இன்று ஆடிப்பெருக்கு. நேற்று இரவு கிளம்பி ஸ்ரீரங்கம் செல்லலாம் என நினைத்தேன். அம்மா மண்டபத்துக்கு நம்பெருமாள் எழுந்தருளி காவிரி அன்னைக்கு சீர் கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பம் கொண்டிருந்தேன். பராமரிப்புப் பணி நிகழும் பணியிடத்தில் நேற்று ஊழியர்கள் வரவில்லை. இன்று வருவதாகக் கூறினார்கள். பணி என வந்து விட்டால் மற்ற விஷயங்கள் அனைத்தையும் ஒத்தி வைப்பது என்பது ஆகி வந்த வழக்கம். எனவே இன்று ஊரிலேயே இருப்பது என முடிவு செய்தேன். சிமெண்ட், ஸ்டீல், ஜல்லி ஆகியவை வாங்கித் தர வேண்டியிருந்தது. நண்பரைச் சந்திக்க வெளியூர் செல்ல வேண்டும் என நினைத்தேன். அவருடைய அலைபேசி எண்ணுக்கு முயற்சி செய்து கொண்டேயிருந்தேன். அலைபேசியுடன் தொடர்பு கிடைக்கவில்லை. இரவு 7 மணிக்கு சந்திக்கிறேன் என காலை குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். மாலை 5.30 மணிக்கு இரவு சந்திக்கலாமா அல்லது காலை சந்திக்கவா என மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். நண்பர் அலைபேசியில் அழைத்தார். சில முக்கிய விஷயங்களைப் பேசினோம். வங்கி மேலாளர் ஒருவரை காலை 10.15 மணியளவில் சந்திக்க உள்ளதாகக் கூறினேன். வாரத்தின் முதல் நாள் காலை மேலாளர் பரபரப்பாக இருப்பார் ; மாலை 3 மணிக்கு மேல் சென்று சந்திக்குமாறு கூறினார். இன்று ஆட்கள் செய்த பணியில் சில பணிகள் மீதம் உள்ளன. நாளை இரண்டு ஆட்கள் வேலைக்கு வருவார்கள். உலகியலில் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருந்தால் கடவுளிடம் அமைதியைக் கொடு என்பதைத் தவிர வேறு ஏதும் கேட்கத் தோன்றாது.