Thursday, 12 June 2025

திக்குத் தெரியாத காட்டில் ( நகைச்சுவைக் கட்டுரை)

ஊருக்குப் பக்கத்தில் பெரிய பரப்புள்ள நிலம் ஒன்றை நண்பர் விலைபேசியிருக்கிறார். அதன் பெரும் பகுதி புதராக உள்ளது. கிரய உடன்படிக்கை செய்த பின் அந்த புதர்களை அகற்ற வேண்டும் என நண்பர் உத்தேசித்திருந்தார். நான் பலமுறை அந்த இடத்துக்குச் சென்றிருக்கிறேன். எனினும் அந்த புதர்களைக் கடந்து அந்த இடத்தின் இறுதி எல்லை வரை சென்றதில்லை. நேற்று வெளிநாடு வாழ் இந்தியரான எனது நண்பர் ஒருவரிடம் அந்த இடம் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஆர்வம் மேலிட கூகுள் மேப் உதவியுடன்  அந்த இடத்தை தனது கணிணியில் பார்த்தார். அந்த இடத்தின் மேற்கு எல்லையை ஒட்டி 3 சிறு குளங்கள் இருப்பதாக செயற்கைக்கோள் பிம்பம் காட்டியது. அது குறித்து என்னிடம் கேட்டார். ஆழம் குறைவாக அந்த இடத்தின் பழைய உரிமையாளர்களால் வெட்டப்பட்ட குளங்களாக அவை இருக்கக் கூடும் என பதில் கூறினேன். எனினும் எனக்கும் அவை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என ஆவல். இன்று வேறு ஒரு வேலையாக அந்த ஊரைக் கடந்து சென்றேன். அப்போது அந்த இடத்துக்குச் சென்றேன். 

அந்த இடத்தின் நீளம் 500 அடியாக இருக்கக்கூடும். நூறு அடி தூரம் வரை நடந்து செல்ல முடிந்தது. அதன் பின் முழுமையாகப் புதர்கள். ஒரு ஆர்வத்தில் அந்த புதர்களின் உள் நுழைந்தேன். இயல்பான வழமை என்றால் அந்த இடத்தில் இன்னொருவர் உடன் இல்லாமல் நுழைய முயன்றிருக்க மாட்டேன். இருவர் சேர்ந்து ஒரு செயலைச் செய்வது என்பது அடிப்படையில் மிக்க பலன் கொண்டது. அது வேலையின் பாரத்தை தர்க்கபூர்வமாக பாதியாக மட்டுமல்ல பத்தில் ஒரு பங்காகக் கூட ஆக்கி விடும். அதன் இன்னொரு எல்லை என்பது அபூர்வமாக அந்த பாரத்தை மேலும் கூட்டவும் வாய்ப்பு உண்டு. 

