பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணன் விபூதி யோகத்தில் சூழ்ச்சிகளில் நான் சூதாட்டம் என்று கூறுகிறான்.
மகாபாரதத்தில் இரண்டு மன்னர்கள் சூதாடும் கதை வருகிறது. அந்த இரண்டு மன்னர்களின் கதையும் வாழ்வும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கின்றன. இருவரும் இரண்டு காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் நளன். இன்னொருவர் யுதிர்ஷ்ட்ரன். கௌரவர்கள் யுதிர்ஷ்ட்ரனை சூதாட்டத்துக்கு அழைக்கும் போது விதுரர் யுதிர்ஷ்ட்ரனிடம் நளனின் கதையைக் கூறி சூதாட்டத்தில் அனைத்தையும் நளன் எவ்விதம் இழந்தான் என்பதைக் கூறி கௌரவர்களின் சூதாட்ட அழைப்பை ஏற்காதிருக்குமாறு அறிவுறுத்துகிறார்.
இங்கே நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். யுதிர்ஷ்ட்ரன் மதி நுட்பம் மிக்கவர். சிறந்த கல்விமான். எதையும் நுணுக்கமாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர். அவர் பகடையாட்டம் அறியாதவர் அல்ல. பகடையாட்டம் அறிந்தவர். எவ்விதமான நகர்வுகளைச் செய்ய வேண்டும் என்பதிலும் திறன் கொண்டவர். அவர் பகடையாட்டத்தின் அத்தனை அம்சங்களையும் அறிந்தவர். எனினும் அவர் சூதாடி அல்ல. பகடையாட்டம் அறிந்தவர் மட்டுமே. ஒரு சூதாடி பகடையாடுவதற்கும் பகடையாட்டம் அறிந்த ஒருவன் பகடையாடுவதற்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு.
சகுனி சூதாடி. தன் வாழ்க்கையையே தான் விரும்பிய நோக்கத்துக்காக பணயமாக வைத்தவர். யுதிர்ஷ்ட்ரர் அந்த வேறுபாட்டை உணர்ந்திருக்கவில்லை. சூதாட்டத்தை ஆடுபவனும் அதன் களம் அளவுக்கே முக்கியமானவன். சூதில் முழுத்தேர்ச்சி பெற்றவன் அதனை அறிந்திருப்பான். அவனுக்கு ஆட்டத்தை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். சகுனியிடம் சூதாடச் சென்ற யுதிர்ஷ்ட்ரன் சூதாட்டத்தின் முக்கியமான கடைசி பாடத்தை அறியாமல் அவனிடம் விளையாடினார். தனது நாடு , மக்கள், சேனை, செல்வம், சகோதரர்கள், மனைவி அனைவரையும் இழந்து சூதாட்டத்தின் முக்கியமான கடைசி பாடத்தைக் கற்றுக் கொண்டார்.
அந்த பெரிய தோல்விக்குப் பிறகு யுதிர்ஷ்ட்ரன் சூதாட்டத்தின் அனைத்து அம்சங்களையும் அனைத்து பாடங்களையும் முற்றிலும் அறிந்தவர் ஆனார். கிருஷ்ணதுவைபாயன வியாசர் தனது மகாபாரத காவியத்தில் இந்த விஷயத்தை குறிப்பாகக் காட்டுகிறார். விராட தேசத்தில் விராட ராஜனின் அரண்மனையில் கங்கன் என்ற பெயரில் யுதிர்ஷ்ட்ரன் அக்ஞாதவாசம் புரியும் போது விராடனுக்கு அமைச்சராகவும் விராடனுடன் பகடையாடுபவராகவும் இருக்கிறார். அப்போது பகடையாட்டத்தின் அத்தனை அம்சங்களையும் அவனுக்கு சொல்லித் தருகிறார். விராடன் கங்கனிடம் நீர் பகடையாட்டத்தை முற்றறிந்திருக்கிறீர் எனக் கூறும் போது அதன் கடைசி பாடத்தை என் வாழ்க்கையின் மிகப் பெரிய விலையைக் கொடுத்து கற்றுக் கொண்டேன் என்கிறார்.
யோசித்துப் பார்த்தால் மகாபாரத யுத்தமே யுதிர்ஷ்ட்ரன் ஆடிய பகடையாட்டம் தான். எதிர்த்தரப்பில் 11 அக்ஷௌணி சேனைகள் ; யுதிர்ஷ்ட்ரன் பக்கம் 7 அக்ஷௌணி சேனைகள். தன்னிடம் இருந்த குறைவான சேனைகளின் உயிரைப் பகடைக்காயாக்கியே அந்த ஆட்டத்தை யுதிர்ஷ்ட்ரன் ஆடினார். அந்த ஆட்டத்தில் வென்றார்.
நளனும் பகடையாட்டத்தில் நாட்டை இழந்து மனைவியைப் பிரிந்து குழந்தைகளைப் பிரிந்து பல ஆண்டுகள் உருமாறி அலைந்து திரிந்து பின் நிலை மீண்டு தன்னிடம் இருந்த பகடையாட்டத்தின் மூலம் நாட்டைப் பறித்த புஷ்கரணிடம் மீண்டும் பகடையாடி வென்று நாட்டை அடைகிறார். விதுரன் யுதிர்ஷ்ட்ரனிடம் இந்த கதையைக் கூறும் போது அவருக்கு மனதின் ஒரு ஓரத்தில் என்ன நிகழப் போகிறது என்பது தெரிந்திருக்குமா?