நாவல் : கடல் ஆசிரியர் : ஜெயமோகன் பக்கம் : 576 விலை ரூ.690
பதிப்பகம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், 1/28, நேரு நகர், கஸ்தூரிநாயக்கன் பாளையம், வடவள்ளி,
கோயம்புத்தூர்.
ஆசாபாசங்களால்
ஆனது சாமானிய உலகு. இந்தச் சாமானிய உலகின் சாமானிய மனிதர்களின் அகங்களில் நிறைந்திருக்கிறது
இச்சையும் அறியாமையும். இரண்டு ஆடிகள் ஒன்றையொன்று பிரதிபலித்து அதன் பிம்பங்கள் முடிவிலி
வரை நீள்வது போல சாமானிய மனிதர்களை எப்போதும் துயரம் நிறைத்துக் கொண்டேயிருக்கிறது.
துயர் அளிக்கும் வலியில் வாழ்நாள் முழுக்கக் கதறுப்வர்கள் இருக்கிறார்கள். தங்கள் வாழ்வின்
உச்சமான சில கணங்களில் கதறுபவர்கள் இருக்கிறார்கள். அன்பு கொண்டவர்களும் ஞானம் கொண்டவர்களும்
இந்தத் துயரிலிருந்து மீள்கிறார்கள். அகத்தில் அன்பைக் கொண்டிருக்க தங்கள் முழு வாழ்நாளையும்
அளிப்பவர்கள் உண்டு ; பயணம் துவங்கிய கணத்திலிருந்து அவர்கள் அகம் அன்பில் நிறைந்திருந்ததா
என்பதும் பயணத்தின் பாதியிலோ அல்லது இறுதியிலோ அவர்கள் பயண நோக்கம் நிறைவேறியதா என்பதும்
அவரவர்கள் மட்டுமே அறிந்த ஒன்று. அன்பின் சுடரேந்தி நிகழ்த்தும் பயணம் இனிமையான ஒன்றாக
இருக்கிறதா என்பதையே அப்பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் கணமும் எண்ண வேண்டியதாய் இருப்பது
அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையின் தன்மை.
உலகின் எல்லையற்ற
வலைகளில் ஒன்று தாமஸ், சாம், பெர்க்மான்ஸ் என்ற மூன்று பேரை மிக நெருக்கமாகக் கொண்டு
வருகிறது. தாமஸ் கடல்புறத்தில் வறுமை அளித்த அத்தனை வலிகளையும் இழிவுகளையும் தாங்கி
அரற்றிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவன். சாம் ஒரு பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்து
ஏசுவின் ஊழியராக தன்னை ஆக்கிக் கொள்ள விரும்பி தாமஸ் இருக்கும் கிராமத்துக்கு வந்து
சேர்ந்த ஒருவர். பெர்க்மான்ஸ் சாமுடன் இறையியல் கல்லூரியில் ஒன்றாகப் படித்து அவர்
செய்த தவறு ஒன்றுக்கு சாம் நேரில் கண்ட சாட்சியாகி , சாமிடம் தனக்கு மன்னிப்பு அளிக்குமாறு
கேட்கப்பட்டும் அம்மன்னிப்பு அளிக்கப்படாமல் இறையியல் கல்லூரியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு
பின்னாளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு செல்வந்தராகும் ஒருவர். இந்த மூன்று பேரும்
ஒருவரோடொருவர் இணைந்து விலகி என்னவாகிறார்கள் என்பதும் வாழ்க்கை அவர்களுக்கு அளித்தது
என்ன என்பதுமே ‘’கடல்’’ நாவல்.
இந்த நாவலின்
கலாபூர்வமான வெற்றி என்பது இந்த மூன்று மனிதர்களின் பார்வையில் உலகம் உணரப்படுவதையும்
காணப்படுவதையும் நாவலாசிரியன் தனது மொழியில் அளித்திருக்கும் விதம் என உறுதியாகக் கூறமுடியும்.
வாசகன் நாவலை வாசிக்கையில் பரஸ்பர வன்முறை நிறைந்த மனித உறவுகளையும் அந்த உறவுகளின்
மோதலையும் ஜெயமோகனின் சொற்களில் காணுகையில் உணர்கையில் அகம் பதைக்கிறான்.
