இந்தியா விவசாய தேசம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவின் முக்கிய தொழிலாக விவசாயமே இருந்திருக்கிறது. இன்றும் நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் தொழில் விவசாயமே. இத்தனை கோடி விவசாயிகள் உலகில் வேறு எங்கும் இருப்பார்களா என்பது ஐயம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே இந்தியாவில் சிறு விவசாயிகளும் குறு விவசாயிகளும் மிக அதிகம். ஒருவரிடம் இன்றைய கணக்கில் ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் கூட அவரால் ஐந்திலிருந்து ஆறு பேர் கொண்ட குடும்பத்துக்கான உணவை விளைவித்துக் கொண்டு வாழ்ந்து விட முடியும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இவ்விதமே கோடிக்கணக்கானோருக்கு நம் நாட்டில் வாழ்க்கை நிகழ்கிறது. அதே போல் நம் நாட்டில் சிறு தொழில் புரிபவர்கள் அதிகம். விவசாயிகளும் சிறு தொழில் புரிபவர்களும் இணைந்து கிராமத்தில் வாழும் வாழ்க்கை முறையே நம் நாட்டின் வாழ்க்கை முறை. இந்த அமைப்பில் உழைப்புச் சுரண்டல் என்பது மிக மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். இயற்கையைச் சுரண்டும் பெருந்தொழில்கள் நிகழும் போது மட்டுமே மனிதர்கள் மிகப் பெரிய அளவில் சுரண்டப்படுவார்கள் என்பதை உலக வரலாறு எடுத்துக் காட்டுகிறது.
கிராமங்களே இந்த நாட்டின் ஆன்மா. பேரரசுகள் இங்கே உருவான போது கூட அவை தன் அடித்தளமாய் கொண்டது கிராமங்களையே. கூர்ந்து கவனித்தால் இன்றும் நம் நாட்டு மக்களின் அகம் ஒரு கிராமவாசியின் அகமே என்பதைக் காண முடியும். நாட்டின் ஐயாயிரம் ஆண்டு வரலாற்றில் எவ்வளவோ விஷயங்கள் நிகழ்ந்துள்ளன. இன்றும் நம் நாட்டின் அடிப்படைத்தன்மை பெருமளவில் மாறாமல் இருப்பதற்கு காரணம் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டிருக்கும் கிராமவாசிகளே. கிராமங்களிலும் நகரங்களிலும் சிறிய மூலதனத்தில் சிறிய தொழில் செய்பவர்களே. இந்தியப் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள இந்த விஷயத்தைப் புரிந்து கொள்வது அவசியம். இந்த புரிதலிலிருந்தே எனது இந்திய அரசியல் குறித்த புரிதலை உருவாக்கிக் கொள்கிறேன்.
எனது அரசியல் நிலைப்பாடு என்ன ? கோடானுகோடி மக்கள் வாழும் இந்திய ஜனநாயகத்தில் ஒரு தனிமனிதன் கொள்ளும் நிலைப்பாடு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தோன்றலாம். ஜனநாயகம் ஒரே ஒரு குடிமகன் கூட சுதந்திரமாக சிந்திக்கவும் தான் சிந்தித்ததை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் அதனை நோக்கிச் செல்லவும் உரிமை கொண்டவன் என்பதை அங்கீகரிக்கிறது. ஜனநாயகத்தின் சிறப்பே அதுதான். நம் நாடு பழக்கமாய் கொண்டிருக்கும் கிராம அமைப்பு என்பதும் அதுவே. எனது அரசியல் நிலைப்பாட்டை இந்த இடத்திலிருந்தே இந்த புரிதலிலிருந்தே உருவாக்கிக் கொள்கிறேன். எனது அரசியல் நிலைப்பாடை இவ்விதம் சுருக்கமாகக் கூறலாம் : கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை இந்த நாடு சிறு விவசாயிகளின் சிறு தொழில் புரிபவர்களின் நாடு. இந்த சிறு விவசாயிகளும் இந்த சிறு தொழில் புரிபவர்களுமே நம் நாட்டின் பண்பாட்டை ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் காத்து வந்துள்ளனர். சிறு விவசாயிகளையும் சிறு தொழில் புரிபவர்களையும் கிராம அளவிலிருந்து தேச அளவு வரை இணைக்கும் அரசியலே எனது அரசியல் நிலைப்பாடு.
