Wednesday, 16 July 2025

வந்தே மாதரம்

சில வாரங்களுக்கு முன்னால், ஆந்திரப் பெருநிலத்தில் ரயில் பயணம் மேற்கொண்டிருந்த போது ஒரு வங்காள இளைஞனை சந்தித்தேன். இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டியில் அந்த இளைஞன் எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தான். இன்னொரு பக்கம் அமர்ந்திருந்தவரிடம் நான் ஆங்கிலத்தில் ஏதோ கேட்பதைக் கவனித்த அந்த இளைஞன் என்னிடம் ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கினான்.  

காவிரி நதிக்கரையில் வளர்ந்த எனக்கு கங்கை மற்றும் அதன் கிளை நதிகளின் கரைகளால் ஆன வங்க நிலம் மீது பெரும் ஈர்ப்பு உண்டு. மூதாதை பாரதி ‘’லால் - பால் - பால்’’ ஆகியோர் மீதும் அரவிந்தர் மீதும் பெரும் ஈர்ப்பு கொண்டவன். 

பல ஆண்டுகளுக்கு முன்னால், தில்லி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பெறுவதற்காக நின்று கொண்டிருந்தேன். என் முன்னால் நின்று கொண்டிருந்த இளைஞன் என்னிடம் உரையாடுகையில் அவன் தனது பெயரைக் கூறினான் ; அவனுடைய பெயரின் மூலம் அவன் வங்காளத்தைச் சேர்ந்தவன் என்பதை புரிந்து கொண்டேன். தாரா சங்கர் பானர்ஜியின் ‘’ஆரோக்கிய நிகேதனம்’’ நாவலை நான் வாசித்திருக்கிறேன் என்று அவனிடம் சொன்னேன். அந்த இளைஞன் உணர்ச்சிகரமாகி விட்டான். என் மீது பெரும் பிரியம் கொண்டு விட்டான். விபூதி பூஷன் பந்தோபாத்யாய, மைத்ரேயி தேவி ஆகியோர் பெயரையும் கூறினேன். அவன் எனக்கு மிகப் பெரிய மதிப்பளிக்கத் தொடங்கி விட்டான். ஒரு ரயில் நிலைய கியூவில் பத்து நிமிடம் ஒன்றாக நின்றிருப்போம். எனினும் அது வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாகி விட்டது. 

இந்த முறை சந்தித்த இளைஞனிடம் உரையாடுகையில் பேச்சு இலக்கியம் நோக்கி திரும்பியது. த. நா. குமாரசாமி, த. நா. சேனாபதி என்ற இரு சகோதரர்கள் 1950 வாக்கிலேயே முக்கியமான பல வங்க நாவல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள் ; அவர்கள் மூலம் தமிழக வாசகர்களுக்கு வங்க இலக்கியத்தின் சாரமான பகுதிகள் அனைத்துமே அறிமுகம் ஆயின என்று சொன்னேன். அவனுக்கு மிகவும் ஆச்சர்யம். வங்கத்தின் பல ஊர்களைப் பற்றி பல முக்கிய ஆளுமைகளைப் பற்றி சொந்த ஊரைப் பற்றி மிகவும் பழகியவர்களைப் பற்றி சொல்வதைப் போல சொல்லிக் கொண்டிருந்ததைக் கண்ட அந்த இளைஞன் உணர்ச்சிகரமாகி கண் கலங்கி விட்டான். 

அப்போது எனக்கு சுவாமி சித்பவானந்தரின் நினைவு எழுந்தது. தனது குருவின் குருவான பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் நூல்களை தமிழில் கொண்டு வர அவர் வங்க மொழியைப் பயின்றார். ஸ்ரீராமகிருஷ்ணரின் சொற்களை வங்க மொழியிலிருந்து தமிழ் மொழிக்குக் கொண்டு வந்தார்.