இன்று அலாரம் அடிப்பதற்கு பத்து நிமிடம் முன்பாகவே விழிப்பு வந்து விட்டது. காலை 2.30க்கு அலாரம் வைத்திருந்தேன். விழித்துக் கொண்டு சில நிமிடங்கள் வெறுமனே படுத்திருந்தேன். இன்று நடைப்பயிற்சியை மீண்டும் தொடங்க வேண்டும் என தீவிரமாக முடிவு செய்திருந்தேன். உணவு சமைக்கத் தொடங்கியதும் எனக்கு சில விஷயங்கள் முழுமையாகப் புரியத் தொடங்கின. 15 நிமிடமோ 30 நிமிடமோ நேரம் ஒதுக்கி உணவு சமைப்பது என்பதன் நோக்கம் உணவு நம் உடலுக்குள் சென்று நமக்குப் போதிய ஆற்றலைத் தர வேண்டும் என்பதற்காகவே. குடலில் இருக்கும் ஜீரண சுரப்பிகளின் பணியை எந்த அளவுக்கு எளிமையாக்குகிறோமோ அந்த அளவு ஜீரணம் சிறப்பாக நடக்கும். ஜீரண மண்டலத்தை ஓர் உயிர் இயந்திரம் என்று கொண்டால் கூட அந்த எந்திரம் அல்லலின்றி இயங்கத் தேவையான அடிப்படையை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது நம் கடமை. சமைக்கத் தொடங்கியுள்ள இந்த சில நாட்களில் எனக்கு இந்த பிரக்ஞை வந்துள்ளது என்பதை உணர்கிறேன். இத்தனை நாள் இந்த பிரக்ஞை போதிய அளவு இல்லாமல் இருந்தது குறித்து வருந்துகிறேன். இதனுடன் எனக்கு இன்னொரு உணர்வும் ஏற்பட்டது. அதாவது நாம் அருந்தும் உணவினால் கிடைக்கும் ஆற்றல் என்பது நம் உடலால் முழுமையாக செலவு செய்யப்பட்டு விட வேண்டும். மிகை ஆற்றல் ரசாயனங்களாக சேமிக்கப் படுவதே பல உடல் நல சிக்கல்களுக்குக் காரணமாக அமைகிறது என எண்ணத் தொடங்கினேன். காலைப் புலரி தொடங்கி நள்ளிரவு வரை ஒருநாள் நமக்குக் கிடைக்கிறது. அதில் நம் உடல் என்ன சேகரித்ததோ அது முழுமையாக செலவழிக்கப்பட்டு விடவும் வேண்டும். அவ்விதம் நிகழும் என்றால் உடல் துல்லியமான செயல்பாட்டில் இருக்கிறது என்று அர்த்தம். உண்ட உணவை உடல் முழுமையாகச் செரிக்க தேவைப்படும் உடல் உழைப்பைக் கொடுப்பதும் உணவு உண்ணலின் ஒரு பகுதியே என்னும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. பாரதி ‘’நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’’ எனக் கேட்பது நம் உடல்நலம் குறித்து நாம் கொள்ள வேண்டிய பிரக்ஞை என்னும் விதமாக நான் அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். ஒரு வீணையை மீட்டுவதைப் போலத்தான் நாம் உடலைப் பேண வேண்டும். வீணை நுட்பமான கருவி ; உடல் வீணையினும் நுட்பமான கருவி.
