Friday, 24 October 2025

சமூகமும் அரசும்

எனது மோட்டார்சைக்கிள் பயணத்தில் நாட்டின் கணிசமான மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறேன். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஹரியாணா, தில்லி ஆகிய மாநிலங்களில் எனது பயணம் நிகழ்ந்திருக்கிறது. நான் கண்ட பயணித்த மாநிலங்களில் தமிழகம் அளவு சாமானிய மக்கள் அரசியலுக்கு அதாவது கட்சி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இன்னொரு மாநிலம் இருக்குமா என்பது தெரியவில்லை. இங்கே சமூகத்தின் எல்லா வித அடுக்கில் இருக்கும் மக்களுக்கும் அவர் பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களாக இருந்தாலும் சரி பொருளாதார ரீதியில் நடுத்தர அல்லது வறிய நிலையில் இருப்பவர்களாயினும் சரி அவர்கள் அனைவருமே மிகச் சிறு விதத்திலேனும் கட்சி அரசியலின் சாய்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள். பொது இடங்களெங்கும் அரசியல் பேசப்படும் இன்னொரு மாநிலம் இருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. உண்மையில் தமிழகத்தில் மக்கள் மனநிலை என்பதை அறிய பொது இடங்களில் நிகழும் உரையாடலைக் கேட்பதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும் என்னும் அளவில் மாநில சூழ்நிலை நூறாண்டுகளுக்கு மேலே இங்கே நிலவி வருகிறது. இங்கே ஒவ்வொரு கட்சிக்காரர் வீட்டிலும் தங்கள் தலைவர்களின் படம் உள்ளது. ஒவ்வொரு கட்சிக்காரரும் அவர் கட்சியில் பொறுப்பில் இருக்கிறாரோ இல்லையோ அவரது நான்கு சக்கர வாகனத்தில் கட்சிக்கொடி பொருத்தப்பட்டிருக்கிறது. இரு சக்கர வாகன நம்பர் பிளேட்டில் கட்சித்தலைவர் படத்தையோ கட்சிக் கொடியையோ ஸ்டிக்கராக ஒட்டிக் கொள்கிறார்கள். ஒரே ஊரில் இருக்கும் பிற கட்சிக் காரர்களை விரோதிகளாக பாவிக்கின்றனர். இவை அனைத்தையும் தமிழகத்தில் தான் பார்க்க முடியும். மற்ற மாநிலங்களில் இந்த அளவு இல்லை என்பது எனது துணிபு. இந்த விஷயங்கள் தமிழகத்தில் 100 என்றால் மற்ற மாநிலங்களில் 1 என்ற அளவில் இருக்கக்  கூடும்.  இந்தியாவெங்கும் கட்சி அமைப்பைக் கொண்டுள்ள தேசியக் கட்சிகள் பல உள்ளன. அவர்களுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். தேர்தல் காலத்திலும் தேர்தல் அல்லாத காலத்திலும் அவர்கள் பலவிதமான கட்சிப் பணிகளை செய்கிறார்கள். இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தேசியக் கட்சிகளுக்கு சமமான அவர்களைத் தாண்டிய வலிமையுள்ள மாநிலக் கட்சிகள் இருக்கின்றன. சட்டசபைத் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் நிகழும் போதோ அல்லது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு மாநாடு கூட்டப்படும் போதோ மட்டுமே அங்கே அரசியல் நடவடிக்கைகள் பெரிதாக நிகழும். நாடெங்கும் அரசியலில் ஜாதி முக்கிய அம்சமாக இருக்கிறது ; நாடெங்கிலும் அரசியல் வணிகம் போல் நிகழ்கிறது. எனினும் தமிழகத்தில் இந்த நிலை மற்ற மாநிலங்களை விட பற்பல மடங்கு என்று தோன்றுகிறது.