ஒளி மிகுந்திருந்த
காலைப் பொழுதொன்றில் கோடைக்கால நாள் ஒன்றில் என்னுடைய ஆறு வயதில் முதன் முதலில் கங்கை
கொண்ட சோழபுரத்தின் பிரகதீஸ்வரர் ஆலய விமானத்தைக் கண்டேன். மிகப் பெரிய ஒன்றாகவும்
மிக அழகிய ஒன்றாகவும் உணர வைத்த அக்காட்சி உள்ளத்தை இன்னதென வகுத்திட முடியாத பரவசத்துக்கும்
தத்தளிப்புக்கும் ஆளாக்கியது ஆண்டுகள் பல கடந்த பின்னரும் இன்னமும் நினைவில் இனிய ஒன்றாகப்
பதிவாகியிருக்கிறது. பெரிதினும் பெரிதாய் விளங்கிய அந்த ஆலயத்தின் ஒவ்வொரு அம்சமும்
பாலனாயிருந்த எனக்கு வியப்பை அளித்துக் கொண்டேயிருந்தன. கருவறையில் பிரும்மாண்டமான
உருவம் கொண்டு வீற்றிருந்த பிரகதீஸ்வரரை அந்த பாலன் தன் உள்ளத்தால் அணைத்துக் கொண்டான்.
இத்தனை பெரிய பேரிருப்பை நிர்மாணிக்க உளம் கொண்ட மானுடன் யாராக இருப்பான் என்று தெரிந்து
கொள்ள ஆர்வமாக இருந்தேன். அதனை உருவாக்க முனைந்தவனின் பெயர் ராஜேந்திர சோழன் என அறிந்து
கொண்டேன். அறிந்த நாள் முதல் அவன் மேல் மதிப்பு கொள்ளத் தொடங்கினேன். வருடங்கள் பெருகும்
தோறும் அம்மதிப்பு வளர்பிறை நிலவென வளர்ந்து கொண்டே செல்கிறது.
கங்கை கொண்ட
சோழபுரம் ஊர் நினைவுடன் அந்த பாலனுக்கு இன்னொரு நினைவும் ஒட்டிக் கொண்டது. அது தாமரை
இலையின் நினைவு. அந்த பிரதேசத்தில் தாமரைத் தடாகங்கள் மிகுதி. அங்கே உணவருந்த நேர்ந்த
உணவகம் ஒன்றில் அவர்கள் அளித்த இலை தாமரை இலை. வாழையிலையைக் கண்டிருந்த அதில் உணவருந்தியிருந்த
எனக்கு தாமரை இலையில் உணவருந்தியது மறக்க முடியாத அனுபவமாகி விட்டது.
கங்கை கொண்ட
சோழபுரத்தைக் கண்ட பின் அடுத்த நான்கு ஆண்டுகளில் என்னுடைய பத்தாவது வயதில் கல்கியின்
‘’பொன்னியின் செல்வன்’’ நாவலை வாசித்தேன். சோழர்கள் மனதுக்கு மிக நெருக்கமாக ஆனார்கள்.
நிலமெங்கும் குதிரையில் எப்போதும் பயணித்துக் கொண்டேயிருக்கும் வந்தியத்தேவன் மீது
பெரும் பிரியம் உண்டானது. பழையாறையும் கோடிக்கரையும் வீர நாராயண ஏரியும் என் கற்பனையில்
உயிர்ப்புடன் இருந்து கொண்டேயிருந்தன.
பொன்னியின்
செல்வன் வாசித்த நாள் முதலே வீர நாராயண ஏரியைக் காண வேண்டும் என ஆவல் கொண்டிருந்தேன்.
எனக்குத் தெரிந்த அனைவரிடமும் நீங்கள் வீர நாராயண ஏரியைப் பார்த்திருக்கிறார்களா என
விசாரிப்பேன். பார்த்தவர்கள் மிகக் குறைவாகவும் கேள்விப்பட்டவர்கள் சற்றே அதிகமாகவும்
இருந்தனர். யாருக்குமே எனது ஊரிலிருந்து இப்படி செல்லலாம் என ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தைக்
கூறத் தெரியவில்லை. காட்டுமன்னார்குடி சென்று செல்ல வேண்டும் எனக் கூறுவார்கள். சேத்தியாத்தோப்பு
சென்று செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். இரு சக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டு அதில்
பயணிக்கத் தொடங்கிய நாட்களில் நான் வீர நாராயண ஏரியைக் கண்டேன். அந்த ஏரியின் ஒரு முனை
சேத்தியாதோப்பு என்பதையும் அதன் இன்னொரு முனை காட்டுமன்னார்குடி என்பதையும் இந்த இரண்டு
ஊர்களையும் இணைக்கும் பெருந்தூரம் முழுவதுமே ஏரிக்கரை என்பதையும் உணர்ந்த போது மனம்
பிரமித்தது. தனது குடிகளின் விவசாயத் தேவைக்காக சோழர்கள் நிர்மாணித்த வீர நாராயண ஏரியைக்
காணக் காண சோழர்கள் மேல் கொண்டிருந்த மதிப்பு கூடிக் கொண்டேயிருந்தது. ஒரு காலகட்டத்தில்,
வீட்டில் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினால் நேராக சிதம்பரம் சென்று
நடராஜர் ஆலயத்தில் சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்து காட்டுமன்னார்குடி வந்து வீர
நாராயண ஏரிக்கரையில் நாள் முழுக்க இருந்து விட்டு மாலை கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தில்
இருந்து விட்டு இருட்டத் தொடங்கியதும் அணைக்கரை பந்தநல்லூரி வழியாக ஊர் வந்து சேர்வதை
வழக்கமாகக் கொண்டிருந்தேன். இளைஞனாயிருந்த எனது உள்ளம் அப்போது ததும்பிக் கொண்டிருக்கும்.