எனக்கு ஒரு இயல்பு உண்டு. என் மனதின் எண்ணங்களை நான் கவனித்துக் கொண்டேயிருப்பேன். எதைச் செய்தாலும் ஏதும் செய்யாமல் இருந்தாலும் அந்தக் கவனம் இருந்து கொண்டே இருக்கும். படைப்பூக்கத்தின் ஒரு தன்மை அது. அவ்விதமான சுபாவம் இருப்பதால் எனது உடல் இயக்கம் சற்று குறைவாக இருக்கும். அமர்ந்திருக்கும் நேரம் அதிகமாக இருக்கும். இருப்பினும் எனது தொழில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் சென்று கொண்டேயிருப்பது என்பதால் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருப்பேன். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லும் போது மனத்தின் நனவோட்டம் புத்துணர்வு கொண்டு விடும். வீட்டிலிருந்து நண்பர் அலுவலகம் செல்கிறேன் என்றால் வீட்டிலிருந்து புறப்பட்டதுமே மனம் புத்துணர்வு கொண்டு விடும். அங்கிருந்து மீண்டும் வீட்டுக்கு வந்தால் மீண்டும் புத்துணர்வு பெறும். போதுமான உடல் இயக்கம் உடலுக்குக் கொடுக்காமல் இருக்கிறேன் என்ற குறை எனக்கு எப்போதுமே உண்டு. அதைத் தீர்க்க வேண்டும் என விடாமல் முயல்வேன். பல விதங்களில் தோல்வி நிகழும். எந்த உடல்நலச் சிக்கலும் இல்லை என்பதால் உடற்பயிற்சிக்கு போதிய முக்கியத்துவம் அளிக்காமல் இருந்து விட்டேன்.
தினமும் 16 கி.மீ தூரம் நடக்க வேண்டும் என்பது எனது விருப்பங்களில் ஒன்று. மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு முழுத் தொலைவையும் ஓடிக் கடக்க வேண்டும் என்னும் விருப்பமும் உண்டு. மலையேற்றம் செய்ய வேண்டும் என்னும் விருப்பமும் உண்டு. இத்தனை விருப்பங்கள் இருந்தும் அதற்கான அடிப்படைத் தயாரிப்புகளைச் செய்யாமல் இருக்கிறேனே என வருந்துவேன். எனது தொழில் என்பது நான் மட்டும் செய்யக்கூடியது அல்ல ; பலவிதமான பலவகையான தொழிலாளர்களை ஈடுபடுத்தும் தொழில். வாடிக்கையாளர்கள், கட்டுமானப் பொருட்கள் விற்பவர்கள் என பலருடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொழில். பத்திரப் பதிவு , பட்டா மாறுதல் ஆகிய அரசாங்க அலுவலக விஷயங்களிலும் ஈடுபட வேண்டும். என் தொழிலில் மனச்சோர்வு உருவாவது சாதாரணமானது. எனக்கும் அவ்வப்போது உருவாகும். அந்த மனச்சோர்வு உடலை இயங்க விடாமல் அழுத்தும். எங்கள் தொழில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிந்து விடும். எங்கள் எல்லா பணிகளும் பகலில் தான் என்பதால் அந்த முழு நேரத்தில் என்னால் என்ன செய்ய முடியுமோ அதனை முழுமையாகச் செய்வேன். மற்றவர்கள் பங்கும் நிறைய வேண்டும். நிறையவில்லை என்றால் அடுத்த நாளைக்கு அந்த பணி செல்லும். இழுத்துப் பிடித்து செய்ய வேண்டிய தொழில் இது. எனது பகல் நேரத்தை எனது பணிக்காகக் கொடுத்து விடுவேன்.
ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம். அன்றிலிருந்து ‘’சூர்ய நமஸ்கார்’’ செய்யத் தொடங்கலாம் என உத்தேசித்திருக்கிறேன். ஷண்மதங்களில் சௌரம் சூரியனைக் கடவுளாய்க் கொண்டது. சூர்ய நமஸ்கார் உடலால் மனதால் உணர்வால் சூரியனை வணங்கும் முறை. சூரியன் கண் கண்ட தெய்வம். காலை ஒருமுறையும் மாலை ஒருமுறையும் சூர்ய நமஸ்கார் செய்ய விருப்பம் கொண்டுள்ளேன். காலை ஒருவேளை மட்டுமாவது நிச்சயம் செய்ய வேண்டும். ஜூன் 21லிருந்து 48 நாளுக்கு தினமும் 16 கிமீ தூரம் நடப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். முயன்று பலமுறை கைவிட்ட விஷயம். மீண்டும் இம்முறை முயல்கிறேன். இம்முறை நிச்சயம் வெல்வேன் என என் உள்ளுணர்வு சொல்கிறது. சமையல் செய்யத் தொடங்கியிருப்பதால் அது அளித்திருக்கும் உடல் குறித்த பிரக்ஞை என் இலக்கை எட்டுவதில் துணையாயிருக்கும் என்று படுகிறது. திங்களன்று துவங்குவதற்கு முன்னோட்டமாக இன்றும் நாளையும் நடக்கத் தொடங்கி விடலாம் என 16 கி.மீ தொலைவை இன்றே நடக்கத் தொடங்கினேன்.
