Saturday, 25 October 2025

ஒரு முக்கியமான தினம்

இரண்டு நாட்களாக எனது மனதில் மூட்டமாக ஒரு சிறுகதை இருந்தது. அவ்விதம் மூட்டமாக இருக்கும் கருவை எழுதத் தொடங்கி விரிவாக்கிக் கொண்டு செல்வது எனது பாணி. இந்த சிறுகதை மகாபாரத கதாபாத்திரங்களைக் கொண்டது. எனவே அலைக்கழிப்பு அதிகமாகவும் தீவிரமாகவும் இருந்தது.  நள சரிதமும் மகாபாரதத்தின் சூதாட்டச் சருக்கமும் விராட பர்வமும் மனதில் அலைகளாகக் கொந்தளித்தன. மடிக்கணினி எப்போதும் என் எழுதுமேஜை மேல் இருக்கும். அது மடிக்கணினி என்றாலும் அதனை மேஜைக் கணினியாக பயன்படுத்துவதே எனது வழக்கம். மேஜையில் அது இருக்கும் இடத்திலிருந்து சிறிது கூட நகர்த்த மாட்டேன். எனினும் இந்த கதையை வேறு ஏதேனும் இடத்திலிருந்து எழுதலாம் என்ற எண்ணம் தோன்றியது. எங்கே என்பது மனதிற்கு பிடிபடவில்லை. ஊரிலிருந்து சில கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் ஆலமரங்கள் இருக்கின்றன. அவற்றின் அடியில் சென்று அமர்வது எனது வழக்கங்களில் ஒன்று. எனினும் அங்கே அமர்ந்து எழுத முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. என் பாக்கெட்டில் எப்போதும் பேனா இருக்கும். அதனுடன் நண்பரின் ஹார்டுவேர் கடைக்குச் சென்று விட்டேன். நண்பர் தனது கடையின் ஒரு பகுதியை சந்தையில் புதிதாக நுழைந்திருக்கும் பெயிண்ட் கம்பெனி தனது டிஸ்பிளேவை வைத்துக் கொள்ளும் விதமாக அந்த கம்பெனிக்கு அளித்திருக்கிறார். அந்த பகுதி வண்ணமயமானது. அதன் மேஜை நாற்காலிகள் கூட இவ்விதமானவையாக இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டவை ; வடிவமைக்கப்பட்டவை. நண்பரின் கடைக்குப் பக்கத்தில் இருக்கும் கடை ஒன்றில் வெள்ளைக்காகிதம் வேண்டும் என்று கேட்டேன். அவர்கள் ஏ4 அளவு காகிதமா என்று கேட்டனர். இல்லை சாதாரண அளவு கொண்ட வெள்ளைத்தாள் என்று கூறினேன். ஒரு தாள் ரூ.1 எனக் கூறினர். இரண்டு தாள்களை வாங்கிக் கொண்டு நண்பரின் கடைக்கு வந்தேன். நாற்காலியில் அமர்ந்து மார்ஜின் விட்டு மடித்துக் கொண்டு எழுதத் தொடங்கினேன். 

பாண்டவர்கள் அக்ஞாதவாசத்தில் விராட தேசத்தில் இருந்த காலகட்டத்தையும் நிகழ்வுகளையும் பின்புலமாகக் கொண்ட கதை. மூன்று பக்கம் எழுதினேன். எனக்கு துவக்கம் நன்றாக அமைந்திருக்கிறது என்றே தோன்றியது. மூடி வைத்து விட்டு கடைக்குள் இந்த பக்கமும் அந்த பக்கமும் சிறு நடை நடந்து விட்டு மீண்டும் வந்து எழுத அமர்ந்தேன். எழுதிக் கொண்டிருந்தேன். எனக்குப் பரிச்சயமான கடையின் ஊழியர் ஒருவர் தற்செயலாக நான் இருந்த இடத்துக்கு வந்தார் . ‘’ சார் ! எப்ப வந்தீங்க. இங்கயா இருக்கீங்க. உங்களை நான் பார்க்கவேயில்லையே. நீங்க இருக்கறதே தெரியலையே !’’ என்றார். அக்ஞாதவாசப் பின்னணியில் எழுதிக் கொண்டிருக்கையில் அவ்விதமான குரலைக் கேட்டது எனக்கு நன்நிமித்தம் என்றே பட்டது. ஒரு ஷீட் எழுதி முடித்து இரண்டாம் ஷீட்டிலும் எழுதிக் கொண்டிருந்தேன். நண்பர் வந்து ‘’நான் திருச்சி வரைக்கும் போறேன். ரிலேட்டிவ்வை திருச்சி ஏர்போர்ட்ல ஃபிளைட் ஏத்தி விடணும். ரெண்டு பேரும் சோழன்ல போறோம். நான் நைட்டு வருவேன்.’’ எனக் கூறி விடைபெற்றார். நண்பரின் மகன் கடையில் இருந்தான். இரண்டாவது ஷீட்டும் முழுதாக எழுதி முடிந்தது. பக்கத்து கடைக்குச் சென்று மூன்றாவது ஷீட்டை வாங்கி வந்து அதிலும் முழுமையாக எழுதி கதையை நிறைவு செய்தேன். 

இன்றைய தினம் எனக்கு ஒரு முக்கியமான தினம்.