Monday, 27 October 2025

முன்னுரை - தெய்வநல்லூர் கதைகள்

(எழுத்தாளர் ஜா. ராஜகோபாலன் எழுதியுள்ள ‘’தெய்வநல்லூர் கதைகள்’’ நாவலுக்கு எழுதிய முன்னுரை)

***

தெய்வநல்லூர் கதைகள், பக்கம் : 395 விலை : ரூ. 475 பதிப்பகம் : ஜீரோ டிகிரி பதிப்பகம், 75 & 76, முதல் தளம், குப்புசாமி தெரு, பாடி, சென்னை -50

***

நமது மரபில் பாற்கடல் கடைதல் ஒரு முக்கியமான தொல்கதை. தேவர்களும் அசுரர்களும் கூடி வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி கடல் வயிறு கலக்குகின்றனர். எப்போதும் முரண்பட்டிருக்கும் தேவாசுரர்கள் பரஸ்பர பயன் கருதி பாற்கடல் கடைதல் என்னும் கூட்டுச் செயல்பாட்டில் ஈடுபடுகின்றனர். இறவாநிலையளிக்கும் அமுதம் கிடைக்கப் போகிறது என அவர்கள் அறிந்திருந்தார்கள். பகை கொண்டிருந்த இரு தனிக்குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். அவர்கள் எதிர்பார்த்த அமுதம் வெளிப்பட்டது. ஆனால் அதற்கு முன் அவர்கள் எண்ணியும் பார்த்திராத ஆலகாலம் பேருரு கொண்டு வெளிவந்தது. அதனை எவ்விதம் அணுகுவது என்பதையோ அதிலிருந்து எவ்விதம் விலகிப் போவது என்பதையோ அதிலிருந்து எவ்விதம் தற்காத்துக் கொள்வது என்பதையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. அமுதம் குறித்த பரவசத்தினும் அதிகமான ஆலகாலம் குறித்த அதிஅச்சம் அவர்களை வியாபித்தது. யாரும் என்ன செய்வதென்று திகைத்து நின்ற வேளையில் அரவினை அணியாகப் பூண்ட அம்மையப்பன் ஆலகாலம் அருந்துகிறான். பதட்டமும் அச்சமும் நீங்கி உலகில் அமைதி எங்கும் நிறைகிறது.

நமது மரபில் இன்னொரு கதையும் இருக்கிறது. ஆயர்பாடியின் யாதவச் சிறுவன் யமுனைத்துறையில் யமுனைக் கரை மரங்களின் அடியில் குழல் இசைத்துக் கொண்டிருக்கிறான். அவன் இசைக்கு அனைத்தும் உருகுகின்றன. ஆவினங்களிலிருந்து ஆநிரை புரக்கும் இடையச் சிறுவர்கள் வரை அனைவரும் உருகுகின்றனர். அதே யமுனையின் ஒரு பகுதியில்தான் எப்போதும் நச்சுமிழும் காளிங்கனும் இருக்கிறான். குழலிசைக்கும் யாதவன் காளிங்கன் தலை மேல் ஏறி நர்த்தனம் புரிந்து அவன் நச்சை முறிக்க வேண்டியிருக்கிறது.

நமது மரபு குழந்தைகளைத் தெய்வத்தின் வடிவமாகக் காண்கிறது. உலகெங்கிலும் கூட அவ்வழக்கம் இருக்கிறது. கணபதி, ஆறுமுகன், ராமன்,கிருஷ்ணன் முதலிய தெய்வங்கள் குழந்தை வடிவிலும் நம் நாட்டில் வணங்கப்படுகிறார்கள். இன்று பிறக்கும் குழந்தைகளுக்கும் அத்தெய்வங்களின் நாமங்கள் சூட்டப்படுகின்றன. மனிதகுமாரன் குழந்தை வடிவில் உலகெங்கும் வணங்கப்படுகிறான். குழந்தைகள் உலகை நித்ய நூதனமாகக் காண்கின்றன. ஒவ்வொரு மனிதனும் கொண்டிருக்க வேண்டிய ஆன்மீக நிலையாகும் அது.

தெய்வநல்லூர் என்னும் கிராமத்தையும் அக்கிராமத்தின் பள்ளிக்கூடம் ஒன்றையும் அதில் பயிலும் குழந்தைகளையும் தன் கற்பனையால் உருவாக்கி ‘’தெய்வநல்லூர் கதைகள்’’ என்னும் நாவலை தமிழுக்கு அளித்திருக்கிறார் எழுத்தாளர் ஜா.ராஜகோபாலன். மாசின்மை என்னும் உயர்நிலை கொண்ட பாலபருவம் அப்புனைவின் குழந்தைகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளியின் மூலமாகவும் பள்ளி நட்பின் மூலமாகவும் வாய்க்கிறது. யாதவச் சிறுவன் இருக்கும் இடத்திலும் கோபாலர்கள் காளிங்கனால் பாதிக்கப்படுவது போல அமுதம் அடைய முற்படும் போது ஆலகாலம் எழுவது போல அக்குழந்தைகள் வாழ்வில் எதிர்பாராத நிகழ்வுகள் சில நிகழ்கின்றன. அவற்றை அவர்கள் எவ்விதம் எதிர்கொண்டார்கள் என்பதையும் அவர்கள் ஆளுமையை அவர்கள் வாழ்க்கைப்பார்வையை அவை எவ்விதம் பாதித்தன எவ்விதம் கட்டமைத்தன என்பதையும் ஜா.ரா தனது புனைவில் காட்டியுள்ளார். ’’தெய்வநல்லூர் கதைகள்’’ நாவலின் புனைவு மொழியில் வெளிப்படும் பகடி என்பது ஒரு புனைவு உத்தியே; வாழ்க்கை குறித்த மனித வாழ்க்கையின் முக்கியமான சில அடிப்படைகள் குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்பும் இந்நாவல் பகடியான புனைவு மொழியை ஒரு பாவனையாகவே கொண்டிருக்கிறது. அதற்குள் இருக்கும் படைப்பின் தீவிரத்தை நாவலின் ஒவ்வொரு வாசகனும் சென்றடைவான்.

***

பிரபு மயிலாடுதுறை