எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரிடம் பெரிய கார் ஒன்று இருக்கிறது. அந்த காருக்கு ஒரு சாரதி உள்ளார். நான் நண்பரின் வீட்டுக்கு எப்போது சென்றாலும் அது காலை 6.30 ஆக இருந்தாலும் காலை 8.30 ஆக இருந்தாலும் நண்பகலாக இருந்தாலும் மாலை 4 மணியாக இருந்தாலும் எந்நேரமும் அவர் காரை துடைத்துக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். ஒருவரால் எப்படி நாள் முழுவதும் இதே வேலையைச் செய்ய முடிகிறது என ஆச்சர்யப்படுவேன். ஒருநாளில் ஒருமுறை அவர் காரைத் தூய்மை செய்யும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார் எனில் அவர் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்த பணியை வைத்துக் கொள்வார். உதாரணத்துக்கு காலை 10 மணி. நம் சூழலில் ஊரே காலை 10 மணிக்குத் தான் செயல்படத் துவங்குகிறது. அவரை நான் ஏன் எல்லா நேரங்களிலும் தூய்மைப்படுத்திக் கொண்டிருப்பதைக் காண்கிறேன் ? அவர் மேற்கொள்ளும் செயல் உலகியலான செயல் மட்டும் அல்ல ; அவர் அந்த வாகனத்தின் சாரதியாக உலகியலுக்கு அப்பால் இருக்கும் அம்சம் ஒன்றைத் தொடுகிறார். அவர் ஒரு நாளைக்கு ஒருமுறை தான் தூய்மை செய்வார் ; நாள் முழுவதும் அதை மட்டுமே ஒருவர் செய்வதில்லை. ஆனால் தனது வாகனத்தை தனது உணர்வில் ஏந்தியுள்ளார் சாரதி. அந்த உணர்வே அவரை எப்போதும் அந்த வாகனத்தின் பக்கத்திலேயே இருக்க வைக்கிறது. அவர் வாகனத்தை நினைவில் கொண்டிருப்பது ஓர் அன்னை தன் மகவை எப்போதும் நினைவில் வைத்திருப்பது போல. ‘’மாத்ருபாவம்’’ என்கிறது நம் மரபு. தனது வாகனம் மேல் சாரதி கொள்ளும் உணர்வும் ‘’மாத்ருபாவம்’’ தான்.