காலை எழுந்ததும் பல் தேய்த்து விட்டு சில டம்ளர் தண்ணீர் குடித்தேன். சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 5 கி.மீ தூரம் நடக்க முடியும். 16 கி.மீ எனில் 3 மணி 12 நிமிடம் ஆகும். நான் சற்று மெதுவாக நடப்பவன். எனவே 16 கி.மீ தொலைவைக் கடக்க 4 மணி நேரம் ஆகும் எனக் கணக்கிட்டிருந்தேன். காலை 2.45க்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன். காலை 6 மணி அளவில் வீட்டு வாசலுக்கு காக்கைகளும் தவிட்டுக் குருவிகளும் மைனாக்களும் வந்து கிரீச்சிடும். அவற்றுக்கு உணவிடுவது காலைப் பொழுதில் வீட்டின் வழக்கங்களில் ஒன்று. நான் திரும்ப ஏழு மணியாகும் என்பதால் அவற்றுக்கான உணவை வாசலில் தூவி விட்டு கிளம்பினேன்.
சிதம்பரம் சாலையில் நடக்கலாம் என முடிவு செய்திருந்தேன். எங்கள் ஊருக்கு நான்கு திசைகளிலும் சாலைகள் இருந்தாலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் சாலை சிதம்பரம் சாலை. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலோனோர் ஏதேதோ காரணங்களுக்காக சென்னை நோக்கி சென்று கொண்டேயிருக்கிறார்கள். அந்த சாலையின் ஒவ்வொரு இடமும் மிகவும் பரிச்சயமானது. வீட்டிலிருந்து சிதம்பரம் சாலையுடன் இணையும் பாதை 1.5 கி.மீ தூரம் கொண்டது. ஊரின் மையத்துக்கு வருவதற்கு அதுவே சுருக்கமான சாலை. அந்த சாலையில் தான் ஆரம்பப் பள்ளி மாணவனாக நடந்து சென்றேன். உயர்நிலைப் பள்ளி மாணவனாக சைக்கிளில் சென்றேன். இரு சக்கர வாகனம் ஓட்டக் கற்று கொண்டதும் அதில் பயணித்ததும் அந்த சாலையில் தான். இன்று நடைப்பயிற்சிக்கு காலில் செருப்பு அணியவில்லை. காலை நேரம் என்பதால் தரை சுடாது. வெறும் காலில் நடப்பது பாதத் தசைகளை இறுக்கமடையச் செய்யக் கூடும் என்பதால் அவ்விதம் செய்தேன். நான் வீட்டை விட்டு சில மீட்டர் தூரம் சென்றால் கூட காலில் செருப்பு இல்லாமல் செல்ல மாட்டேன். பல வருடப் பழக்கம் அது. எனவே எனது பாதத் தசை மிகவும் மென்மையாக இருக்கிறது. நீண்ட தூரம் வெறும் காலில் நடந்தால் தசைகள் சற்று இறுக்கமடையும் என எண்ணி அவ்வாறு செய்தேன். ‘’நர்மதா பரிக்கிரமா’’ என்னும் நதிவலம் நர்மதை நதியின் கரையில் நிகழும். 3000 கி.மீ தூரம் கொண்டது நர்மதையின் பாதை. காலில் செருப்பில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நர்மதா பரிக்கிரமா மேற்கொள்வார்கள். எனக்கும் வாழ்வில் ஒருமுறையாவது நர்மதா பரிக்கிரமா மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உண்டு. ஊரிலிருந்து காசிக்கு நடந்து செல்ல வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு உண்டு.