நூற்று ஒன்றாவது அடியிலிருந்து இருநூறாவது அடி வரை மெல்ல ஊடுறுவி சென்றேன். மண்ணெங்கும் பல்வேறு விதமான செடி கொடிகள் மண்டியிருந்தன. முட்செடிகள் அதிகம் இல்லை. எனவே முன்னகர்ந்து செல்ல முடிந்தது. அத்தனை புதர் மண்டியிருப்பதால் நிச்சயம் நாகங்கள் அங்கே இருக்கக் கூடும் என எண்ணினேன். மண் கண்ணுக்குத் தெரியவில்லை. எங்கும் பச்சை. சுருண்டிருக்கும் ஏதேனும் ஒரு நாகத்தின் மீது கால் வைக்க வாய்ப்பு அதிகம். இருப்பினும் கட்டிடப் பொறியாளர்களுக்கென ஒரு உள்ளுணர்வு உண்டு. அதன் துணையுடன் முன்னகர்ந்தேன். இருநூறு அடி சென்று விட்டேன். நான் வந்த வழியில் இருக்கும் செடிகளை ஒடித்து விட்டுக் கொண்டே வந்திருக்க வேண்டும். செல்ல வேண்டிய இடம் வரை சென்று விட்டு திரும்பும் போது ஒடிந்திருக்கும் செடிகளை அடையாளமாகக் கொண்டு வந்து விடலாம். நான் அவ்விதம் செய்யவில்லை. அந்த புதர்களில் மனிதர்கள் நடமாடும் பாதை இருக்கும் என்றே யூகித்திருந்தேன். இருநூறு அடிக்கு மேல் அவ்வாறு இல்லை. முட்புதர்கள் அதிகம் இருந்தன. அவை என் உடலில் குத்த ஆரம்பித்தன. தோல் எரிச்சலை உண்டாக்கும் செடிகள் தோலை எரியச் செய்தன. கிட்டத்தட்ட அந்த இடத்தின் மையத்துக்கு வந்து விட்டேன். அங்கே உயரமான மரங்கள் சில வட்டமாக அடர்ந்திருந்தன. அவற்றின் உச்சிக்கிளைகளில் கழுகுகளும் பருந்துகளும் கூடு கட்டிக் குடியிருந்தன. எனது பிரவேசத்தை உணர்ந்து அனைத்தும் ஒலியெழுப்பி வானில் சிறு உய்ரம் பறந்து வட்டமடித்தன. இத்தனை கழுகுகளும் பருந்துகளும் கூடு கட்டி இருப்பதால் தான் பாம்புகள் அவ்வளவாக இல்லாமல் இருக்கின்றன என எண்ணினேன். தர்க்க மனம் இவ்விதம் நிகழ்வுகளை தொகுத்துக் கொண்டிருக்கையில் பாதி தூரம் வந்து விட்டதால் இன்னும் பாதி தூரம் தானே சென்று விடுவோம் என முன்னே சென்றேன். முன்னே என்று சொல்கிறேனே தவிர பக்கவாட்டில் பல அடிகள் நடந்தே முன்னே சில அடிகள் செல்ல முடிந்தது. முன்னே சில அடிகளும் பக்கவாட்டில் பல அடிகளும் சென்றதால் பக்கவாட்டு பகுதியில் அதிக தூரம் சென்று விட்டேன். அங்கே நிறைய கறையான் புற்றுகள் இருந்தன. தமிழக அரசியல் மேடைகளில் ‘’கறையான் புற்றில் புகுந்த கருநாகம்’’ என்னும் பதம் அதிகமாக பயன்படுத்தப்படும். அந்த புற்றுகளை ஒட்டி நடக்கும் போது எந்த புற்றில் எந்த பாம்போ என்ற தயக்கத்துடன் தாண்டி தாண்டி சென்றேன். அங்கே சில குளவிக் கூட்டமும் வண்டுகளும் தென்பட்டன. 

பாம்பு கடித்தால் கூட உயிர் பிழைக்க சில சதவீதங்களாவது சாத்தியம் உண்டு. விஷ வண்டுகள் கடித்தால் கதை மிக விரைவில் முடிய அதிக வாய்ப்புகள் உண்டு. விஷ வண்டுகளும் குளவிகளும் முகத்திலும் கைகளிலும் கடிக்க ஆரம்பிக்கும். அவை சூழ்ந்து கொள்ளும். அந்த இடத்துக்குப் புதிதான அன்னிய பிரவேசம் நிகழ்ந்திருக்கிறது ; அதனால் தனது உயிர்க்கூட்டத்தின் வாழ்தலுக்குப் பாதிப்பு என அவற்றின் உள்ளுணர்வில் இருக்கும். எனவே சூழ்ந்து கொட்டும். நம் கையில் நெருப்போ புகையோ இல்லையென்றால் அவற்றிடமிருந்து தப்புவது மிகவும் கடினம். 

