வீட்டில் இரு தென்னை மரங்கள் இருக்கின்றன. அதனால் தேங்காய் எப்போதும் தேவையைக் காட்டினும் மிகையாகவே இருக்கும். தேங்காய் மட்டையை காயவைத்து காலி சிமெண்ட் சாக்குகளில் நிரப்பி வைத்திருப்பர். வீட்டின் பணியாளரிடம் அவற்றை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று எரிபொருளாகப் பயன்படுத்திக் கொள்ளும் படி கூறுவர். மூட்டையாக இருப்பதால் அந்தப் பெண்மணி தனது மகனை வந்து எடுத்துச் செல்ல கூறுகிறேன் என்று கூறுவார். அந்த நபர் வந்து எடுத்துச் செல்ல சற்று முன் பின் ஆகும். இவை வழக்கமான காட்சிகள். இன்று கடைவீதி வழியே நடந்து சென்று கொண்டிருந்தேன். ஒரு உணவகத்தின் வாசலில் ஒரு தள்ளுவண்டியில் காய்ந்த தேங்காய் மட்டை மூட்டைகள் பலவற்றை இறக்கிக் கொண்டிருந்தனர். குறைந்தது பத்து மூட்டையாவது இருக்கும். உணவகத்தின் பணியாளர் இறக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் இவற்றை விலைக்கு வாங்குகிறீர்களா என்று கேட்டேன். எங்களிடம் இல்லாத தேங்காய் மட்டைகளா என்றார் அந்த பணியாளர். ஒரு வீட்டில் பயன்படுவதை விட பல மடங்கு தேங்காய் தினமும் தேவைப்படும் இடம் உணவகம். வீட்டில் ஒரு நாளைக்கு நான்கு பேருக்கு உணவு தயாரிப்பார்கள். உணவகத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 300 பேருக்கு உணவு தயாரிப்பார்கள். அவ்விதம் என்றால் அவர்களிடமே உரித்த தேங்காய் மட்டைகள் குவிந்திருக்கும். பின்னர் இந்த மூட்டைகள் எங்கிருந்து வருகின்றன? இந்த கேள்வியை ஆர்வத்துடன் எழுப்பினேன். உணவக உரிமையாளர் வீட்டில் இருந்து வருகின்றன என்று பதில் சொன்னார். ஓர் எளிய காட்சிக்குப் பின்னால் எத்தனை காட்சிகளும் எத்தனை மாந்தர்களும் எத்தனை உணர்வுகளும் எத்தனை செயல்பாடுகளும் இருக்கின்றன என எண்ணிப் பார்த்தேன். வியப்பாக இருந்தது. உணவக உரிமையாளருக்குத் தங்கள் கடையில் அவை மிகுந்து கிடக்கின்றன என்பது தெரியும். எனினும் தங்கள் குடும்பத் தொழிலுக்கு தங்களால் இயன்ற அளவு உதவ வேண்டும் என்ற நோக்கில் உரிமையாளரின் குடும்பத்தினர் அவற்றை சேகரித்து அனுப்பி வைக்கின்றனர். தள்ளுவண்டிக்காரருக்கு நடைக்கூலி கிடைக்கிறது. உணவகப் பணியாளர் ஒருவர் இந்த விஷயத்துக்காக மிகைப்பணி பார்க்கிறார். வழிப்போக்கன் ஒருவனுக்கு வியப்பான காட்சி ஆகிறது. ஒரு பதிவாகவும் ஆகிறது !