அதிகாலை நேரம் என்பதால் வெறும் காலில் நடப்பது வித்தியாசமாகத் தெரியவில்லை. அத்தனை காலை நேரத்தில் நான் சாலையில் நடந்து செல்வதைக் கண்டு சில வீதி நாய்கள் குரைத்தன. என்னிடமிருந்து குறிப்பிட்ட தொலைவில் பக்கவாட்டில் வந்து அவை வகுத்து வைத்திருக்கும் அவற்றின் எல்லையை நான் கடந்ததும் மெல்ல அவை படுத்திருந்த இடத்துக்கு சென்றன. சிதம்பரம் சாலைக்கு வந்து சேர்ந்தேன்.
நேரம் அப்போது காலை 3 மணி. இருப்பினும் சாலையில் ஒரு சில இரு சக்கர வாகனங்கள் சென்று கொண்டுதான் இருந்தன. பால்காரர் ஒருவர் கடந்து சென்றார். காவிரிப் பாலத்தின் மீது நடந்து போது ஆற்றில் தண்ணீர் வந்திருப்பதைக் கண்டேன். புது வெள்ளத்தைக் கண்டது மனதை மகிழச் செய்தது. நடைப்பயிற்சியைத் துவங்கியிருக்கும் முதல் நாளில் ஆற்றில் தண்ணீர் வந்ததைக் கண்டது நன்நிமித்தம் என்று தோன்றியது. பாலத்தைக் கடந்து வந்ததும் எதிர்ப்பக்கம் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் ‘’ஆத்துல தண்ணி வந்திடுச்சா?’’ என உற்சாகமாகக் கேட்டார். நான் பதில் சொன்னதும் அதனைக் காண ஆர்வமாகச் சென்றார்.
நண்பரின் மனை ஒன்றனுக்கு தனிப்பட்டா விண்ணப்பித்திருந்தோம். கிட்டத்தட்ட 3 மாத காலம் ஆகி விட்டது. இன்னும் பட்டா கிடைக்கவில்லை. அது கிடைத்தால்தான் கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும். மூன்று நாளில் முடிய வேண்டிய வேலை. அதிகபட்சம் ஒரு வாரம். ஆனால் இன்னும் முடியாமல் இருக்கிறது. அந்த ஞாபகம் வந்து விட்டது. அந்த ஞாபகம் வந்தாலே சோர்வு வந்து விடும். இருப்பினும் அதனைக் கவனித்தவாறே தொடர்ந்து நடந்தேன். ஊர் எல்லை முடிந்து சேந்தன்குடி என்ற பகுதி தொடங்கியது. அங்கே சாலையின் இரு புறமும் மருதமரங்கள் இருக்கும். வெண் மருது. மருதமரம் பார்க்கவே மிகவும் கம்பீரமாக இருக்கும். அவற்றுடன் சில ஆலமரங்களும் உண்டு. ஒரு ஆலமரம் தன் விழுதுகளை புவியைத் தொட்டு விடும் தொலைவில் வைத்திருக்கிறது. இன்னும் சில மாதங்களில் அவை பூமியைத் தொட்டு விடும் என்று தோன்றியது. அந்த விழுதுகளை என் இரு உள்ளங்கைகளிலும் அணைத்துக் கொண்டேன். ஆலம் விழுதின் ஸ்பரிசம் என்பது மகத்தானது. உயிர் ததும்பும் அதன் உயிர்மையை நாம் நம் கைகளால் உணர முடியும். புவனகிரி அருகே ஒரு கிராமத்தில் 100 ஆண்டுக்கும் மேற்பட்ட அகவை கொண்ட ஆலமரம் ஒன்று உள்ளது. அதனை தற்செயலாகக் கண்டேன். பின்னர் 4 முறை அந்தப் பக்கம் செல்லும் போது போய் பார்த்து விட்டு வந்தேன். அந்த ஆலமரத்தின் விழுதுகள் ஏழு திசைகளில் மண்ணைத் தொட்டு விட்டன. அவை அனைத்துமே பிரதான மரத்தைக் காட்டிலும் தடிமனாக பருக்கத் தொடங்கி விட்டன. அந்த மரத்துக்கு நன்றி பாராட்டும் விதமாக அந்த மரத்தின் நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக அந்த ஊரில் புதிதாக 100 ஆலமரங்களை நட வேண்டும் ; அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என எனக்கு ஒரு திட்டம் இருந்தது. அதன் நினைவுகள் இந்த விழுதுகளை கையில் ஏந்திக் கொண்ட போது மனதில் துளிர்த்தது.
