நண்பர் புத்தகங்கள் சூழ இருப்பவர். அவரது வீட்டுக் கூடத்தில் அவரது எழுது மேஜையில் மேலும் புத்தகங்களுக்காக ஒதுக்கியுள்ள புத்தகப் பரண்கள் கொண்ட அறையில் என எங்கும் புத்தகங்கள் இருந்தன. அவருடன் கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது யுவால் நோவா ஹராரியின் ‘’சேப்பியன்ஸ்’’ புத்தகம் கண்ணில் பட்டது. அவரது அலுவலக அறையில் கண்ட புத்தகத்தின் பிரதிகள் அவரிடம் 4 இருப்பதைக் கண்டேன். ஒரு பிரதியை படித்து விட்டுத் தருகிறேன் என எடுத்து வந்து உடன் வாசித்து விட்டு அடுத்த சில நாட்களில் அவரைக் காணச் சென்ற போது அவரிடம் அதனை திருப்பிக் கொடுத்து விட்டேன். என்னிடம் இருக்கும் 1000 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்திருக்கும் புத்தக அலமாரி வீட்டில் என்னுடைய அறையில் இருக்கிறது. எனது அறை மாடியில் இருப்பதால் என் புத்தக அலமாரி யார் கண்ணிலும் படாது. நானாக அழைத்துச் சென்று காட்டினால் தான் உண்டு. நண்பர் வீட்டில் இருந்த புத்தகங்களை முழுமையாகக் காண வேண்டும் என விரும்பினேன். இருப்பினும் எனது ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். ஒருநாள் என் கட்டுப்பாட்டைத் தளர்த்தி அவரது புத்தகப் பரண்களைத் துழாவினேன். நண்பரிடம் நுண்கலைகள் தொடர்பான புத்தகங்கள் அதிகம் இருக்கின்றன என்பதை அவதானித்தேன். தமிழகத்தில் நவீன இலக்கியம் வாசிப்பவர்கள் எண்ணிக்கை 1000 என ஒரு கணக்கீடு உண்டு. நவீன இலக்கிய நூல்களைப் பிரசுரிக்கும் பதிப்பகங்கள் 1000 பிரதிகள் அச்சிட்டு அத்தனை பிரதிகளையும் 5 லிருந்து 7 ஆண்டுகளில் விற்பனை செய்து முடிப்பார்கள். எனவே நவீன இலக்கியத்தை 1000 பேர் வாசிப்பதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. தமிழகத்தின் மக்கள்தொகை 7 கோடி. அதில் புத்தகம் வாசிப்பவர்கள் 1000 பேர். ஒரு ஊரில் ஒரு லட்சம் பேர் வசித்தால் அதில் ஒருவர் நவீன இலக்கியம் வாசிக்கிறார் என்று பொருள். இலக்கியத்தின் நிலைமை இவ்விதம் என்றால் நுண்கலை நூல்களை வாசிப்பவர் எண்ணிக்கை இலக்கியம் வாசிப்பவர் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பாகமாக இருக்க வாய்ப்பு மிக மிக அதிகம். நுண்கலை நூல்களை நண்பர் அதிக எண்ணிக்கையில் வாசித்திருக்கிறார். புத்தகப் பரணில் இருந்து சோழர் கால சிற்பங்கள் குறித்த நூல் ஒன்றை எடுத்து வந்து நண்பர் முன் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். நண்பர் ஆர்வத்துடன் அந்த நூல் குறித்து என்னிடம் கூறினார். பின்னர் ‘’அந்த புத்தகத்தை அங்கேயே வைத்து விடுங்கள்’’ என்றார். நண்பர் பரவாயில்லை. புத்தகங்களைக் கண்ணில் படும் படி வைத்து எவரேனும் எடுத்தால் நிறைய நேரம் அமைதியாய் இருந்து விட்டு கடைசியில் புத்தகத்தை எடுத்த இடத்தில் வைத்து விடுங்கள் என பணிவுடன் விண்ணப்பிக்கிறார். நான் என் புத்தக அலமாரியை எவருக்கும் காட்டுவதே இல்லை!