வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரென வேயினித்த மோரும் – திறமுடனே
புல்வேளூர்ப் பூதன் புகழ்ந்துபரிந் திட்டசோ(று)
எல்லா உலகும் பெறும்.
-ஔவை (தனிப்பாடல்கள்)
தமிழ் மூதாட்டியின் தனிப்பாடலில் படித்த வரகரிசிச் சோறு என்னும் வார்த்தை மனதில் இருந்து கொண்டேயிருந்தது. மூன்று நாட்களாக கூழ் மட்டுமே குடித்துக் கொண்டிருந்ததால் இன்று சோறாக உண்ணலாம் என எண்ணினேன். கடைக்குச் சென்று ஒரு கிலோ வரகும் அரை கிலோ கம்பு மாவும் வாங்கிக் கொண்டேன்.
கஞ்சிக்கும் சோறுக்கும் உள்ள வேறுபாடு என்பது வேக வைக்க பயன்படுத்தும் நீரின் அளவு மட்டுமே. ஒரு டம்ளர் வரகுக்கு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்தால் அது வரகரிசிச் சோறு. ஒரு டம்ளர் வரக்குக்கு ஐந்து அல்லது ஆறு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்தால் அது வரகரிசிக் கஞ்சி.
உணவின் உலகம் அற்புதமானது. உணவு வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அற்புதமாக்குகிறது.