மெல்ல நடந்து கொண்டேயிருந்தேன். அந்தப் பகுதி ஊரின் புறநகர். இரு சக்கர வாகனங்கள் பெருகத் தொடங்கிய 1991ம் ஆண்டுக்குப் பின் அந்தப் பகுதியில் நகர்கள் உருவாயின. ஐந்து நிமிட இரு சக்கர வாகனப் பயண தூரத்தில் அமைந்திருந்தன அந்த நகர்கள். மெல்ல விரிவாகி விரிவாகி 15 நிமிடப் பயண தூரம் வரை சென்று விட்டன. அதற்கு மேல் பெரிய விரிவாக்கம் நிகழ வாய்ப்பு இல்லை. மேலும் ஒரு சில கி.மீ செல்லத் தொடங்கியதும் வீடுகள் குறையத் தொடங்கின. வீடுகள் முற்றிலும் இல்லாமல் ஆகி நெல்வயல்கள் இருந்த பகுதிகளில் ஒரு பூனை தென்பட்டது. நாய்கள் இல்லாத பகுதி பூனைக்கு வசதியானது. நெல்வயல்களின் வரப்பில் எலிகள் இருக்கக்கூடும். அவை பூனையின் உணவு. அதன் பின் உளுத்துக்குப்பை என்ற ஊர் வந்தது. அந்தக் கிராமத்தின் சிறு பகுதி மட்டுமே நெடுஞ்சாலையில் இருக்கும். அதனைக் கடந்து சென்றால் சோழ சக்கர நல்லூர் என்னும் ஊர் வரும். நரசிம்ம ராவ் பாரதப் பிரதமராக இருந்த போது இந்த ஊரில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அப்போது தகவல் ஒலிபரப்பு அமைச்சராக இருந்த மாதவராவ் சிந்தியா அதனைத் துவக்கி வைக்க அந்த ஊருக்கு வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் நானும் பங்கு பெற்றேன். அப்போது நான் சிறுவன். இது நடந்தது 1992ம் ஆண்டாக இருக்கக்கூடும். 33 ஆண்டுகள் ஆகி விட்டது. தொலைக்காட்சிக்கு ஆண்டெனா என ஒன்று இருந்தது என்பதே 90க்குப் பின் பிறந்தவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கால் நடந்து கொண்டேயிருந்தது. சலிப்பில்லை ; சோர்வில்லை. நடைக்கு ஏற்ப என் மனமும் அதன் தாளகதியில் இயங்கிக் கொண்டிருந்தது. நடை நெடுக விடிவெள்ளி கண்ணில் பட்டுக் கொண்டேயிருந்தது. வெள்ளி அழகு வாய்ந்தது. அதன் வெண்நிறமும் அதனைச் சுற்றி இருக்கும் சிறு ஒளி வட்டமும் வசீகரமானவை. எத்தனை முறை பார்க்க முடியுமோ அத்தனை முறை அதனைக் கண்டவாறு சென்றேன். விடிவெள்ளி என்பது எத்தனை பேருக்கு வாழ்க்கையில் வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொடுத்திருக்கும். ஒவ்வொரு முறை விடிவெள்ளியைக் காணும் போதும் எனக்கு நினைவுக்கு வரும் கவிதை வரிகள் ராஜசுந்தர்ராஜனுடையவை . கொடுப்பினை என்ற கவிதை. ‘’இரா முழுக்க தவம் கிடந்தன வான் நிறைய மீன்கள் பரிதியை நேர் நின்று கண்டதோ விடிய வந்த ஒரு வெள்ளி’’.
