திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரது தேவாரப் பதிகங்களைக் கேட்கும் போது நமது கவனத்துக்கு ஒரு விஷயம் தெரியவரும். ஒவ்வொரு திருத்தலத்தின் வர்ணனையை அவர்கள் தங்கள் பதிகங்களில் பாடும் போது அத்திருத்தலங்களின் இறைவனான சிவபெருமான் அத்திருத்தலங்களில் எப்போதும் ஒலிக்கும் நான்மறைகளின் ஒலியைக் கேட்ட வண்ணம் இருப்பது குறித்து குறிப்பிடுவார்கள். தேவார மூவரால் பாடல் பெற்ற எந்த தலமாக இருந்தாலும் ஊர்களில் மறையொலி கேட்கும் இந்த சித்திரம் முன்வைக்கப்பட்டிருக்கும். அந்த திருத்தலம் சிதம்பரமாக இருக்கலாம் ; திருவண்ணாமலையாக இருக்கலாம் ; திருவாரூராக இருக்கலாம் ; திருமயிலையாக இருக்கலாம். இந்த தேவாரப் பதிகங்களைக் கேட்ட போது எனக்கு நான்மறை ஓதப்படுவதை முழுமையாக ஒருமுறை கேட்க வேண்டும் என்று தோன்றியது. வேதங்கள் நம் நாட்டில் தோன்றியவை. உலக ஞானத்தில் அரிய பொக்கிஷங்கள் அவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை எழுதப்படாத பிரதிகளாக ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு மனப்பாடமாக அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. இத்தகைய ஒரு மரபு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து இன்றும் தொடர்கிறது என்பது மாபெரும் மானுட அதிசயம். மானுடத்தின் மாபெரும் சாதனைகளில் ஒன்று. நான்மறைகள் மனப்பாடமாக ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு வந்து சேர்ந்திருப்பதன் பிரும்மாண்டம் புரிய வேண்டும் எனில் அவற்றை ஒருமுறையாவது முழுமையாகக் கேட்க வேண்டும் என்று தோன்றியது. இணையத்தில் நான்கு வேதங்கள் ஓதப்படுவதன் ஒலிப்பதிவுகள் முழுமையாக உள்ளன. முழுமையாக அவற்றைக் கேட்பதற்கு 150 மணி நேரம் ஆகும். நான்மறைகள் குறித்த ஆர்வம் உடைய சிலர் ஒரே இடத்தில் பன்னிரண்டு நாட்கள் கூடி முழுமையாக மறையொலியைக் கேட்கும் விதமாக ஏற்பாடு ஏதேனும் செய்ய இயலுமா என யோசிக்கிறேன் ; திட்டமிடுகிறேன். அதிகாலை படைப்போன் பொழுதிலிருந்து மாலை அந்தி வரை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மறையொலியை மட்டும் கேட்ட வண்ணம் இருக்க வேண்டும். பங்கேற்பாளர்கள் தங்களுக்குள் எந்த சொல்லெடுத்தும் பேசிக் கொள்ளக் கூடாது.
ஒரு விஷயம் கடினம் எனத் தோன்றினாலும் அசாத்தியம் என எண்ணப்பட்டாலும் அதனை எவ்விதம் செய்யலாம் எவ்விதம் சாத்தியப்படுத்தலாம் என முயற்சிப்பதே மானுடத்தின் சிறப்புத் தன்மையாக இருந்திருக்கிறது.
ஆர்வமுள்ளவர்கள் காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் என 12 வாரங்கள் அவரவர் இடத்திலிருந்து கூட முயன்று பார்க்கலாம்.