நேற்று அதிகாலையிலேயே விழித்து விட்டேன். காவிரியிலிருந்து 3 நிமிட நடைப்பயண தூரத்தில் இருக்கிறது வீடு. காவிரியில் நீராடக் கிளம்பிச் சென்றேன். அடர்ந்திருந்தது அதிகாலை கருக்கல். படித்துறையின் படிகள் ஏதும் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. தோராயமாக அவற்றை தெளிந்து நதியில் இறங்கி மூழ்கினேன். அதிகாலை நேரத்தில் நதியில் மூழ்கும் போது நதி எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது என்னும் உணர்வு ஏற்பட்டது. நதி யாருக்காகவும் எதற்காகவும் தன்னை மாற்றிக் கொள்வதில்லை ; மேன்மைகளே அதன் இயல்பெனினும் தன் இயல்பை சுபாவத்தை இயற்கையை யார் இருப்பினும் இல்லாமல் இருப்பினும் ஆற்றிய வண்ணம் இருக்கிறது. நதியில் மூழ்கிய பின் வீட்டுக்கு வந்து கிளம்பி கங்கை கொண்ட சோழபுரம் சென்றேன். காலை 6 மணியிருக்கும். ஆலயம் அப்போது தான் திறக்கப்பட்டிருந்தது. கங்கை கொண்ட சோழபுரம் துவாரபாலகர் சிற்பங்கள் பெரியவை. அவை மனிதர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கின்றன. உள்ளே இருப்பவன் மிக மிகப் பெரியவன் என்று.
Friday, 25 July 2025
கருவறை
கருவறை முன் சென்று நின்றேன். தெய்வ சன்னிதி எப்போதும் இந்த உலகம் எவ்வளவு பெரியது என்பதை உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. அது பள்ளி கொண்ட பெருமாளாக இருந்தாலும் ; மகாலிங்கமாக இருந்தாலும். ஆலயத்தின் கருவறையைச் சுற்றி ஒரு உள்பிரகாரம் உண்டு ; பிரதட்சணமாக சுற்றி வரும் வகையில். அதில் பிரதட்சணம் செய்தேன். இடப்பக்கமாக சென்று வலப்பக்கம் திரும்பியதும் கருவறையில் ஏற்றப்பட்டிருந்த தீபத்தின் சிறு ஒளி முற்றிலும் நீங்கி விட்டது. முழுமையான இருள் எங்கும் நிரம்பியிருக்கிறது. கற்சுவரை பிடித்துக் கொண்டு மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தேன். முன்னர் விளக்குகள் சுடர்ந்து கொண்டிருக்கையில் பிரதட்சணம் செய்ததை நினைவில் கொண்டு வர முயன்றேன். சில நிமிடங்கள் கண்கள் இருளுக்குப் பழகட்டும் என முயன்று பார்த்தேன். கண்கள் முழுக்க இருளை மட்டுமே கண்டு கொண்டிருந்தன. மெல்ல நடந்து வலது பக்கம் சுவர் திரும்புவதை உணர்ந்து திரும்பினேன். சுவரைப் பற்றிய வண்ணமே நடந்தேன். பிரகதீஸ்வரர் கருவறையின் பின்பக்கத்தில் அப்போது இருந்தேன். விமானத்திலிருந்து சிறு ஒளி வரும் வகையில் கருவறை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டேன். அந்த ஒளியின் சிறு கூறு உள்பிரகாரத்தின் பின்புறத்தில் தெரிந்தது. தொடர்ந்து நடந்து வலப்பக்கம் திரும்பி உள்பிரகாரத்தின் நான்காவது பாகத்தைக் கடந்தேன். சன்னிதிக்கு வந்து சேர்ந்தேன். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கராஜன் யோக நித்திரையில் இருப்பதாக தொன்மங்கள் கூறுகின்றன. லிங்கேசன் பிரப்ஞ்சப் பெருவெளியின் மையத்தில் ஊழ்கத்தில் ஆழ்ந்திருக்கிறானா பிரபஞ்சங்களை உருவாக்கிக் கொண்டு ?