நூல் : திருநெல்விருந்து ஆசிரியர் : சுகா பக்கம் : 128 விலை : ரூ.150 பதிப்பகம் : சுவாசம் பதிப்பகம், 52/2, பி எஸ் மகால் அருகில், பொன்மார், சென்னை -127
***
கேரளத்தில் ‘’திரிமதுரம்’’ என்ற - வாழைப்பழம், தேன், வெல்லம் ஆகிய மூன்று இனிமைகளால் செய்யப்பட்ட - மிக இனிய உணவைச் செய்து இறைவனுக்கு அர்ப்பணிக்கும் வழக்கம் உள்ளது. அதனை உண்ணாதவர்கள் கூட இந்த மூன்று இனிமைகளைத் தனித்தனியாக உண்டிருப்பார்கள். அவர்களால் இந்த மூன்று இனிமைகளும் ஒன்றிணைந்த இனிமை எவ்விதம் இருக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ள முடியும். வாழ்வின் இனிய விஷயங்களை மட்டுமே காண்பது என்பதும் இனிமையானவற்றால் மட்டுமே வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பதும் பெரும்பேறு. எழுத்தாளர் சுகா அவ்விதமான வாழ்க்கை அமையப் பெற்றவர். சுகாவின் எழுத்துக்கள் திரிமதுரம் போல் இனியவை.
***
தாயார் சந்நிதி, மூங்கில் மூச்சு, சாமானியனின் முகம் ஆகிய நூல்களின் ஆசிரியரான சுகாவின் இன்னொரு நூல் திருநெல்விருந்து. பொருநை நதியால் செழித்திருக்கும் நெல்லைச்சீமைக்கென கல்வியிலும் கலையிலும் நுண்கலையிலும் சிறப்பான பாரம்பர்யக் கூறுகள் உண்டு. அவற்றைப் பேணி வளர்க்கவும் அவற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உயிர்ப்புடன் அளித்துச் செல்லவும் நெல்லைச்சீமை என்றுமே முன்னிலை வகித்துள்ளது. நெல்லைச்சீமையின் கலை இலக்கிய ஆளுமைகளில் முக்கியமானவர் சுகா.
தாயின் கருவறையிலிருந்து வெளி வந்த மானுடர் அனைவருமே ஒரே புவியில்தான் பிறக்கிறார்கள் ; ஒரே வானம் தான் அவர்கள் அனைவரின் தலைக்கு மேலும் இருக்கிறது. வானுக்கும் மண்ணுக்கும் இடையில் நிகழும் மானுட வாழ்க்கையில் இனியனவற்றையே காணும் இனியன சூழ இருக்கும் வாழ்வு மிகச் சிலருக்கே வாய்க்கிறது. நமது மரபு ‘’கந்தர்வர்கள்’’ என்று வானுலகின் ஓர் அடுக்கில் வாழ்பவர்களைக் கூறுகிறது. எழுத்தாளர் சுகா ஒரு கந்தர்வர். இனிய உணவின் ருசியை உணரும் கந்தர்வர் ; இனிய இசையுடன் அகம் இணையும் கந்தர்வர் ; இனிய நண்பராகவும் இனிய நண்பர்களால் சூழப்பட்டும் வாழும் கந்தர்வர்.
