தமிழகத்தில் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள் அனைவருக்குமே ஆங்கிலம் தெரியும். இதில் ஒரு சுவாரசியம் என்னவெனில் ஆங்கிலத்தில் பேசுவதை விட ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்திருப்பார்கள். ஆனால் ஆங்கிலத்தில் ஏதேனும் எழுதுவதற்கான தேவை எழாது. எனவே அவர்களின் ஆங்கிலம் தூரமான ஆழம் ஒன்றில் இருக்கும். ஒரு மொழியைப் பேச அந்த மொழி அதிகம் காதில் கேட்கும் சூழ்நிலையில் இருக்க வேண்டும். ஒருவர் இன்னொருவர் இன்னொருவர் என பலர் அந்த மொழியை விதவிதமாக உச்சரிப்பதிலிருந்து நாம் நமக்கான உச்சரிப்பை தொனியை உருவாக்கிக் கொள்ள முடியும். ஒருவர் பேசுவதைப் நாம் புரிந்து கொள்வது என்பது மொழியை உச்சரிக்கும் விதத்திலிருந்து உச்சரிப்பவரின் உணர்வைப் புரிந்து கொள்வது என்பதே. நாம் பதிலளிப்பது என்பதும் அவர் வெளிப்படுத்தும் உணர்வை நாம் எவ்விதம் எதிர்கொள்கிறோம் என்பதும் அதற்கு என்ன சொல்லில் பதில் சொல்கிறோம் என்பதும் தான். சில நாட்களுக்கு முன்னால் ஒருவர் தன்னிடம் பணி புரிபவரிடம் ‘’Remember ! Your life is in my hand'' என்று கோபமாகச் சொன்னார். ’’உன்னுடைய உத்யோகம் என் கையில் இருக்கிறது’’ என்பதுதான் அவர் சொல்ல வந்தது. தமிழில் ‘’உன் வாழ்க்கை என் கையில் இருக்கிறது ‘’ என்று அவர் சொல்லியிருந்தால் ஒருவேளை பணி புரிபவர் ‘’சார்! என்னோட உத்யோகம் தான் உங்கள் கையில் இருக்கு. என் வாழ்க்கை எப்படி உங்கள் கையில் இருக்கும்?’’ என்று கேட்டிருப்பார். இலக்கணத்தில் ஆகுபெயர் என ஒன்றை பள்ளி நாட்களில் படித்த்திருக்கிறேன். ’’ஊர் மகிழ்ந்தது’’ என்ற கூற்றில் ஊர் என்பது ஊரில் இருக்கும் மக்களைக் குறிக்கும். ஊர் என்பது அஃறிணை. உயர்திணையாகிய மாந்தர் மட்டுமே மகிழ்ச்சி என்னும் உணர்வை அடைய முடியும். இங்கே ஊர் என்னும் அஃறிணை ஊரில் இருக்கும் மனிதர்கள் என்னும் பொருளில் ஆகி வந்ததால் இங்கே ஊர் என்பது ஆகுபெயர். இங்கே அனைவருக்குமே ஆங்கிலம் அன்னியமான மொழி என்பதால் ஒரு விஷயத்தை கறாராக வரையறுத்து எழுத ஆங்கிலம் உபயோகமாக இருப்பது உண்டு. சங்கடமான ஒரு விஷயத்தை சற்றே மென்மையாகத் தெரிவிக்க ஆங்கிலம் உதவுவதுண்டு. அதன் காரணம் என்னவெனில் , ஆங்கிலத்தில் பேசும் போது சொந்த மொழியில் பேசுவது போல உணர்வு 100 சதவீதம் இணைந்திருக்காது. 90 சதவீதம் அல்லது 80 சதவீதம் மட்டுமே இணையும். கிடைக்கும் மீதி இடைவெளியில் உணர்வை மட்டுப்படுத்திட முடியும். மொழியில் எழுத மூளையின் குறிப்பிட்ட சில பகுதிகள் செயல்படுகின்றன. மொழியில் பேச மூளையின் வேறு சில பகுதிகள் செயல்படுகின்றன. பாடும் திறன் கொண்ட ஒருவர் மூளையின் பேச்சுக்கான பகுதியையோ எழுத்துக்கான பகுதியையோ பயன்படுத்துவதில்லை . பாடும் திறனுக்கு இவை இரண்டும் இல்லாத வேறு பகுதிகள் இருக்கின்றன. எனவே தான் சிறப்பாகப் பாடும் ஒருவரின் பேச்சு கோர்வையாக நேர்த்தியாக இல்லாமல் சாதாரணமாக இருப்பதைக் காணலாம். தமிழகம் பிரிட்டிஷ் ஆங்கிலத்தின் தாக்கம் அதிகம் கொண்ட