மனதில் மகிழ்ச்சி இருந்தாலும் இந்த பயணத்துக்கு கிளம்பி விடுவேன். சிறு சோர்வு இருந்தாலும்
கிளம்பி விடுவேன். கிளம்பிச் செல்வதற்கு மகிழ்ச்சியோ சோர்வோ ஒரு நிமித்தம் என்ற அளவில்
இருந்த நாட்கள் அவை.
காட்டுமன்னார்குடி
பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் போது அங்கே சந்தித்த ஒருவர் என்னிடம் நான் எந்த
ஊரைச் சேர்ந்தவன் என்று கேட்டார். ஊரைச் சொன்னதும் உங்கள் ஊருக்கு செல்ல முட்டத்தில்
கொள்ளிடம் ஆற்றை படகில் கடந்தால் மணல்மேடு சென்று அங்கிருந்து மிகக் குறைந்த தூரத்தில்
ஊரை அடைந்து விடலாம் என்று சொன்னார். அவர் காட்டிய மார்க்கத்தில் செய்த அந்த பயணம்
சுவாரசியமாயிருந்தது. முட்டத்தில் மறுகரைக்குச் செல்ல மக்கள் படகுக்குக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
படகு வந்ததும் இருபதுக்கும் மேற்பட்டோர் அதில் ஏறிக் கொண்டனர். சிலர் தங்கள் இரு சக்கர
வாகனங்களையும் ஏற்றிக் கொண்டனர். நானும் ஏற்றிக் கொண்டேன். மறுகரையில் சில நிமிடங்களில்
படகு சென்று சேர்ந்தது. மணல்மேடு வந்து ஊர் வந்து சேர்ந்தேன். கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர்
இருக்கும் போது படகிலும் ஆறு வறண்டிருக்கும் போது மணல் பரப்பில் வண்டியை தள்ளிக் கொண்டு
சென்றும் நதியின் இரு கரைகளிலும் அலைந்து கொண்டிருப்பேன். மோவூர் என்ற ஊரில் ஒரு முச்சந்தி
இருந்தது. அதில் ஒரு பாதை காட்டுமன்னார்குடி செல்வது ; இன்னொன்று முட்டம் செல்வது
; மூன்றாவது பாதை எங்கே செல்கிறது என விசாரித்தேன். ஒரு பெரியவர் இப்படியே சென்றால்
ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையைச் சென்றடையும் என்று கூறினார். குச்சூர், ஆய்க்குடி,
சண்டன் ஆகிய ஊர்களின் வழியாகவும் வடவாற்றைக் கடந்தும் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையை
வந்தடைந்தேன். அங்கிருந்து கூப்பிடு தொலைவில் உள்ள ஊர் கங்கை கொண்ட சோழபுரம். டூ-வீலரின்
ஸ்பீடாமீட்டர் ரீடிங் வழியாக ஊருக்கும் பிரகதீஸ்வரர் ஆலயத்துக்கும் உள்ள தூரம் எவ்வளவு
எனக் கணக்கிட்டேன். 38 கிலோமீட்டர் என ரீடிங் காட்டியது. அந்த பாதையைப் பயன்படுத்தி
அடிக்கடி கங்கை கொண்ட சோழபுரம் செல்வேன். பின்னாட்களில் , நான் அடிக்கடி படகில் கடந்த
பாதையில் மணல்மேட்டுக்கும் முட்டத்துக்கும் இடையே பெரும் பாலம் ஒன்று கட்டப்பட்டது.
வீட்டிலிருந்து புறப்பட்டால் ஒரு மணி நேரத்தில் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருக்கலாம்.
பிரகதீஸ்வரரைக் காணச் செல்வது எப்போதுமே உற்சாகமளிக்கும் பயணம் தான்!