மகாபாரத காலத்திலிருந்து கூட இந்த விஷயத்தைத் தொடங்க முடியும் என்றாலும் கூட ஒரு புரிதலுக்காக மகாத்மா காந்தியிடமிருந்து துவங்குகிறேன். மகாத்மா ஓர் அரசியல்வாதியாக விவசாயிக்குப் பயன்படும் வகையில் பருத்தி ஆடைகளை தேசத்தவர் அணிய வேண்டும் என்றார். அதனை கைத்தறியில் நெய்து அணிய வேண்டும் என்றார். கோடானுகோடி விவசாயிகளுக்கும் சிறு தொழில் செய்யும் நெசவாளர்களுக்கும் அது பயன் தரும் என்பதால் நாட்டு மக்கள் அந்த விழிப்புண்ர்வை அடைய வேண்டும் என வாழ்நாள் முழுவதும் அதனைத் தன் அரசியலாக முன்வைத்தார். சிந்திக்கும் திறன் கொண்ட மனிதன் இன்னொரு மனிதனை தனக்காக கசக்கிப் பிசைந்து உழைக்க வைக்க மாட்டான் என்பதையும் பணியாளனும் உரிமையாளனும் சூழலைப் புரிந்து கொண்டு உழைப்பையும் ஊதியத்தையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் முன்வைத்தவர் காந்தி. தேசியம் என்பதை இவ்விதமாகவே புரிந்து கொள்கிறேன். இந்த தேசியத்தையே நான் விரும்புகிறேன் ; முன்வைக்கிறேன். நம் நாட்டின் சிறு விவசாயிக்கும் சிறு தொழில் புரிபவருக்கும் துணை நிற்கும் அரசியலே எனது அரசியல் நிலைப்பாடு. இந்த அடிப்படையிலேயே நான் இந்திய அரசியலைப் பார்க்கிறேன்.
காங்கிரஸ் நாட்டின் முதல் தேசியக் கட்சி. நூற்றுக்கணக்கான தேசியவாதிகளை நாட்டுக்கு வழங்கியிருக்கும் கட்சி. பால கங்காதர திலகர், மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், பாரதி, ராஜாஜி, கோகலே ... சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நிரையிலும் காந்தியால் ஈர்க்கப்பட்டு சமூக மாற்றத்துக்காக செயலாற்றியவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள். இவர்களே நம் நாட்டை நம் மக்களை நம் பண்பாட்டை மீட்டெடுத்தவர்கள். அவர்கள் முன்வைத்த இந்திய தேசியத்தின் மீது பெரும் பற்று கொண்டவன் நான்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டின் பிரதமர் ஆக பதவியேற்பவர் எவராயினும் அவர் நாட்டு மக்களைத் தன் குழந்தைகளாய் எண்ணும் உணர்வுக்கு ஆளாவார் என்று நான் அவ்வப்போது எண்ணுவதுண்டு. இது ஒரு அகவய உணர்வே. நாட்டின் பிரதமர் ஒரு அரசியல் கட்சியை நடத்துபவரும் கூட ; ஜனநாயகம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே பிரதமர் பதவியை வழங்குகிறது . மீண்டும் கோடிக்கணக்கான மக்களைச் சந்திக்க வேண்டும். கோடிக்கணக்கான மக்களுக்கு பல விஷயங்களைப் புரிய வைக்க வேண்டும். நாட்டின் பதவிகளிலேயே மிகப் பெரிய பதவி அது. இது அத்தனையும் அறிவேன் எனினும் நாட்டின் பிரதமர் நாட்டு மக்களைத் தன் குழந்தைகளாய் எண்ணும் உணர்வுக்கு ஆளாவார் என்றே எண்ணுகிறேன்.
