இன்று என் வாழ்வின் முக்கியமான நாள். இன்று நான் மேற்கொண்ட முயற்சி எனக்கு பலவிதங்களில் பெரும்பயன் அளிக்கக்கூடியது. நான் இன்று பெருமகிழ்வையும் பெரும் அகவிடுதலையையும் உணர்கிறேன். இன்று சுடர்ந்திருக்கும் தீபத்தை என்றும் அணையாமல் காப்பேன்.
வீட்டில் எல்லோரும் ஊருக்குச் சென்றிருக்கிறார்கள்.
இன்று மதியம் எனது உணவை நானே சமைத்துக் கொண்டால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. இதுநாள் வரை எனக்கு உணவை சமையல் செய்த பழக்கம் இல்லை. அடுப்பின் முன் பல நிமிடங்கள் நின்றிருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததேயில்லை. அல்லது அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளாமல் இருந்திருக்கிறேன்.
கம்பு, கேழ்வரகு ஆகிய இரு தானியங்களை மட்டும் உணவாக எடுத்துக் கொள்ளும் எளிய உணவுமுறைக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. கர்நாட்க மாநிலத்தில் கம்பும் கேழ்வரகும் மிகவும் விரும்பப்படும் உணவுகள்.
இன்று மதியம் கடைக்குச் சென்று கம்பு மாவு அரை கிலோ வாங்கி வந்தேன். அடுப்பை சுடரச் செய்து அதன் மேல் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொண்டேன். தண்ணீர் சில நிமிடங்களில் கொதிக்கத் தொடங்கியது. அதில் கல் உப்பை போட்டுக் கொண்டேன். பின்னர் ஒரு டம்ளர் கம்பு மாவை அதில் கலந்தேன். ஒரு கரண்டி மூலம் தொடர்ந்து கலக்கி விட்டுக் கொண்டேயிருந்தேன். 15 நிமிடம் இவ்விதம் தொடர்ந்து கலக்கி விட்டுக் கொண்டேயிருந்தேன். 10 நிமிடத்திலேயே கம்பு மாவு களி பதத்துக்கு வந்தது. மேலும் 5 நிமிடங்கள் கலக்கி விட்டேன். அடுப்பின் நெருப்பை 15 நிமிடமும் சன்னத்திலேயே வைத்திருந்தேன். அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை வெளியே எடுத்து மூடி வைத்தேன். 15 நிமிடம் ஆறியதும் அதன் மேல் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மேலும் ஆறவைத்தேன். இது 6 மணி நேரம் மேலும் ஆற வேண்டும். எனினும் தேவை கருதி உடன் அருந்தவும் செய்யலாம்.
சமையல் செய்து கொண்டிருக்கும் போதே தீவிரமான பசி இருந்தது. உணவு அருந்தும் மேஜையின் மேல் நான் சமைத்த உணவைக் கொண்டு வந்து வைத்தேன்.
அதனைத் தொட்டு வணங்கினேன். இத்தனை ஆண்டுகளாக இவ்வாறான முறைகளால் ஆக்கப்பட்ட உணவுதான் உயிரைக் காத்துள்ளது ; உடலை வளர்த்துள்ளது என நினைத்த போது என் கண்களில் நீர் துளிர்த்தது.
பசி தீவிரமாக இருந்தது.
கம்மங்கூழைப் பருகத் தொடங்கினேன். மேலும் உப்பு தேவை என்று தோன்றியது. சேர்த்துக் கொண்டேன். முழுமையாகப் பருகினேன். இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. முக்கால் வயிறு நிரம்பி இன்னும் கால் வயிறு தேவை என்னும் நிலையில் உணவு முழுமையாகத் தீர்ந்திருந்தது. சமையலுக்குப் பயன்படுத்திய பாத்திரங்களை நீரால் கழுவி வைத்து விட்டு வந்தேன்.
சமையலுக்குத் தேவையான கலன்களையும் உணவுப் பொருள்களையும் எடுத்து வைத்தல், அடுப்பை சுடரிட்டு சமையல் செய்தல், உணவு உண்ணல், உண்ட பாத்திரங்களை கழுவி வைத்தல் ஆகியவை ஒரே செயலின் வெவ்வேறு நிலைகள் என்ற எண்ணம் தோன்றியது. இன்றைய நாள் முழுவதும் பரவசமாக இருந்தது.
மகாபாரதத்தில் யக்ஷப் பிரசன்னத்தில் யக்ஷன் கவலை இல்லாத மனிதன் யார் என்று கேட்க யுதிர்ஷ்டன் எந்த மனிதன் தனது உணவை தானே சமைத்துக் கொள்கிறானோ அவனே கவலை இல்லாதவன் என்று கூறுகிறான்.
இன்றைய அனுபவத்தின் பின் இனி எனது உணவை நானே சமைத்துக் கொள்வேன் என எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.