Monday, 4 August 2025

அதிகார வர்க்கமும் ஜனநாயக அரசியலும்

இந்தியாவை ஆள்வது யார் ? தேசியக் கட்சி அல்லது தேசியக் கட்சிகள் அல்லது தேசியக் கட்சியும் மாநிலக் கட்சிகளும் இணைந்த கூட்டணிகள் அல்லது அரசியல்வாதிகள். மேற்கூறிய அனைத்துமே சரியான விடைகள் தான். ஆனால் அவையே பிறிதொன்றில்லாத முழுமையான பதில்களா என்று கேட்டுக் கொள்வோமாயின் அதன் பதில் ‘’ஆம்’’ என்று இருக்க முடியாது. இந்தியாவை அதிகார வர்க்கம் ஆள்கிறது. இந்தியாவில் உள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543. மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 4123. இந்த மூன்று எண்ணிக்கைகளையும் சேர்த்தால் கூட அந்த எண்ணிக்கை 5000 க்கு குறைவானது. இந்தியாவில் மொத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்கள்  எண்ணிக்கை 2,00,00,000 ( இரண்டு கோடி). அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை இந்திய ஜனநாயகத்துடன் இணைத்துப் பார்த்துக் கொள்வது நமக்கு சில விஷயங்களில் சில மேலான புரிதல்களை அளிக்கும். 

அரசின் பணிகளில் முதன்மையானது என்ன ? சமூகத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். குடிகள் அதனை அரசிடமிருந்து எதிர்பார்ப்பார்கள். இதை இன்னும் ஆழமாகப் பார்த்தால் அரசின் பணிகளில் முதன்மையானது மக்களிடமிருந்து வரி வசூல் செய்வது. ஏனென்றால் அரசு என்பது இரண்டு கோடி பேரைக் கொண்ட ஒரு அமைப்பு. அதில் உள்ள அனைவருக்கும் மாதாமாதம் ஊதியம் வழங்க வேண்டும். வரி வருவாய் சீராக இருக்க வேண்டும் என்றால் சமூகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். நிறைய தொழில்கள் நடக்க வேண்டும். சமூகத்தில் அமைதியை நிலவச் செய்வதும் வரி வசூல் செய்வதும் மட்டுமே அரசின் வேலை. பல தொழில் செய்ய வேண்டிய பொறுப்பு நாட்டின் குடிகளுடையது. குடிகள் கோடிக்கணக்கானோர். அவர்கள் போதிய அளவு தொழில் செய்து வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிறார்களா என்பதையும் அரசு கவனிக்க வேண்டும். 

இந்திய ஜனநாயகத்தில் அரசு என்பது மிகவும் மெதுவாக செயல்படும் அமைப்பு என்பதை அனைவரும் அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பார்கள். எந்த அரசாங்கமும் முயன்றால் அடையக் கூடியது என்பது தங்கள் செயல் வேகத்தை கூட்டிக் கொள்வது மட்டும் தான். அதற்கு மேல் அரசிடம் வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது. 

ஜனநாயகத்தின் மேன்மை என்பது மக்கள் பொறுப்பேற்றுக் கொள்வதே. ஜனநாயகத்தின் மேன்மை என்பது மக்கள் சுயசார்புடன் விளங்க முடியும் என்பதே.