சுகா திருநெல்வேலி நகரின் மனிதர்கள் பலரைப் பற்றி மிக நுணுக்கமாக விவரிக்கிறார். சுகாவின் விவரிப்புக்குள் நாம் மூழ்க மூழ்க அந்த மனிதர்கள் அனைவரையும் நாம் நமக்கு மிக அணுக்கமாக உணரத் துவங்குகிறோம். இன்னும் நூறாண்டு கழித்து சுகாவை வாசிக்கப் போகும் வாசகனும் சுகா விவரிக்கும் மனிதர்களை அணுக்கமாக எண்ணியே வாசிக்கப் போகிறான். சுகா தான் விரும்பிய நெல்லை மனிதர்களுக்குச் செய்திருப்பது என்ன ? சுகா தனது எழுத்தின் மூலம் அந்த மனிதர்களை சாகா வரம் பெற்றவர்களாக ஆக்கி விட்டார். விருந்து கொடுப்பவனின் இயல்பு அவன் அளிக்கும் விருந்திலும் வெளிப்படும் என்னும் அவதானம் கொண்ட மனிதன் அற்புதமானவன் இல்லையா? விஜயவாடாவில் சுகாவுக்கு நிகழ்ந்த அனுபவம் ஒன்று இந்நூலில் வருகிறது. சுகாவின் தோழரான குஞ்சு ஒருநாள் சுகாவை ‘’வா ! கனகதாரா கோவிலுக்குச் சென்று வருவோம்’’ என அழைக்கிறார். அந்த கோவில் சென்னையின் ஒரு பகுதியில் இருக்கிறது என சுகா நினைத்துக் கொண்டிருக்க பைய சுகாவை விஜயவாடா அழைத்துச் சென்று விடுகிறார் குஞ்சு. அங்கே சாமி கும்பிட்டு விட்டு ஊர் திரும்பலாம் என எண்ணும் போது குஞ்சு ‘’ இன்னைக்கு இங்க நமக்கு வீட்டு சாப்பாடு இருக்கு’’ எனக் கூறி சுகாவை பிரதேசம் புரியாத ஊரில் ஆட்டோவில் அழைத்துச் செல்கிறார். அங்கே ஒரு ராஜஸ்தானிப் பெண்ணும் அவரது கணவரும் அவர்கள் இருவரையும் வரவேற்கிறார்கள். அந்த ராஜஸ்தானிப் பெண் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட ‘’பிங்கி’’. அவர்கள் முன்னோர்கள் தொழில் நிமித்தமாக ஐந்து தலைமுறைக்கு முன்னால் திருநெல்வேலியில் குடியேறியவர்கள். தங்கைப் பாசத்துடன் ’’பிங்கி’’ உணவு பரிமாறும் போது சுகா ‘’ஏ பிள்ள ! ஒனக்கு சமையல்லாம் பண்ண தெரியுமா? நம்ம ஊர்ல எப்பம் பாரு . விசாக பவன்லயும் செண்ட்ரல் கபேயிலயும்தானே அடிக்கடி சாப்பிடுவ?’’ என நெல்லைத் தமிழில் கேட்க அதற்கு பிங்கி நெல்லைத் தமிழிலேயே ‘’இப்பவும் ஊருக்கு வந்தா அங்கே போய் சாப்பிடாம இருக்க மாட்டெம்லா. இங்கே இவாளுக்கு ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கிடல. வேற வளியில்லாம எல்லாத்தையும் படிச்சுக்கிட்டம்ணே. நல்லா இருக்கா இல்லையா ? அதச் சொல்லு முதல்ல’’ என பதில் சொல்கிறார். விஜயவாடாவில் சுகாவும் பிங்கியும் நெல்லைத்தமிழில் பேசிக் கொள்ளும் இடம் மிகச் சிறப்பானது.
சுகா பைரவப் பிரியர். இறைவன் மனிதன் மேல் கருணை கொண்டிருந்த நேரம் ஒன்றில் இந்த உலகுக்கு கொடுத்து அனுப்பிய ஜீவன் மனிதத் தோழனான நாய். சுகாவுக்கு நாய்கள் மேல் தனிப்பிரியம். சுகாவின் நண்பர்கள் பலர் சுகாவைப் போலவே நாய்களை நேசிப்பவர்கள். பிராணிகள் மேல் நேசம் கொண்டிருக்கும் எவரும் படிக்க வேண்டிய ஒன்று இந்நூலின் பைரவப் பிரியம் என்னும் கட்டுரை. தனது நண்பர் ஒருவருக்கு சுகா கண்ணதாசன் எழுதிய ‘’என்னருமை சீசர்’’ என்னும் கவிதையின் சில வரிகளை அலைபேசி மூலம் அனுப்பியதாகக் கூறியிருந்தார். அந்த வரிகளால் கவரப் பெற்று கண்ணதாசனின் அந்த கவிதையின் முழு வரிகளை இணையத்தில் தேடினேன். அந்த பாடல் :
என்னருமை சீசர்
-----------------------------
------------------------------
-------------------------------
நாயொன்றை வாங்கி வந்தேன்...
‘சீசர்’ என்றந்த நாய்க்கு
செல்லப் பெயரிட்டேன்.. நெஞ்சில்
ஆசையாய்ச் சுமந்தேன் .- கையில்
அணைத்து யான் மகிழ்ந்தேன்.. சீசர்
பாசத்தைப் பெற்ற தாயின்
பாலிலும் கண்டே னில்லை..
தேசத்தை நேசிப்போர்க்கு
தேவையோர் நாயின் நெஞ்சம்..
வாலிலே நன்றி சொல்லும்
வாயிலே பிள்ளையாகும்
காலிலே அன்பு காட்டும்
கண்ணிலே உறவு காட்டும்
தோலிலே முளைத்தெழுந்த
ரோமமும் தோழனாகும்
வேலினால் தாக்கினாலும்
வீட்டில்தான் விழுந்து சாகும்...
