Wednesday, 4 June 2025

கவசம்

நான் தினமும் கணிசமான தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் வழக்கம் கொண்டவன். இருபத்து ஏழு ஆண்டுகளாக இரு சக்கர வாகனத்தை இயக்குகிறேன். நான் வாகனம் இயக்கத் துவங்கிய நாட்களில் இருந்த சாலை அமைப்பும் சாலையில் செல்லும் வாகன அளவும் இன்று இல்லை. சாலைகள் அகலமாகி உள்ளன. சாலையில் செல்லும் வாகன அளவு அதிகரித்து உள்ளது.  என் மீது அக்கறை கொண்ட நண்பர் என்னை இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்து பயணிக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் கூறி சில வாரங்கள் ஆகின்றன. இன்று என் அறையின் பரணில் இருந்த ஹெல்மெட்டை வெளியே எடுத்து பைக்கில் பயணிக்கும் போது அணிந்து சென்றேன். 

சில ஆண்டுகளுக்கு முன்னால், ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ பயணித்த போது பயணத்தின் எல்லா நாட்களும் ஹெல்மெட் அணிந்திருந்தேன். தன் மண்ணின் எல்லா பிராந்தியங்களிலும் அமைதியாக சகஜமாக பயணிக்கும் வாய்ப்பை நாடு வழங்கியிருக்கிறது ; அந்நாட்டின் மகனாக பயணியாக நாடு வகுத்திருக்கும் போக்குவரத்து விதியைப் பின்பற்ற வேண்டும் என்ற உணர்வின் மேலீட்டால் பயண நாட்கள் முழுமைக்கும் ஹெல்மெட் அணிந்தேன். 

முதல் நாள் ஹெல்மெட் அணியும் போது உடலுக்கு பாரமான ஒன்று உடலுடன் இருப்பதாகத் தோன்றும். வெளி ஓசைகள் எதுவும் இல்லாதது போல் ஆகி விடும். இருப்பினும் சில மணி நேரங்களில் உடல் பழகி விடும் ஹெல்மெட் உடலின் ஒரு பகுதி என உடலும் மனமும் ஏற்றுக் கொள்ளும். 

இன்று அணிந்த ஹெல்மெட் சென்ற ஆண்டு புதிய இரு சக்கர வாகனம் வாங்கிய போது அந்த வாகனத்துடன் வழங்கப்பட்ட ஒன்று. இன்று அதனை அணிந்ததும் ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ பயணம் நினைவில் எழுந்தது. அந்த பயணத்தின் மனநிலையும் உருவானது. 

இன்றும் ஓசைகள் இல்லாமல் போய் விட்டதாக ஒரு எண்ணம். மெல்ல வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தேன் ஹெல்மெட்டுடன்.