பெருநிகழ்வான பொது நிகழ்ச்சி ஒன்றுக்கான ஏற்பாடுகள் நிகழ்வதை பத்து நாட்களாக நாளின் கணிசமான நேரத்தை அளித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். கட்டுமானம் என்னுடைய தொழில் என்பதால் பணிகள் நிகழும் எந்த இடத்தில் இருந்தாலும் பணி புரிபவர்களில் யார் ஆர்வத்துடன் பணி புரிகிறார்கள் யாருக்கு ஆர்வமில்லை எவருக்கு நிகழ்வுகளில் விருப்பமும் மகிழ்ச்சியும் இருக்கிறது யாருக்கு அவை இல்லை என்பதை எளிதில் அவதானித்து விட முடியும். இது நீண்ட நாட்கள் ஒரே விதமான பணியை மேற்கொள்வதால் ஏற்படும் உள்ளுணர்வு. அந்த உள்ளுணர்வு ஒரு துவக்கப் புள்ளியே. ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதனைத் துவக்கமாகக் கொண்டு அங்குள்ள பொருள், ஏவல் ஆகியவற்றின் பின்னணியில் விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பல வருடம் அனுபவம் கொண்டிருக்கிறோமே என எண்ணி விடக்கூடாது. சூழல் நாம் இதுவரை எதிர்கொண்டிராத ஒரு விஷயத்தை நம் முன் கொண்டு வந்து நிறுத்தும். எனது கல்லூரிப் பேராசிரியர் எங்களிடம் ஒன்று சொல்வார் : ‘’The college will teach you to solve ''n'' number of problems But you have to face ''n+1'' number of problem in real life'' என்பார். பொது நிகழ்ச்சி ஏற்பாடுகளில் அரசின் பல்வேறு துறைகளின் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. துறை எதுவாயினும் பணிகளைப் புரிவது தொழிலாளர்களே. அவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் காலவரையறைக்குள் பணிகளைச் செய்ய முயல்கின்றனர். சமயத்தில் சில பணிகள் கெடுவைத் தாண்டி விடுகிறது. அவை மற்ற பணிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பின்னர் அவை சரிசெய்யப்படுகின்றன. இந்த இந்த பணிகள் எனக் கூறி விட்டு அதை இவ்விதம் செய்ய வேண்டும் என துல்லியமான குறிப்புகள் அளிக்காமல் மேலோட்டமாகவே குறிப்புகள் அளித்து விட்டு சிக்கல் என ஏதேனும் உருவாகி வந்தால் அவற்றைத் தீர்க்கும் விதத்தைக் கூறி விஷயங்களை முன்நகர்த்துவது என்பது ஒரு நிர்வாக முறை. பெரிய அளவில் அது உபயோகமானதும் வேலை செய்வதும் ஆன முறை ஆகும். நமது மாநிலத்தில் அரசாங்கம், தனியார் என எல்லாவற்றிலும் பெரும்பாலும் இந்த முறையே வழக்கத்தில் உள்ளது. நிறைய பேர் ஒரு இடத்தில் கூடும் போது மனிதர்கள் அடையும் மகிழ்ச்சி என ஒன்று இருக்கிறது. இந்த மகிழ்ச்சி மனிதனுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. ஒன்று கூடுகையில் ஒத்திசைவின் சுருதியுடன் நுண்ணியதிலும் நுண்ணியதான நுண்கணப் பொழுது மனிதர்கள் இணைகிறார்கள். அந்த நுண் கணம் அளிக்கும் பரவசத்துக்காகவே மனிதர்கள் கூடுகைகளை விரும்புகிறார்கள். இயற்கை வானத்திலும் பெரிய வானங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கையிலும் அணுவிலும் அணுவாகவும் இருக்கிறது. அருமணியொன்று இயற்கையின் சௌந்தர்ய வெளிப்பாடாக இருக்கும் அதே வேளையில் மனித விழைவின் அடையாளமாகவும் ஆகிறது. எவ்விதமான லௌகிகமாயினும் அதற்கு இந்த எல்லை உண்டு. அந்த எல்லையை உணர்ந்து கொள் ; உணர்ந்து கொள் என்றே மானுட இனத்திடம் நம் மரபும் ஞானமும் அனாதி காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறது.