ஜெயமோகன் நாவல்களில்
சிறப்பு என்பது அவரது நாவல்களின் கதைப்புலத்தில் வரலாறும் அந்த வரலாற்றின் முக்கிய
பகுதியாக சமூக மாற்றத்தின் சித்திரமும் இருக்கும். அந்த சமூக மாற்றம் எழுச்சியாகவும்
இருக்கலாம் ; வீழ்ச்சியாகவும் இருக்கலாம். அவை அவரது நாவல்களின் தனிமுத்திரை எனலாம்.
‘’கடல்’’ நாவலிலும் தமிழகத்தின் தென் மாவட்ட கடலோர கிராமங்களின் சித்தரிப்பில் அந்த
சமூக மாற்றக் கூறுகளை அடையாளம் காண முடியும். அவை அந்த நாவல் மாந்தர்களின் இயல்பு குறித்து
புரிந்து கொள்ள அடிக்குறிப்புகளாக இருக்கின்றன. தென் கடலின் பரதவர்கள் பாண்டியர்களின்
பட்டக்காரர்களாகி பின் போர்ச்சுகீசியர்களின் மேஜைக்காரர்களாகி பின்னாளில் ஃபெர்ணாண்டோக்களாக
ஆவது குறித்த வரிகளிலிருந்து தென்கடல் மக்களின் வரலாற்றில் ஒரு நீண்ட தொடர்ச்சியை கண்டறிய
முடியும். தாமஸ் இருளின் பாதையில் செல்ல நேர்கையில் கடலில் நடக்கும் ஆயுதக் கள்ளக்கடத்தல்
குறித்தும் அந்த கள்ளக்கடத்தல் வலைப்பின்னல் குறித்தும் அந்த வலைப்பின்னலில் விடுதலைப்புலிகளுக்கு
இருந்த முக்கிய பங்கு குறித்தும் கூறிச் செல்லும் வரிகளிலிருந்து வாசகன் பல்வேறு விஷயங்களை
ஊகித்து அறிய முடியும். அந்த ஆயுதக் கடத்தல் கும்பல் உருவானதற்கும் சோவியத் யூனியன்
உடைந்ததற்கும் உள்ள தொடர்பு குறித்தும் நாவல் ஒரு சில வரிகளில் கூறிச் செல்கிறது. தன்னையொத்த
வல்லமையை எதிர்க்க ருஷ்யா சேர்த்து வைத்த ஆயுதங்கள் ஆஃப்ரிக்காவின் வறிய மக்கள் சகோதர
யுத்தம் நிகழ்த்திக் கொள்ள போய் சேர்வதில் இருக்கும் சுரண்டலையும் வன்முறையையும் வாசகர்கள்
அறிய முடியும்.
நாவலின் பல
இடங்கள் நுட்பமானவை ; ஒன்றையொன்று நிரப்புபவை. உதாரணத்துக்கு இரு இடங்களைக் கூறமுடியும்.
சாம் , தாமஸிடம் பாம்புகள் குறித்து முதலில் விளக்கும் இடம். பாம்பு தன் வாலை பொந்தின்
உட்புறத்திலும் தலையை பொந்தின் வெளிப்புறத்தில் தன் தலையையும் வைத்திருக்கும் என்பது
குறித்து தாமஸிடம் கூறுவார். வெளியேறுவதற்கு ஒரு வழியை எப்போதும் தயாராக வைத்திருக்க
வேண்டும் என்பதே அது சொல்லித் தரும் பாடம் எனக் கூறுவார். பெர்க்மான்ஸை தாமஸ் சந்திக்கும்
போது அவர் பாம்புகள் குறித்து தாமஸிடம் கூறுவார். இந்த இரு சம்பவங்களையும் இணைத்து
யோசித்தால் அது பல விஷயங்களைக் கூறும். நாவல் நெடுகிலும் பைபிளின் பல படிமங்கள் வந்து
கொண்டேயிருக்கின்றன.
மனிதர்கள்
சேர்ந்து வாழும் இடங்கள் அனைத்திலும் இருக்கும் பரஸ்பர வன்முறையை நாவல் காட்டிக் கொண்டேயிருக்கிறது.
கடலோர கிராமத்தின் வறிய சிறுவர்கள் குழாம், இறையியல் கல்லூரி, சர்ச், கள்ளக்கடத்தல்
உலகம், சிறைச்சாலை, மனநல மருத்துவமனை என அனைத்திலும் இருக்கும் இயங்குமுறைகள் குறித்தும்
அதில் இருக்கும் வன்முறை குறித்தும் நாவல் பேசும் சொற்கள் வாசகனுக்குக் காட்டிக் கொண்டே
செல்கின்றன.