கவில்லை. 

நரசிம்ம ராவ் அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா பட்டம் அளித்தது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. 

***

இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கினார். இன்றும் அது அவரது சாதனைப்பட்டியலில் இருக்கிறது. வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும் 2014ம் ஆண்டு வரை நாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2 கோடியாக இருந்தது. அதாவது நாட்டின் மக்கள்தொகையில் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே வங்கிக் கணக்கு இருந்தது. ஒரு கிராமத்தில் நூறு பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் இரண்டு பேருக்கு மட்டுமே வங்கிக் கணக்கு இருக்கும். அவர்களே வங்கிக்கு வந்து வரவு செலவு செய்வார்கள். வங்கியின் லாபம் நஷ்டம் அனைத்தும் அந்த இரண்டு பேரின் வரவு செலவைப் பொறுத்தே. 2014ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றதும் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் பல நடவடிக்கைகள் மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்டு இன்று ஐம்பது கோடிக்கும் மேலான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. வங்கிகளை தேசிய மயமாக்குவதில் முனைப்பு காட்டிய இந்திரா ஏன் வங்கி வாடிக்கையாளர் எண்ணிக்கை குறித்து கவனம் கொள்ளவில்லை என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். 

***

1996 பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளிவந்த போது நாட்டில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டது. பாரதிய ஜனதா கட்சி 140 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. காங்கிரஸ் 120 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. ஜனதா தளம் மாநிலக் கட்சிகள் கம்யூனிஸ்டுகள் சேர்ந்து ஐக்கிய முன்னணி அமைத்தனர். அதன் உறுப்பினர் பலம்   165. காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க ஐக்கிய முன்னணி சர்க்கார் அமைந்தது. யார் பிரதமராவது என்னும் கேள்வி எழுந்த போது மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு தலைவரும் மேற்கு வங்காளத்தில் நீண்ட காலம் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி ஆட்சியை நடத்தியவருமான ஜோதி பாசுவின் பெயர் முன்மொழியப்பட்டது. அவரது தேர்வை ஐக்கிய முன்னணியின் எல்லா கட்சிகளும் ஏற்றன. வெளியிலிருந்து ஆதரவு கொடுத்த காங்கிரஸும் ஏற்றது. 

மார்க்ஸிஸ்ட் கம்யூனிசக் கட்சியின் பொலிட் பீரோ ஜோதிபாசுவைப் பிரதமராக்குவது குறித்து கூட்டம் கூடி விவாதித்தது. விவாதத்தின் முடிவில் நாட்டின்பிரதமர் பொறுப்பை ஏற்பதில்லை என்னும் முடிவை எடுத்தனர். 

நேரு , இந்திரா ஆதரவுடன் நாட்டின் அனைத்து அரசு அமைப்புகளிலும் வலுவாக ஊடுறுவியர்கள் கம்யூனிஸ்டுகள். மத்திய அரசின் தொழிலாளர் யூனியன்களும் மாநில அரசுகளின் பணியாளர் சங்கங்களும் அவர்கள் வசம் இருந்தன. நாட்டின் தொழிலாளர்களில் கணிசமானோர் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிக் கொடுத்த கோஷங்களை முழங்கிக் கொண்டிருந்தனர். 

அவ்வாறு இருக்கையில் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஏன் நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்கவில்லை?

அவரவர் யூகத்துக்கே இந்த விஷயத்தை விட்டு விடுகிறேன்.

***

சமூகம் பல்வேறு குடிகளாலும் அக்குடிமக்களின் பல்வேறு விருப்பங்கள் மற்றும் அபிலாஷைகளாலும் ஆனது. அரசு என்பது ஒரு பொருளியல் அமைப்பு எனினும் அதில் தார்மீக அம்சம் என்பது கண்ணுக்குத் தெரியாமல் இருந்து கொண்டேயிருப்பது. சமூகத்தின் இயங்குமுறையைப் புரிந்து கொள்பவர்கள் அதனை வழிநடத்தும் இடத்தில் இருக்கும் போது சமூகம் நன்மை பெறுகிறது. 

நம் நாடு உலகின் தொன்மையான ஜனநாயக நாடு. உலகம் ஜனநாயகத்தை நம்மிடமிருந்தே கற்றது. உலகம் இன்னும் நம்மிடமிருந்து கற்றுக் கொள்ளும் நிலையிலேயே இருக்கிறது. 

***

இந்திரா ‘’வறுமையை அகற்றுவோம்’’ என கோஷமிட்டுக் கொண்டிருந்தார். அப்போதைய நாட்டின் கஜானா சாமானிய மக்கள் அங்காடிக் கடைகளில் வாங்கும் சாமானியப் பொருட்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாயையே நம்பிக் கொண்டிருந்தது. அதன் அர்த்தம் என்னவெனில் நாட்டின் கஜானாவை நிரப்பும் பொறுப்பு ஏழை எளிய மக்களின் தோள்களில் சுமையாக ஏற்றப்பட்டது. ‘’கார்ப்பொரேட் வரி’’ மற்றும் ‘’வெல்த் வரி’’  விதித்து நாட்டின் வரி வருவாயைப் பல மடங்கு பெருக்கியவர் நரசிம்ம ராவ். 

சமூகத்தை ஆக்கபூர்வமான திசையில் கொண்டு செல்பவனாக ஒரு தலைவன் இருக்க வேண்டும் அல்லது சமூகத்தை சிறப்பாக நிர்வகிக்கும் தலைமைப் பண்பு இருக்க வேண்டும்.