ஒரு ஹாஸ்யமான சம்பவம். ராஜாஜியிடம் ஒரு முறை கேட்டார்கள். பொது விஷயம் குறித்து இரு தரப்புகள் இருக்கும் நிலையில் எதைச் செய்வது என்று எப்படி முடிவெடுப்பது என. அதற்கு ராஜாஜி சொன்ன பதில் : ‘’அந்த விஷயத்தை கம்யூனிஸ்டுகளிடம் சொல். அவர்கள் செய் என்று சொன்னால் அதனை நிச்சயம் செய்யக் கூடாது ; அவர்கள் செய்யக் கூடாது என்று சொன்னால் உடனே செய்ய வேண்டும்.’’. கட்டுமானத் துறையில் இருப்பவர்களுக்கு ஒரு விஷயம் தெரியும். தொழிலாளர்கள் ஒரு விஷயத்தைச் சொன்னால் அது பணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கும் ஒன்றாகவே இருக்கும். அனுபவம் உள்ள பணி ஒருங்கிணைப்பாளர்கள் தொழிலாளர் கூற்றிலிருந்து உருவாக வாய்ப்புள்ள நெருக்கடி என்ன என்பதைப் புரிந்து கொள்வார்கள். அந்த நெருக்கடி ஏற்படா வண்ணம் திட்டமிட்டுக் கொள்வார்கள். பணியாளர்கள் உடல் உழைப்பைக் கொடுக்கும் நிலையில் இருப்பவர்கள். பணிகள் சடுதியில் நிகழ வேண்டும் என ஒருங்கிணைப்பாளர்கள் எதிர்பார்ப்பார்கள். அவ்விதம் நிகழ வேண்டும் எனில் கூடுதலாக ஒரு பணியாளரையோ இரு பணியாளர்களையோ சில பணியாளர்களையோ இணைத்துக் கொள்ள வேண்டும் என பணியாளர்கள் சொல்ல வேண்டும். ஆனால் அவ்விதம் அவர்கள் கூற மாட்டார்கள். கெடு நெருங்கும் போது அந்த முடிவை ஒருங்கிணைப்பாளர்கள் எடுக்கட்டும் என பணியாளர்கள் நினைப்பார்கள். தொழிலாளர்கள் பணி உரிய காலத்தில் நிகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தங்கள் உடல் உழைப்பை மேலும் கோரப்போகும் செயல் என்றே புரிந்து கொள்வார்கள். தங்கள் ஒத்துழையாமையை மறைமுகமாக வெளிப்படுத்துவார்கள். இந்த சிக்கல்கள் அனைத்தையும் தாண்டி ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவெனில் பணிகள் முற்றிலும் நிகழாமல் நின்று கொண்டிருக்கக் கூடாது ; ஏதேனும் சிறிதாகவோ பெரிதாகவோ நடந்து கொண்டிருக்க வேண்டும். நூற்றுக்கணக்கானோர் இணைந்து பணியாற்றும் போது எதிர்பாரா கணம் ஒன்றில் ஒரு ஒத்திசைவு ஏற்பட வாய்ப்புண்டு. அந்த ஒத்திசைவு பெரும் அற்புதங்களை நிகழ்த்தி விடும். பணிகளில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள், பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பார்கள் என அனைவரும் ஆழ்மனத்தில் இதனை அறிந்திருப்பார்கள். எனவே அக்கணம் நோக்கி முன்னேறிச் சென்ற வண்ணம் இருப்பார்கள்.
அறிவும் பிரக்ஞையும் மனிதர்கள் அனைவரிடமும் இருப்பவை. எனவே விஷயம் எதுவாயினும் அதனை விளக்கிச் சொல்லி புரிய வைத்து விழிப்புணர்வை உண்டாக்கி மனிதர்களை இணைக்க முடியும் என நான் நம்புகிறேன். உணரவும் செய்கிறேன். இந்த அடிப்படையிலேயே எனது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிறேன்.