Thursday, 19 June 2025

ஒரு சுருக்கமான வழி

கம்மங்கூழ் தயாரிப்பதில் உள்ள எல்லா சாத்தியங்களையும் முயற்சி செய்து பார்த்ததில் எனக்கு மிக உகந்த வழி என்ன என்பதைக் கண்டுகொண்டேன். அதாவது ஒரு டம்ளர் கம்பு மாவுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து கரைத்துக் கொள்வது என்பது எளிய வழி என்று தோன்றியது. கம்புமாவு 1 : 1 என்ற விகிதத்தில் முழுமையாக கரைந்து விடுகிறது. தேவையெனில் கட்டிகள் இருந்தால் அவற்றைக் கையால் கரைத்து விட முடிகிறது. அதனை அடுப்பில் வைத்து சூடாக்கும் போது சில நிமிடங்களில் கொதிக்கத் தொடங்குகிறது. களி பதம் வரும் வரை கிண்டிக் கொண்டேயிருக்க வேண்டும். 15 நிமிடத்துக்குக் குறைவான நேரத்தில் கூட பதம் வந்து விடுகிறது. அடுப்பை நிறுத்தி விட்டு களியை ஒரு தட்டைப் போட்டு மூடி வைத்தால் ஒரு மணி நேரம் கழித்து களியின்  மேல் நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டால் களியும் தண்ணீரும் மெல்ல வேதிவினை புரிந்து கொண்டிருக்கும். களி ஓரளவு தண்ணீரைக் குடிக்க முயலும். அடுப்பிலிருந்து இறக்கிய போது இருந்த நிலையை விட சற்று மேலான பதத்தை அடைந்திருக்கும். காலையில் களியையும் அதன் மேல் இருக்கும் நீரையும் கரைத்துக் கொள்ளலாம். 

முன்னர் நான் ஒரு டம்ளர் கம்புமாவுக்கு ஐந்து டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொதிக்க வைப்பேன். இதில் உள்ள நன்மை என்னவெனில் 15 நிமிடம் கொதிக்க வைத்து விட்டு அடுப்பை அணைத்து விடலாம். மிக நெருக்கி களி பதம் கிடைக்கும். நீர்மமாகவே இருக்கும். காலையில் அப்படியே அருந்தலாம். இருப்பினும் ஐந்து டம்ளர் தண்ணீர் கொதிக்க சற்று கூடுதல் நேரம் தேவைப்படும். ஒரு டம்ளர் தண்ணீர் சீக்கிரம் கொதிநிலைக்கு வந்து விடும். 

இன்று மாலை 6.30க்கு கம்மங்கூழ் தயாரித்தேன். 15லிருந்து 20 நிமிடங்களில் தயாரித்து விட்டேன். அடுத்த தினத்துக்கான உணவு கையிருப்பு இருக்கிறது என்னும் உணர்வே பெரும் விடுதலையை உணரச் செய்கிறது. காலை 7 மணிக்கு கூழ் அருந்தி விட்டு எங்கேனும் செல்ல வேண்டும் என்று நினைத்தால் ஒரு தண்ணீர் பாட்டிலில் கூழை எடுத்துக் கொண்டு சென்றால் கூட செல்லும் இடத்தில் குடித்துக் கொள்ளலாம். ஒருநாள் பயணங்களுக்கு கூழ் மிகவும் பயன் தரத்தக்கது என்பதைப் புரிந்து கொண்டேன். அவ்விதமாக ஏதேனும் முயன்று பார்க்க வேண்டும். 

இந்த குறுகிய கால அனுபவத்தில் நான் உணர்ந்தது என்னவெனில் கம்மங்கூழ் அருந்தினால் அருந்திய பின் 7 மணி நேரத்துக்கு வயிறு நிரம்பியிருக்கும் உணர்வே இருக்கிறது. அதன் பின்னும் பெரும்பசி இல்லை. காலை 7 மணிக்கு கூழ் அருந்தினால் மாலை 4 மணிக்கு அடுத்த வேளை கூழை அருந்தினால் போதுமானதாக இருக்கிறது. இரவு உணவு தேவைப்படுவதில்லை. ஒருநாளைக்கு இரண்டு வேளை உணவு என்னும் நடைமுறைக்குச் செல்ல இந்த உணவுமுறை பயன் உள்ளதாக இருக்கும் என்று படுகிறது.