Wednesday, 6 August 2025

வெப்பும் நீரும்

எனது நண்பர் ஒருவர் ஒரு சிக்கலில் இருக்கிறார். நான் அதனை என்னுடைய இன்னொரு நண்பரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். இரண்டு பேரும் ஒருவர் மற்றொருவரை அறிய மாட்டார்கள். அவர்களுக்குப் பொதுவான நபர் இடையில் இருக்கும் நான் மட்டுமே. சிக்கலுக்கான தீர்வுக்காக முயற்சி செய்யும் நண்பர் அந்த சிக்கலின் எல்லா பரிமாணங்களையும் முழுமையாக ஆராய்ந்தார். பின்னர் அந்த விஷயத்தில் செயலில் இறங்கினார். இன்று நெடுந்தொலைவு பயணித்து இந்த விஷயம் தொடர்பாகப் பேசுவதற்கு வந்திருந்தார்.  உடன் யாரும் இல்லாமல் தனியே சென்று பேசுவது இப்போது அந்த விஷயத்துக்கு நல்லது என்பதால் தனியாகப் பேசச் சென்றார். நான் அவருடைய கார் ஓட்டுநருடன் காரிலேயே இருந்து விட்டேன். உள்ளே பேசச் சென்ற நண்பர் வெளியே வர கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாகி விட்டது. அவ்வளவு நேரம் ஆனது என்னை அமைதியிழக்கச் செய்தது. கார் ஓட்டுநரை உள்ளே அனுப்பலாமா என யோசித்தேன். குடிக்கத் தண்ணீர் கொடுத்து அனுப்பலாமா என யோசித்தேன். அவர் எவ்விதமான சூழலையும் சமாளிக்கக் கூடியவர் என்பதால் அமைதியாக இருந்தேன். மூன்று மணி நேரம் கழித்து நண்பர் வெளியே வந்தார். அவரது நடையில் சிறு சோர்வு தெரிந்தாலும் அவரது முகம் தெளிவாக இருந்தது. நான் முன்னரே வாகன ஓட்டுநரிடம் நண்பர் வந்ததும் அந்த இடத்திலிருந்து விரைவாக வெளியேறி வேறு இடம் சென்று விடுவோம் எனக் கூறியிருந்தேன். அதன் படி ஓட்டுநர் வாகனத்தை அங்கிருந்து வெளியே கொண்டு சென்றார். 

எனது மோட்டார்சைக்கிள் பயணத்தின் போது ராஜஸ்தானில் சுண்ணாம்பு மண் பிரதேசம் ஒன்றில் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் இரு பெண் குழந்தைகளைக் கண்டேன். அவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் பார்த்த தினத்தன்று பள்ளி விடுமுறை என்பதால் தங்கள் வீட்டின் மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த நிலம் முழுக்க சுண்ணாம்புக் கற்களால் ஆனதாக இருந்தது. வெயில் அந்த மண்ணில் பட்டு சூடாவதில் அந்த சுண்ணாம்பு கற்கள் மேலும் வெப்பத்தை உமிழ்கின்றன. அந்த பிரதேசம் முழுக்க எங்கும் வெக்கை. அந்த சாலையில் எப்போதோ ஏதோ ஒரு வாகனம் கடந்து செல்கிறது. வாகனம் அந்த பகுதியில் நுழைவதை தொலை தூரத்திலேயே பார்க்கக் கூடிய வகையில் அந்த பிரதேசம் இருக்கிறது. தூரத்தில் வண்டியைப் பார்த்தால் அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். அந்த பாதையைக் கடப்பவர்களுக்கு நீர் அளிக்கிறார்கள். வெம்மையான அந்த நிலத்தில் எல்லா ஜீவராசிகளும் தண்ணீர் தாகத்தில் இருக்கின்றன. அந்த குழந்தைகள் அங்கே வரும் ஜீவன்களுக்கு நீர் அளிக்கிறார்கள். அந்த வெப்பு நிலத்தில் அந்த குழந்தைகள் அளிக்கும் தண்ணீரால் தீரும் தாகத்தை விட மேலானது அந்த குழந்தைகள் அளிக்கும் நம்பிக்கை. அந்த குழந்தைகளின் நினைவு என் வாழ்வின் மிக அரிய செல்வங்களில் ஒன்று. 

இன்று எனது நண்பர் தான் இதுவரை பார்த்திராத தான் அறிந்திராத ஒருவருக்காக மூன்று மணி நேரம் அளித்து செயல்பட்டது மகத்தான செயல். மனிதர்கள் மேல் நம்பிக்கை கொள்வதற்கான மேலும் ஒரு தருணத்தை எனக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார் நண்பர். 

அவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என வானுறையும் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.