நத்தம் என்ற கிராமத்தை வந்தடைந்தேன். அங்கேயிருக்கும் ஒரு மைல்கல் திருவாரூர் எத்தனை கி.மீ தூரம் எனக் காட்டிக் கொண்டிருந்தது. அந்த இடம் தான் எட்டாவது கிலோ மீட்டர். அங்கே திரும்பி வந்த பாதை வழியாகவே வீட்டுக்குச் சென்றால் 16 கி.மீ நிறைவு பெற்றிருக்கும். எட்டாவது கிலோ மீட்டர் மைல்கல்லில் நின்று வானில் இருந்த விடிவெள்ளியைத் தொழுதேன்.
பாதி தூரம் வந்து விட்டோம் என்னும் நிலை மகிழ்ச்சியைத் தந்தது. மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். பள்ளிவாசல் ஒன்று உறக்கத்தை விட தொழுகை மேலானது என அறிவித்துக் கொண்டிருந்தது. சர்ச் ஒன்றில் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கியிருந்தன. ஆலயம் ஒன்றிலிருந்து வேங்கடேச சுப்ரபாதம் கேட்கத் தொடங்கியது. உடல் முழுதும் லேசாக வியர்த்திருந்தது. இன்னும் பொழுது புலரவில்லை. இன்னும் சற்று நேரத்தில் புலர்ந்து விடும் என்னும் சூழ்நிலை. மெல்ல நடந்து கொண்டிருந்தேன். சோழ சக்கர நல்லூரில் ஒரு பெண்மணி வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். நேரம் எத்தனை என்று தெரியவில்லை. நேரத்தைத் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. நடக்க நடக்க பொழுது விடிந்து கொண்டிருந்தது. சேந்தன்குடியைத் தாண்டி ஊருக்குள் பிரவேசித்தேன். காவிரிப் பாலத்தில் பலர் நின்று காவிரி புதுவெள்ளம் கண்டு கொண்டிருந்தனர். காலை வெளிச்சம் வந்ததும் காலில் சிறு கற்கள் குத்துவது போன்ற உணர்வு இருந்தது. ஏன் என்று யோசித்துப் பார்த்தேன். நடையின் கடைசி ஒரு கிலோ மீட்டர் என்பதால் மனம் சிறு கற்களைப் பொருட்படுத்துகிறதா என எண்ணியவாறு சென்றேன். தெரிந்தவர் ஒருவர் எதிர்ப்பட்டு காலை வணக்கம் சொல்லி ‘’என்ன சார் ! வெறும் காலோட வாக்கிங் கா?’’ என்று கேட்டார். அவருக்கு ஆமோதிப்பை பதிலாக அளித்து விட்டு நடந்தேன். இன்னொரு தெரிந்தவர் எதிர்ப்பட்டார். அவரிடம் இரண்டு நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டு நடக்கத் தொடங்கினேன்.
வீடு வந்து சேர்ந்த போது குருவிகளும் காக்கைகளும் தங்கள் உணவைக் கொத்தித் தின்றிருந்தன. வாசலில் இருந்த வாளியின் தண்ணீரின் மூலம் பாதத்தைத் தேய்த்துக் கழுவிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தேன். கை கால் முகம் கழுவி விட்டு காலை உணவாக ‘’கம்மங்களி’’யைத் தயாரிக்கத் தொடங்கினேன். தயாரானதும் டைனிங் மேஜை மீது அதனை எடுத்து வைத்து விட்டு நீராடச் சென்றேன்.