ஊரில் 120 ஆண்டு காலம் தொன்மையான ஒரு ஓட்டு வீடு இருக்கிறது. அத்தனை தொன்மையான வீடுகள் ஊரில் மேலும் ஒன்றோ அல்லது இரண்டோ இருக்கலாம். அந்த வீட்டில் கூடத்தில் ஒரு அறை மட்டும் கட்டிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். அந்த வீட்டில் வீட்டு உரிமையாளரும் அவர் மனைவியும் மட்டுமே வசிக்கிறார்கள். இரு குழந்தைகள். இருவருமே அமெரிக்காவில் வசிக்கிறார்கள். பேரக் குழந்தைகள் இப்போது பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த தம்பதிக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும். அந்த வீட்டின் தொன்மை மாறாமல் அந்த வீட்டில் அறை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆர்வத்தின் காரணமாக மேற்கொண்ட பணி. கடந்த சில நாட்களாக பணியிடமாகிய அந்த வீட்டில் இருப்பதால் அந்த தம்பதியினர் மிகவும் பரிச்சயமாகி விட்டனர். இந்த நாட்களில் நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். அந்த தம்பதிகளில் கணவர் தன் மனைவியிடம் பேசும் போது ‘’நீ’’ என ஒருமையில் அழைக்காமல் ‘’நீங்கள்’’ என பன்மையில் அழைத்தார். இது எனக்கு வியப்பளித்தது. எங்கும் நான் அப்படி கண்டதில்லை. அவர்களிடம் ‘’ சார் உங்களை எப்போதும் நீங்கள் என பன்மையில் தான் அழைப்பாரா ?’’ என்று கேட்டேன். வீட்டு மனிதர்களின் முன்னால் ‘’நீ’’ என்று ஒருமையில் அழைப்பார்; வெளி மனிதர்கள் இருந்தால் ‘’நீங்கள்’’ என பன்மையில் அழைப்பார் என்று கூறினார். அப்படியா என்று கேட்டுக் கொண்டேன்.