ஜவகர்லால் நேரு நாட்டின் முதல் பிரதமர். காந்தியால் அடையாளம் காட்டப்பட்டவர். நான் ஜவஹர்லால் நேருவின் சுயசரிதையை வாசித்திருக்கிறேன். வறிய நிலையில் பலவிதமான கொதிப்புகளுடன் இருந்த தேசத்தை மூன்று ஆட்சிக் காலம் வழிநடத்தியவர் நேரு. தேச நிர்வாகம் எவ்விதம் நிகழ வேண்டும் என்னும் பாதையை உருவாக்கியவர் நேரு. அதிகார வர்க்கம் இன்னும் அந்த திசையிலேயே நடந்து கொண்டிருக்கிறது. நேரு செய்த நற்செயல்கள் பலவற்றின் மீது எனக்கு மதிப்பு உண்டு. சாகித்ய அகாதெமியும் நேஷனல் புக் டிரஸ்ட்டும் அவரால் உருவாக்கப்பட்டவை. தேசம் என்னும் கனவை கோடானுகோடி மக்களுக்கு தம் சொற்களால் உண்டாக்கியவர் நேரு. அவருக்கு மார்க்சியம் மீது ஈடுபாடு இருந்தது. அதன் அடிப்படையில் அவர் மக்களுக்கான பல விஷயங்களை திட்டமிட்டார். அவை போதிய பலனைத் தரவில்லை. மார்க்சியத்தின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையே அவரை சீனாவை ஐயமின்றி நம்ப வைத்தது. ஏகாதிபத்திய சீனா நம் முதுகில் குத்தி நம்மை ஆக்கிரமித்தது. அதற்கான விலையை நாம் இன்றும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
மிகக் குறைந்த காலம் நாட்டை வழிநடத்தினாலும் தனது உறுதியான ஆளுமைத்திறனால் நாட்டு மக்களிடம் பெரும் தாக்கம் ஏற்படுத்தியவர் லால்பகதூர் சாஸ்திரி. அவரது ‘’ஜெய் ஜவான் ஜெய் கிஸான்’’ என்னும் முழக்கம் ஒரு மந்திரத்தை ஒத்தது. ருஷ்யாவில் தாஷ்கண்டில் அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருடைய மரணம் கம்யூனிச ருஷ்யாவில் நிகழ்ந்தது மேலும் ஐயங்களை எழுப்புவதாய் இருக்கிறது. நான் மிகவும் நேசிக்கும் ஒருவர் சாஸ்திரி.
இந்திரா காந்தி. பெரும் ஆதரவையும் அதற்கு சமமான எதிர்ப்பையும் பெற்றவர் இந்திரா காந்தி. நம் நாட்டை உடைக்க தொடர்ந்து முயன்று வந்தது பாகிஸ்தான். இந்திரா ஒரு சரியான தருணத்தில் பாகிஸ்தானை உடைத்தார். ஒட்டு மொத்த நாடும் அவருக்குத் துணையாக நின்றது. அவர் கொண்டு வந்த நெருக்கடி நிலை நாட்டின் ஜனநாயகத்தை ஜனநாயகப் பண்புகளை ஜனநாயக மாண்புகளை குழியில் புதைக்கும் செயல். நெருக்கடி நிலை என்பது ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்ட எவராலும் எப்போதும் எந்நிலையிலும் ஏற்க முடியாத செயல். நாட்டின் சாமானிய குடிகள் - சிறு விவசாயிகளும் சிறு தொழில் புரிபவர்களுமான சாமானிய குடிகள் - இந்திரா சர்க்காரைத் தூக்கி வீசி ஜனநாயகத்தைக் காத்தனர். அவரது மகன் சஞ்சய் காந்தி ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அகாலி தள் அரசைக் கவிழ்க்க பிந்தரன்வாலேவை வளர்த்து விட்டார். பஞ்சாப்பின் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பிந்தரன்வாலேயின் பயங்கரவாதத்துக்கு பலியாயினர். சஞ்சய் வளர்த்த பயங்கரவாதம் இந்திராவைக் காவு வாங்கியது.
மொரார்ஜி தேசாய் மகத்தான கண்ணியமான மனிதர். நாட்டின் கொள்கை உருவாக்கத்தில் அவர் முக்கியமான திருப்புமுனையை உண்டாக்கினார். நான் மிகவும் மதிக்கும் ஒருவர்.