இறையனாம் கொடியன் நாயின்
இதயத்தில் உலகை வைத்து
முறை சொல்லிப் பழகவொண்ணா
மூங்கையாய்ப் படைத்து விட்டான்
குறை சொல்லிப் பழகிப் போன
கொடிய மானிடரைக் கண்டு
நிறை மட்டும் காண்பதற்கோ
வாயில்லா நிலையை வைத்தான்...
வளர்த்தவன் சிரிக்கின்றானா?
வாய் விட்டே அழுகின்றானா?
தளர்ச்சியில் வீழ்கின்றானா?
தன்வரை குமைகின்றானா?
கிளர்ச்சியில் எழுகின்றானா?
கேலியில் சமைகின்றானா?
உள்ளத்தினில் வளர்வதெல்லாம்
உணர்வது நாயின் நெஞ்சே...
என் குரல் தூரங்கேட்டால்
எகிறிக் கால் பிளந்து வந்து
என்னுடல் மீதில் ஏறி
என்னவோ சொல்ல எண்ணி
முன் வாயில் முகத்தை வைத்து
முழு உடல் நடுங்க ஆடும்
என்னுயிர் சீசருக்கு நான்
எஜமான் அல்ல தோழன்..
குடத்திலே சோற்றை அள்ளி
கொடுத்த கை மீளும் முன்பே
வெடுக்கென கடிக்கும் மாந்தர்...
விழுங்கிய பருக்கை உள்ளே
படுக்குமுன் கேலி பேசும்
மானிடப் பதர்கள் போல
நடக்கும் குணமில்லாத
நாய் எந்தன் சீசர்க்குட்டி...
கடவுளைப் பாடுகின்றேன்
கடவுளைப் பொருளில் காட்டும்
அடிகளைப் பாடுகின்றேன்
அறிவிலார் ஒன்று சேர்ந்த
குடிகளைப் பாடுகின்றேன்
குறை உண்டாம் அவற்றில் - ஆனால்
குடிபுகும் நாயைப் பாடும்
கவிதையில் குறையே இல்லை...
அன்னையே உன்னைக் கேட்டேன்
அடுத்ததொரு பிறவி உண்டேல்
என்னை நீ நாயாய்ப் பெற்று
இத்தலைக் கடனைத் தீர்ப்பாய்
தன்னையும் உணர்ந்து தன்னைத்
தழுவிய கையும் காக்கும்
மன்னவன் பிறப்பு நாய் தான்
மனிதனாய்ப் பிறப்பதல்ல..
- கண்ணதாசன்
***
விவசாயத்துக்கும் நானாவித தொழில்களின் வளர்ச்சிக்கும் இடையேயான பகடையாட்டமே சென்ற ஒரு நூற்றாண்டு கால தமிழ் வாழ்க்கை. நம் தேசமும் குறிப்பாக தமிழகமும் நிலப்பிரபுத்துவ காலத்திலிருந்து ஜனநாயகக் காலகட்டத்துக்கு நகர்ந்து வந்ததன் சாட்சி என்றும் அதனைக் கூறலாம். தன் குடியை குலத்தை எப்போதும் காத்து நிற்கின்றன குலதெய்வங்கள். தன் குடும்பத்தினர் தன் குடியினர் நூறு காத தூரம் சென்றிட்ட போதும் அவர்களைத் தன் நினைவுப் பெருக்கின் ஒரு துளியாய்க் கொண்டு அவர்களைக் கவசமாகக் காத்து நிற்கும் தவத்தில் மாறா உறுதி கொண்டிருக்கின்றன குலதெய்வங்கள். எவ்வளவு தொலைவில் இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை தன் குலதெய்வம் முன் வந்து நிற்கின்றனர் அதன் குடியினர் ; குடும்பத்தினர். எங்கிருந்தாலும் எளிய அம்மக்களின் ஆழுளம் தன் குலதெய்வத்துடன் பிணைந்து நிற்கிறது. தங்கள் கோரிக்கைகளை அதன் முன் வைக்கின்றனர் ; தங்கள் நன்றிகளைத் தெரிவிக்கின்றனர். குலசாமியின் முன் வணங்கி நம்பிக்கையுடன் மீள்கின்றனர். இந்நூலின் ஒரு அத்தியாயம் தெற்கத்திக்காரர்களுக்கும் அவர்கள் குலதெய்வங்களுக்குமான உறவை உயிர்ப்புடன் பேசுகிறது.
***
சுகாவின் எழுத்துக்களில் மூழ்குவது என்பது இனிமையில் மூழ்கி எழும் அனுபவம். சுகாவின் திருநெல்விருந்து ஒரு திருமதுர விருந்து.
***