பகுதி. எனவே ஆங்கிலம் என்றாலே பிரிட்டிஷ் ஆங்கிலம் என்றே நாம் எண்ணுகிறோம். சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னால் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை நான் தீவிரமாக வாசித்தேன். ஒன்றிலிருந்து இன்னொன்று என. அப்போது எனக்குத் தோன்றியது ஆங்கிலம் என்னும் மொழியின் பல சொற்றொடர்கள் பிரயோகங்கள் பதங்கள் ஷேக்ஸ்பியர் எழுதியவை. எண்ண எண்ண வியப்பளிப்பது. ‘’All the scents of Arabia will not sweeten the little hand'' எளிய சொற்கள். தனித்தனியே பார்க்கும் போது பத்து தனி சொற்கள். அதில் ஒரே சொல் இரண்டு இடத்தில் வருகிறது. அவ்வாறெனில் ஒன்பது சொற்கள். ‘’All the scents of Arabia'' வையும் ‘’the little hand'' ஐயும் ஒரே சொல்லாகக் கருத முடியும். அவ்வாறெனில் ஐந்து சொற்கள். இந்த வாக்கியம் கொடுக்கும் வாசிப்பு அனுபவம் என்பது எத்தனை பெரியது. எனக்கு எட்டு வயது இருந்த போது ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கே அத்தர் தெளித்து வரவேற்றார்கள். அத்தர் தெளிப்பதற்கென்றே ஒருவர் இருந்தார். அந்த வாசனை என்னைப் பரவசப்படுத்தியது. அந்த திருமண நிகழ்வில் மங்கள இசை, ஹோமம், சடங்குகள் என அத்தனை அம்சங்கள் இருப்பினும் அத்தர் தெளித்து வரவேற்றது எனக்கு புதிதாக இருந்தது. சிறுவனான எனக்கு எப்படி அந்த மிகச் சிறு துளியான அத்தர் அத்தனை மணி நேரம் நறுமணம் அளித்துக் கொண்டிருக்க முடியும் என்ற ஆச்சர்யத்தை அளித்துக் கொண்டேயிருந்தது. ஷேக்ஸ்பியரின் இந்த வரியை அந்த ஒரு அத்தர் துளியிலிருந்தே திறக்கத் தொடங்கினேன். ‘’All the scents of Arabia'' . அரேபிய வாசனைத் திரவியங்கள் நூற்றுக்கணக்கானவை. ஆயிரக்கணக்கானவை. அவை அத்தனையும் கொண்டு கழுவினாலும் அவள் சிறு கரத்தை வாசனைப்படுத்த முடியாது. பிரமித்துப் போய் விட்டேன். ஷேக்ஸ்பியரின் ஆங்கிலம் குறித்து நான் ஒரு பதிவை எழுதினேன். ஆங்கிலமே தெரியாதவர்களிடம் கூட ஷேக்ஸ்பியர் குறித்து பேசிக் கொண்டிருந்தேன்.
எந்த மொழியையும் பேசுவது என்பது ஒரு பழக்கம். நம்முடைய சுபாவத்துடன் சிந்தனையுடன் மனநிலையுடன் அதனை இணைத்துக் கொள்ள வேண்டும். முன்னாள் பாரதப் பிரதமர் நரசிம்ம ராவ் ஆறு மொழிகள் பேசத் தெரிந்தவர். ஆறு மொழியிலும் மௌனமாகவும் இருக்கத் தெரிந்தவர் ! சமீபத்தில் ஆந்திர நிலத்தில் ரயில் பயணம் மேற்கொண்ட போது சந்தித்த வங்காள இளைஞனிடம் நீண்ட நேரம் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அடர்த்தியான பல விஷயங்கள். பிரிய மனமில்லாமல் இருவரும் பிரிந்தோம். அந்த ஆங்கிலம் எப்படி அந்த தருணத்தில் வெளிப்பட்டது ? பின்னர் எங்கே சென்றது ? நூல் வாசிக்கும் போது மனதுக்குள் துடிப்பாய் இருக்கும் ஆங்கிலம் பின்னர் எங்கே இருக்கிறது ?
நமது மரபு கல்விக் கடவுளான சரஸ்வதி ஒரு கையில் அட்சரமாலையை ஏந்தியிருப்பார் என்கிறது. அவருடைய அட்சர மாலையில் உலகில் இருக்கும் எல்லா மொழிகளின் அட்சரமும் இருக்கும் !