குளவிகளும் வண்டுகளும் கொட்டி நிலைகுலைந்து பின்வாங்கிச் செல்லும் போது ஒரு கட்டு விரியனோ அல்லது கண்ணாடி விரியனோ கடித்தால் எவ்விதம் இருக்கும் என கற்பனை செய்து பார்த்தேன். சூரிய வெளிச்சம் இருந்த இடம் ஒன்றில் சென்று அந்த சிறு இடத்தில் எந்த ஜந்துக்களும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு சில நிமிடங்கள் மெல்ல நிலைப்படுத்திக் கொண்டு நின்றேன். எங்கும் பச்சைப் புதர்கள் என்பதால் காற்று மென் ஈரத்துடன் இருந்தது. சில இடங்களில் மட்டுமே சூரிய வெளிச்சம் உள்ளே இருந்ததால் மண்ணும் ஈரமாகவே இருந்தது. நான் நின்று கொண்டிருந்த இடத்தின் உண்மையான சிக்கல் மனித நடமாட்டம் உள்ள பகுதியிலிருந்து குறைந்தபட்சம் 300 அடிகள் தூரத்தில் நான் இருக்கிறேன். நான் அபயக்குரல் எழுப்பினாலும் அந்த புதரின் அடர்த்தியைத் தாண்டி எவருக்கும் கேட்காது. உண்மையான சிக்கல் அதுவே என்பதைப் புரிந்து கொண்டேன். பின்வாங்க வேண்டியது மட்டுமே உடன் செய்ய வேண்டியது என எண்ணினேன். எனது பார்வை மேலும் கூர்மை கொண்டது. கண்ணில் ஏதும் ஜந்துக்கள் தென்படுகிறதா என பார்த்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன். நான் நடந்து வந்த பாதை அல்ல இப்போது சென்று கொண்டிருப்பது என்பது எனக்கு நன்றாகவே தெரிந்தது. அதை விடவும் இங்கே முட்செடிகள் அதிகம். விதவிதமான கொடிகள் என் உடலை நான் நடந்து செல்கையில் சுற்றின. 

அவற்றை அறுத்து விட்டு நகர்ந்தேன். பாச பந்தங்கள் கூட இவ்விதமானவை தான் என்ற எண்ணம் சம்பந்தமில்லாமல் தோன்றியது. எங்கெல்லாம் சூரிய வெளிச்சம் இருக்கும் திட்டுகள் உள்ளனவோ அங்கே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் என சென்று கொண்டேயிருந்தேன். கொஞ்ச நேரத்தில் கழுகுகளின் பருந்துகளின் கூடுகள் இருக்கும் மரங்களுக்கு அடியில் வந்தேன். இன்னும் பாதி தூரம் இருக்கிறது என எண்ணி நகர்ந்தேன். எங்கெல்லாம் புதர் அடர்த்தி குறைவோ அங்கே சென்று சில வினாடிகள் நிலை கொண்டு விட்டு தொடர்ந்து நகர்ந்தேன். நேரப் பிரக்ஞை அப்போது என் அகத்தில் இல்லை. அந்த காட்டுப்புதர் மட்டுமே என் பிரக்ஞையில் இருந்தது. மெல்ல நகர்ந்து நகர்ந்து சாலை இருக்கும் இடத்துக்கு வந்து விட்டேன். 

சோழர் படையில் ‘’காடுவெட்டிகள்’’ என்ற பிரிவு உண்டு. படை ஒரு காட்டைக் கடந்து செல்லப் போகிறது எனில் அந்தக் காட்டை அந்த படை எவ்வளவு விரைவில் கடக்க முடியுமோ அவ்வளவு விரைவில் கடக்க பாதையை உருவாக்கித் தருவதே அவர்கள் பணி. அவர்களுக்கு காடுகள் குறித்து காட்டுயிர்கள் குறித்து காட்டு மரங்கள் குறித்து வானியல் குறித்து மண்ணியல் குறித்து ஆழமான அறிவு உண்டு. அந்த குழு படை எந்த காட்டைக் கடக்க வேண்டுமோ அந்த காட்டுக்கு பல நாட்கள் முன்னரே வந்து காடுவெட்டி பாதை உண்டாக்குவார்கள். அந்த படைப்பிரிவு குறித்த எண்ணத்துடன் அந்த இடத்தை நீங்கிச் சென்றேன்.