Thursday, 7 August 2025

வங்கி ஒன்றை உருவாக்குதல்

தமிழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று சமூகங்கள் வங்கி தொடங்கி நடத்தியுள்ளன. ஆர்ய வைஸ்ய சமூகத்தினர் துவங்கிய கரூர் வைஸ்யா வங்கி, நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் துவங்கிய தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த சிட்டி யூனியன் வங்கி ஆகியவையே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடங்கிய மூன்று வங்கிகள். இந்த மூன்று வங்கிகளும் மாநில வளர்ச்சிக்கும் அவை அமைந்திருக்கும் ஊரின் பிராந்தியத்தின் சமூக வளர்ச்சிக்கும் பெரிய அளவில் துணை புரிந்திருக்கின்றன. தமிழகத்தின் பெரும்பான்மையான விவசாயக் குடிகளுக்காக ஒரு வங்கி தொடங்கப்பட்டால் அந்த வங்கி விவசாயக் குடிகளின் வாழ்வில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கும். ஜனநாயக யுகத்தில் சட்டம் குடிகள் அனைவரும் சமம் என்னும் நிலையை உறுதி செய்துள்ளது. நாடு வளர்ச்சியடைந்திருக்க வேண்டுமெனில் நாட்டின் குடிகள் - குறிப்பாக - விவசாயக் குடிகள்  வளத்துடன் வாழ வேண்டும். ஜனநாயக யுகம் குடிமக்கள் சுயசார்புடன் விளங்குவதையே வளம் எனக் கொள்கிறது. 

தமிழகத்தின் விவசாயக் குடிகள் பெருநிலக்கிழார்கள் அல்ல ; 1 ஏக்கர் , 2 ஏக்கர், 3 ஏக்கர் என நிலம் வைத்திருப்பவர்கள். செங்கல் காலவாய் தொழில் செய்பவர்கள். டிராக்டர் , டாடா ஏஸ் ஆகிய வாகனங்களை வாடகைக்கு ஓட்டுபவர்கள். கட்டுமானத் தொழிலாளர்களாக இருப்பவர்கள். சிறு கடைகள் வைத்திருப்பவர்கள். இவர்கள் வாழ்க்கை செழிப்படைந்தால் மட்டுமே மாநில வளர்ச்சி என்பது சாத்தியம். தமிழகத்தின் கோடிக்கணக்கான விவசாயக் குடிகளின் பொருளியல் வளர்ச்சிக்காக பிரத்யேகமாக ஒரு வங்கி இருக்க வேண்டியது அவசியமாகிறது. அவர்கள் தொழில் தொடங்க, செய்து கொண்டிருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்ய, தொழில் வளர்ச்சிக்கு வாகனங்கள் வாங்க, உபகரணங்கள் வாங்க விவசாயக் குடிகளுக்கென ஒரு வங்கி உருவாக்க்ப்படுவது அவசியமாகிறது. 

எனது நண்பர் ஒருவர் விவசாயக் குடியைச் சேர்ந்தவர். அவரது பிராந்தியத்தில் உள்ள எல்லா குடும்பங்களையும் அறிந்தவர். பலவிதமான பண்பாடு சார்ந்த முன்னெடுப்புகளை மேற்கொள்பவர். விவசாயக் குடிகளுக்கான வங்கியை உருவாக்க அவர் பொருத்தமான நபராக இருப்பார் என நான் எண்ணினேன். அவரிடம் ஒரு வங்கியை உருவாக்குங்கள் என்று கூறினேன். மிகப் பெரிய அச்செயலை செய்ய முடியுமா என இருவரும் விவாதித்தோம். 

9 மாதத்திலிருந்து 12 மாதம் வரை நேரம் எடுத்துக் கொண்டு மாநிலத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் பயணம் செய்து விவசாயக் குடும்பங்களைச் சந்தித்து விவசாயக் குடிகளுக்கான வங்கி ஒன்றை உருவாக்க வேண்டியது மிக அவசியம் என்ற கருத்தை அவர்கள் மனத்தில் பதியுமாறு பரப்புரை செய்யுமாறு கூறினேன். குடியானவர்களுக்காக துவங்க உள்ள வங்கி குறித்து விவசாயக் குடிகளுக்கு ஏதேனும் கூறுவதற்கு ஆலோசனை இருந்தால் அவசியம் குறிப்பிடுமாறு கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினேன். திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடந்தால் அடுத்த பணி என்ன என்பதை சேர்ந்து யோசிப்போம் என்று கூறியிருக்கிறேன்.