நான் சிறுவனாயிருந்த போது ராஜிவ் காந்தி பிரதமராயிருந்தார். என்னுடைய ஆறு வயதில் அவரை சீர்காழியில் கடைவீதியில் பார்த்தேன். ஜீப்பை ஓட்டிக் கொண்டு வந்தார். அவரைப் பார்த்தது நன்றாக நினைவிருக்கிறது. பின்னர் ஒருமுறை கும்பகோணத்தில் பார்த்தேன். எனக்கு 10 வயது இருந்த போது பயங்கரவாதிகளால் சென்னை அருகே கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டதும் கொல்லப்பட்ட விதமும் என்னால் இன்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது அரசியல் மீது எனக்கு விமர்சனங்கள் தீவிரமாக உண்டு.
நரசிம்ம ராவ் நான் மிகவும் விரும்பும் பிரதமர். அறிஞரும் அரசியல்வாதியும் ஆனவர். சிறந்த ராஜதந்திரி. நாட்டின் பொருளாதாரத்தைக் காத்தவர். அவர் தொடர்ந்து காங்கிரஸை வழிநடத்தியிருக்க வேண்டும். நேரு இந்திரா குடும்ப வாரிசு அரசியல் அவருக்கு பல நெருக்கடிகளைக் கொடுத்தது.
தேவ கௌட விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர். மாநில அரசியலிலிருந்து தேசிய அரசியலுக்குச் சென்றவர்.
வாஜ்பாய் என்றால் சாலைகள். சாலைகள் என்றால் வாஜ்பாய். நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு என்னும் விஷயத்துக்கான பெரும் கனவொன்றை நாட்டு மக்களுக்கு அளித்தவர் வாஜ்பாய். தங்க நாற்கரத் திட்டமும் கிராம சாலைகள் திட்டமும் அவரது புகழை எப்போதும் பறைசாற்றும்.
பொருளியல் அறிஞரும் திட்ட கமிஷன் துணைத் தலைவராகவும் இருந்து பின்னர் நிதியமைச்சராகவும் இருந்து நாட்டின் பிரதமராகவும் இருந்தவர் மன்மோகன் சிங். அவர் நிதியமைச்சராக இருந்த போது பூம்புகாருக்கு வந்திருக்கிறார். அங்கே அவரைப் பார்த்திருக்கிறேன்.
ஒரு சாமானியக் குடும்பத்தில் பிறந்து சிறு வயதில் குடும்பத்துக்கு உதவ பகுதி நேரமாக தேனீர் விற்று நாடெங்கும் அலைந்து திரிந்து தேர்தல் அரசியலும் அதிகார அரசியலிலும் நேரடியாகப் பங்கெடுக்காமல் தனது 51 வது வயதில் மாநில முதலமைச்சராக பதவியேற்றவர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி. அவரைப் போல தனிப்பட்ட முறையில் வசை பாடப்பட்ட இன்னொரு அரசியல்வாதி இல்லை. குஜராத் மாநில முதல்வராக பல ஆண்டுகள் பதவி வகித்த அவரை ‘’தேனீர் விற்பதற்கு மட்டுமே தகுதி கொண்டவர்’’ என்றார் ஒரு காங்கிரஸ் தலைவர். ’’நீசன்’’ என வசைபாடினார் நேரு குடும்ப வாரிசு ஒருவர். 2014ம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றார். 2014, 2019,2024 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை தொடர்ச்சியாக தேர்தலில் வென்று ஜவஹர்லால் நேரு செய்த சாதனையை சமன் செய்திருக்கிறார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை துணிச்சலுடன் நீக்கியவர் மோடி. நாடெங்கும் சாலைகள் ,விமான நிலையங்கள் முதலிய அடிப்படைக் கட்டுமானப் பணிகளை மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து அமைத்தவர் மோடி. நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் இந்த 11 ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும் சாலைப் பணிகள் பிரமிக்கத்தக்கவை. 4078 நாட்கள் நாட்டின் பிரதமராயிருந்து நீண்ட நாட்கள் நாட்டின் பிரதமராயிருந்தவர் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறார் மோடி. இது இந்திய ஜனநாயக முறையின் பெருமையும் கூட. வாழ்த்துக்கள் பிரதமர் !